வியாழன், 15 டிசம்பர், 2011

சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த ராசா முடிவு



A Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சிகளிடம் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா விரைவில் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா உள்பட 17 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் மீதான சாட்சிகள் விசாரணை, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது.
அப்போது அரசுத் தரப்பில் சாட்சி அளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய ராசா மறுத்து விட்டார். சிபிஐ தனது 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வரையிலும், புலன் விசாரணை முடிந்து விட்டதாக அறிவிக்கும் வரையிலும் சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்த மாட்டேன் என்று ராசா கூறிவிட்டார்.
ஆனாலும் தொலைத்தொடர்பு கொள்கை குறித்து சாட்சிகள் சாட்சியம் அளிக்கும்போது, குறுக்கு விசாரணை செய்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் தனது 3வது குற்றப்பத்திரிக்கையை இரு தினங்களுக்கு முன் சிபிஐ தாக்கல் செய்தது. இதையடுத்து, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய ராசா முடிவு செய்துள்ளார்.மேலும், மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அதிகாரியும் ராசாவின் முன்னாள் தனிச் செயலாளருமான ஆசிர்வாதம் ஆச்சாரி, தொலைத் தொடர்பு கொள்கை குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க உள்ளார். எனவே, அடுத்த வாரம் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த ராசா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடி பணம் கைமாறிய விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழிக்கு தொடர்புள்ளது என்றும், ராசாவுக்கும் கனிமொழிக்கும் இடையே நெருங்கிய அரசியல் தொடர்பு இருந்ததாகவும் சிபிஐயிடம் ஆசிர்வாதம் ஆச்சாரி வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய ராசா திட்டமிட்டுள்ளார்.
சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில் நேற்று ஆசீர்வாதம் ஆச்சாரி, சாட்சி அளிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். ஆனால் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி பாரத் அம்பேர்காரின் சாட்சியம் முடிவடையாததால், ஆச்சாரி சாட்சி அளிக்காமல் திரும்பிச் சென்றார்.
ரிலையன்ஸ் அதிகாரியிடம் விசாரணை முடிந்த பின்னர் ஆசிர்வாதம் ஆச்சாரி சாட்சியம் அளிப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே சிபிஐ தாக்கல் செய்துள்ள 3வது குற்றப் பத்திரிகையின் நகலை அளிக்க வேண்டும் என்று ராசாவின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் நேற்று கோரினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி ஓ.பி.சைனி, அந்த குற்றப்பத்திரிகை உங்கள் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றினால், உறுதியாக குற்றப்பத்திரிகை நகலை வழங்குவேன் என்றார்.
சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிகையில் எஸ்ஸார் குழுமத்தின் உரிமையாளர்களளான அஞ்சுமன் ரூயா, ரவி ரூயா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழுமத்தின் இயக்குனர் விகாஸ் சரப் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: