செவ்வாய், 13 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!
கம்பம் – கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பெருந்திரளான மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து “இதனால் யாருக்கு லாபம்” என்றொரு தலையங்கத்தை தினமணி நேற்று 12.12.2011 எழுதியிருந்தது.
எப்படி இவ்வளவு மக்கள் போராடினார்கள், போலீசாரால் அதை தடுக்க முடியவில்லை என்பதும் தினமணியின ஆதங்கம். முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழக மக்களிடையே இப்படி தன்னெழுச்சியான போராட்டங்கள் வளர்ந்து வருவது குறித்து தினமணி ‘பல’விதங்களில் கவலைப்படுகின்றது.
முதல் கவலை இதை யார் செய்தார்கள் என்பதை விட யாரெல்லாம் செய்திருக்கவில்லை என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று ஜெயா விளம்பரம் கொடுத்திருந்ததை வைத்து இந்த போராட்டத்தை அ.தி.மு.க நடத்தவில்லை என்று நிம்மதி அடைகிறார் தினமணியின் ஆசிரியரான வைத்தி மாமா.

இந்த மக்களை ‘அமைதி’ப்படுத்தச் சென்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களிடம் செருப்படி பட்டதையும், ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும் அவர் படித்திருக்கவில்லை போலும். அடுத்து பிரியாணிக்கும், பாட்டிலுக்கும், காசிற்கும் அழைத்து வரப்படும் அ.தி.மு.க கூட்டம் இப்படி போலீசின் தடியடிக்கு பயப்படாமல் எப்படி போராடியிருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட வைத்தி மாமாவிற்கு தெரியவில்லை.
இதில் ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக எந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் இப்படி மக்களைத் திரட்டி போராடியிருக்க முடியாது என்று உறுதிப்படுத்துகிறது தினமணி. அம்மாவின் விருப்பத்திற்கு மாறாக அ.தி.மு.க தளபதிகள் மட்டுமல்ல, வைத்தி மாமா கூடத்தான் நடந்து கொள்ள மாட்டார் என்றது உலகறிந்த விசயம்தானே?
முதலில் இப்படி மக்கள் லட்சக்கணக்கில் போராட்டத்தை கையிலெடுத்திருப்பது தினமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த போராட்டம் கேரள அரசை எரிச்சலூட்டவும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் பயன்படும் என்பது வைத்தி மாமாவின் கவலை. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட பக்தர்களின் ஆன்மீக அரிப்புதான் தினமணிக்கு முக்கியம் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் பத்திரிகைதானே?
முல்லைப் பெரியாறு விவகாரத்தை பிரச்சினையாக்கி இருமாநில மக்களிடையே முரண்பாட்டை தோற்றுவித்தது கேரள தேசியக் கட்சி அரசியல்வாதிகள்தான். தமிழகத்தின் நியாயமான உரிமையை மறுத்து அரசியல் இலாபத்திற்காக பெருங்கூச்சல் போட்டு மக்களிடையே பயபீதியூட்டி குளிர்காய்வது அவர்கள்தான். காங்கிரசு, சி.பி.எம், பா.ஜ.க முதலான அந்தக் கட்சிகளை கண்டிப்பதற்கு துப்பில்லாத தினமணி இங்கே போராடும் தமிழ் மக்களை கண்டிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?
மாறாக இந்த தேசியக் கட்சிகளுக்கு நல்லதோர் ஒளிவட்டத்தை போட்டு தமிழகத்தில் அவர்களின் குற்றச் செயலை மறைப்பது தினமணிதான். இல்லையென்றால் பா.ஜ.க ராதாகிருஷ்ணனும், காங்கிரசு தலைவர்களும் முல்லைப்பெரியாரில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடும் போது அதற்கு செய்தி என்ற பெயரில் கூச்சமில்லாமல் விளம்பரம் தருவது தினமணிதானே?
அடுத்து இந்தப் பிரச்சினை காரணமாக இருமாநில மக்களும் பாதிக்கப்படுவதாக தினமணி கவலைப்படுகிறது. தமிழகத்திலிருந்து பொருட்கள் வராமல் போகும் போது கேரளாவில் விலைவாசி உயர்ந்துவிடும், அப்படி பொருட்கள் அனுப்பவில்லை என்றால் தமிழக விவசாயிகள் நட்டமடைவார்கள் என்று கண்டுபிடித்து எழுதுகிறது தினமணி.
ஒரு பிரச்சினையில் எது நியாயம், எது அநியாயம் என்று பரிசீலித்து பார்த்து விட்டு, அநீதி இழைத்தவர்கள் தண்டிக்க கோருவதுதான் சரியாக இருக்கும். ஈராக்கில் படையெடுத்து வரும் அமெரிக்காவை எதிர்த்தால் ஈராக்கில் சகஜமான வாழ்வு சீர்குலைந்து விடும், எனவே ஈராக் மக்கள் அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்வது சரி என்று சொன்னால் அது அடிமுட்டாள்தனமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தினமணிக்கும் பொருந்தும்.
கேரளாவுக்கு பொருட்கள் அனுப்பி தமிழக விவசாயிகள் பலனடைகிறார்கள் என்றால் அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முல்லைப்பெரியாறு நீர் அவசியம். அந்த நீர் இல்லாமல், எதிர்காலத்தில் அது வராது எனும் பட்சத்தில் எப்படி உற்பத்த்தி செய்ய முடியும்? ஆக இந்த பிரச்சினை காரணமாக கேரள மக்கள் அடையும் பாதிப்பை விவரித்து அவர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் பீதியை அழிப்பதுதான் ஒரு பத்திரிகையின் கடமையாக இருக்கும். தினமணியின் எக்ஸ்பிரஸ் குழும பத்திரிகைகள் தமது கேரள பதிப்புகளில் அப்படி பிரச்சாரம் செய்யாமல் இங்கு போராடும் தமிழக மக்களை குறிவைப்பது ஏன்?
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியிலேயே வைத்திருப்பதால் அணையின் 4000 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அவர்களின் நலனுக்காக இந்த பிரச்சினையை கேரளா எழுப்புகிறது என்று ஜெயாவின் விளம்பரத்தில் பார்த்து தினமணி கண்டுபிடித்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து கம்பம் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்னரே ஒரு சாதாராண விவசாயியிடம் கேட்டிருந்தால் கூட சொல்லியிருப்பார். இந்த முக்கியமான விசயம், அங்கே விவசாயிகள் அனைவரும் அறிந்திருக்கும் விசயம் கூட தினமணியின் வைத்தி மாமாவிற்கு இவ்வளவு நாட்கள் தெரியவில்லை என்பதும் இந்த இலட்சணத்தில் இவர்களெல்லாம் மக்களுக்கு என்ன எழவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பாதிக்கப்படும் தமிழக, கேரள மக்களைக் காட்டிலும், ”  அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று இறுதியாக தனது கவலை எது குறித்து என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறது தினமணி.
அதாவது தமிழகத்தில் உள்ள பிரிவினை சக்திகள்தாம் இதை ஊதிப்பெருக்குகின்றன, இதை வைத்து இந்திய ஒற்றுமையை சீர்குலைய வைப்பதை செய்கின்றன, மக்கள் அதற்கு பலியாகிவிடக்கூடாது என்பதுதான் தினமணி சொல்ல வரும் செய்தியின் பின்னணி.
இந்திய அளவு பிரச்சினை என்றால் இவர்கள் அது ஐ.எஸ்.ஐ சதி என்பார்கள். தமிழகம் தழுவியது என்றால் பிரிவினைவாதம் என்பார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் யார் என்ன சதி செய்தார்கள், என்பதை விட யார் சதி செய்ய முடியும், முல்லைப் பெரியாறு பிரச்சினை சூடு பிடித்தால் யாருக்கெல்லாம் ஆதாயம் என்று பார்த்தால் கண்டுபிடித்து விடலாமே?
கூடன்குளம் பிரச்சினையை திசைதிருப்பி, போராடிக் கொண்டிருக்கும் மக்களை தளர்வுறச் செய்வதற்கு முல்லைப்பெரியாறு பிரச்சினை சூடுபிடித்தால் அது யாருக்கு ஆதாயம்? நிச்சயம் மத்திய அரசுக்குத்தான். மேலும் இந்திய அரசும், அதன் உளவுத்துறைகளும், இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல. புரூலியாவில் ஆயுதங்களை விமானத்திலிருந்து போட்டு சதி செய்ததாகட்டும், வடகிழக்கில் பல்வெறு தேசிய இனங்களுக்கிடையே போட்டி குழுக்களை ஆரம்பித்து மோதவிட்டதாகட்டும் எல்லாம் இந்திய அரசின் யோக்கியதைக்கு சான்று பகருபவை.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் சில ஆயிரம் ஓட்டுக்களுக்காக இல்லாத பீதியை எழுப்பும் கேரள அரசியல்வாதிகள் பிரவாகம் இடைத்தேர்தலுக்காக இந்த பிரச்சினையை கிளப்பி ஆதாயம் அடைவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது. இவற்றினைத் தாண்டி இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்? இந்திய அரசு, கேரள தேசியக் கட்சிகள், ஜெயலலிதா இம்மூவரும்தான் இதில் ஆதாயம் அடைகின்றனர் எனும் போது தினமணி இவர்களை குறிவைத்து எழுதாமல் சும்மா பிரிவினைவாதம் என்று பீதி கிளப்புவது எதனால்?
இறுதியாக ,”  நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!” என்று தேசபக்தி ஒற்றுமைக்காக சாமியாடுகிறது தினமணி!
ஒரு தேசிய இனத்தின் உரிமையை மறுப்பதின் மூலம் இந்திய ஒற்றுமை எப்படி ஏற்பட முடியும்? முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அனைத்து சட்ட, நீதிமன்ற ஆணைகளை தமிழகம் ஏற்கும் போது கேரளா மட்டும் ஏற்காமல் சண்டித்தனம் செய்யும் போது தமிழகம் என்ன செய்ய முடியும்? இந்திய ஒன்றியத்தில் இருக்கும் தமிழகத்தை பிடித்து வெளியே தள்ளுவதை இந்திய அரசும், கேரள அரசும் செய்வதற்கு தமிழக மக்கள் என்ன செய்ய முடியும்?
மேலும் இந்தியாவில் பாரத மாதாவை பூசையறை படமாக வழிபடுகிறவர்கள்தான் இந்த இந்திய ஒற்றுமை குறித்து கவலைப்படுகிறார்கள். அதிலும் பாரத மாதா சாய்ந்திருக்கும் சிங்கத்தின் பற்களாக இருந்து சிக்கியிருக்கும் ஆடுகளை பதம் பார்ப்பவர்கள்தான் ஓயாது பாரத ஒற்றுமை குறித்து உபதேசம் செய்கிறார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொல்லப்படும் மக்களையும், போராடும் மக்களை ஒடுக்கியும் இந்திய ஒற்றுமையை காக்க நினைக்கும் இவைதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி நமக்கு தேவையில்லை.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!

கருத்துகள் இல்லை: