ஞாயிறு, 13 நவம்பர், 2011

ஆசியாவின் பெரும் நூலகத்தை அழிப்பதற்கு ஒரு சில நிமிடங்களே போதும்.

அமெரிக்க மருத்துவமனையில் அண்ணா அனு மதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது.
டாக்டர் மில்லரை அண்ணா அழைத்தார். ""அறுவைச் சிகிச்சையை ஒருநாள் தள்ளி வைக்க வேண்டும்'' என்றார்.
""என்ன காரணம்?''
""ஒன்றுமில்லை... ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அண்ணா.
மில்லர் வியந்துபோனார். அண்ணாவின் விருப்பப் படியே ஒருநாள் தள்ளி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிகழ்வினை "இந்து' நாளேட்டின் வாசகர் பகுதியில் ஒரு அன்பர் மெய் சிலிர்க்கக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆமாம்... அந்த அறிஞர் பெருமகன் புத்தகங்களை உயிரினும் மேலாக நேசித்தார். மரணம் அவரை நெருங்கி உறவாடிய போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார். அவருக்கு அறிவுப் பசி. அந்தப் பேரறிஞர் மறைந்தாலும் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார். அந்தப் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா வந்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணத் துடித்த அந்த பேரறிவாளன் சிரிக்க வேண்டாமா? அவர் என்றும் புன்முறுவல் பூத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எழும்பியது. இதனைவிட அண்ணாவிற்கு வேறு நினைவுச் சின்னத்தை அமைக்க முடியாது. மாஸ்கோ செல்பவர்கள் அங்குள்ள நூலகம் காணாது திரும்பமாட்டார்கள். அவ்வளவு பெரிய நூலகம். தமிழகத்தில் கட்டை எழுத்துக்கள் தோன்றா காலத்தில் அச்சடிக்கப்பட்ட பழமையான தமிழ் நூல்கள் கூட அங்கே இடம் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான தமிழ் நூல்கள்கூட அங்கே இடம்பிடித்து விடுகின்றன.

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மாஸ்கோ நூலகத்திற்கு ஒப்பானதாகும். இன்னும் சொல்லப்போனால் ஆசியாவிலேயே பெரிய நூலகமாகும். உலகத்தைக் காண உதவும் சாளரம் என்பதே சரியாக இருக்கும்.

அங்கே தினம் சராசரி 1500 பேர் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேர் வருகிறார்கள். அவர்களில் எத்தனை எத்தனை பேர் விஞ்ஞானிகளாக, கணித விற்பன்னர்களாக, படைப்பாளிகளாக உருவாகிறார்கள் என்பதனைப் பின்னர் வரலாறு கூறும்.

உலகப்புகழ் பெற்ற நூலகங்களின் கட்டிட வரைபடங்களை வரவழைத்து கலைஞர் ஆராய்ந்தார். அவைகளைவிட மேன்மையாக இருக்க வேண்டுமே என்று எண்ணி அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை உருவாக்கினார். நாட்டிற்கும் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களால்தான் இத்தகைய அரும்பெரும் சாதனை களைச் செய்ய முடியும்.

இந்தக் கட்டிடம் ஏதோ உலக மொழிகளில் வெளியான நூல்களை அடுக்கி வைக்கும் நூலகம் அல்ல. பல்வேறு கல்விப் பணிகளுக்காகவும், படிப்பதற்காகவும் உருவாகியுள்ள அறிவுக் களஞ்சியம். இங்குள்ள நூல்களைப் பார்த்து பல நீதி அரசர்களும் வழக்கறிஞர்களும் வியந்துபோயிருக்கிறார்கள்.

இளம் வயதிலேயே குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தைத் தூண்டும் பயிலரங்கங்கள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன. இதன் சிறப்புகளை எடுத்துக்கூற வேண்டுமானால் இன்னொரு தனிப்புத்தகம் எழுத வேண்டும். ஒரே வரியில் கூறுவதென்றால் உலகத் தரம் வாய்ந்த அறிவுப் பெட்டகம்தான் அண்ணா நினைவு நூலகம்.

அண்ணாவின் நீங்காத நினைவாக ஆசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக உருவாகியிருக்கும் அந்த வளாகத்தை உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப் போகிறோம் என்று முதல்வர் செல்வி ஜெயலலிதா அறிவித்தி ருக்கிறார். கொடுமையான அதிர்ச்சி தரும் சோகச் செய்தி.

அண்ணாவின் பெயரால் அமரர் எம்.ஜி.ஆர். துவக்கிய அரசியல் இயக்கத்திற்குத் தலைமை தாங்கும் அவரா இந்தக் காரியம் செய்கிறார் என்பதனை நம்ப முடியவில்லை. ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்த சில நாட்களிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்க முயன்றார். அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே கல்வி என்ற தத்துவக் கோட்பாட்டிற்கு வித்தூன்றியவர் தந்தை பெரியார். அவர் ஊன்றிய நல்ல வித்துதான் ஆல விருட்சமாக வளர்ந்தது. அனைத்துக் கட்சியினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்தக் கல்வித் திட்டத்தை கலைஞர் செயல்படுத்தினார்.

ஒருசிலருக்குத்தான் உயர்கல்வி என்று ஊறிப்போனவர்கள் சமச்சீர் கல்வியை விரும்பமாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே கல்வி என்பதுதான் சமூக நீதி. அந்த சமூக நீதிக்கு சாவுமணி அடிக்க முயன்றவர்கள் வெற்றிபெறவில்லை. அந்தச் சமத்துவக் கல்வித் திட்டத்தை உடனே செயல்படுத்துக என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது.

சமச்சீர் கல்வியை முடக்க முயன்றதன் மூலம் அன்றைக்கு தந்தை பெரியாருக்கு சோதனை. இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தைச் சிதைக்க முயல்வதன் மூலம் அண்ணாவிற்கே சோதனை. எண்ணிப் பார்த்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது.

தலைநகரின் மையப்பகுதியில் அண்ணா சுட்டுவிரல் நீட்டிக் காட்டும் இடத்தில் புதிய சட்டமன்ற வளாகம் எழுந்தது. எத்தனையோ பாராளுமன்றக் கட்டிடங்களை ஆராய்ந்து -புயலே வீசினாலும் அசைக்க முடியாத வடிவில் அந்த வளாகம் எழும்பியது. ஆட்சிக்கு வந்ததும் அதனை உயர்தர சிகிச்சை தரும் மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தனர். முதல்வரின் இந்த அறிவிப்பை அவருடைய கூட்டணிக் கட்சிகள் கூட வரவேற்கவில்லை.

இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகளுக்கு சிகிச்சை தரும் உயர்தர மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

அன்னையர்கள் மீதும் மழலைகள் மீதும் அவர் கொண்டுள்ள பற்றும் பாசமும் மெச்சத்தக்கதுதான். அதற்கான நவீன மருத்துவமனைகள் அவசியம்தான்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை சேலத்தில் கலைஞர் உருவாக்கினார். அந்த மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானது. ஒரு ஆண்டு காலமாக இயங்கிய அந்த மருத்துவமனையை அரியணையில் அமர்ந்ததும் அ.தி.மு.க. அரசு மூடிவிட்டது. அதற்கு என்ன காரணம் என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது.

இப்படி ஒரு பக்கம் நன்கு செயல்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை மூடுகிறார்கள். இன்னொரு பக்கம் வரலாற்றில் என்றும் நிலை நிற்கப் போகும் சட்டமன்றக் கட்டிடத்தையும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகக் கட்டிடத்தையும் மருத்துவமனையாக்கப் போகிறோம் என்கிறார்கள்.

ரோஜா தோட்டம் போடுவதற்கு பலநாள் வியர்வை சிந்த வேண்டும். அதனை அழிப்பதற்கு ஒரு சில நிமிடங்களே போதும்.

பொதுவாக மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டிடங்கள் தேவைக்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்படுகின்றன. பள்ளிக் கட்டிடத்தை திரை அரங்காக்க முடியுமா? திருமண மண்டபத்தை மருத்துவமனையாக்க முடியுமா? ஆனால் ஒன்பது மாடிகளாக எழும்பியிருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் மருத்துவ மனையாக்குவோம் என்கிறார்கள்.

கலைஞர் எழுப்பினார் என்பதற்காகவே இன்றைக்கு உலகத் தரம் தொட்ட ஒரு நூலகத்தை மாற்றுவோம் என்கின்றனர். அவர்கள் கலைஞரின் பணிக்கு மூடுதிரை போடுவதாக எண்ணிக் கொண்டு அண்ணாவையே இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்கள்.

சென்னை அரசினர் மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். அதனைத் திறந்து வைத்தவர் அடுத்து வந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா.

சென்னை கோயம்பேடு வாகன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். அதனைத் திறந்து வைத்தது அடுத்து ஆட்சியில் அமர்ந்த செல்வி ஜெயலலிதா.

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது தமிழகத்தின் ஐம்பதாண்டு காலக் கனவு. அந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தவர் கலைஞர். நாளை அந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கப் போகிறவர் செல்வி ஜெயலலிதா.

தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய- அதாவது மின் உற்பத்தித் திட்டங்களை கலைஞர் துவக்கி வைத்திருக்கிறார். நாளை அவைகளைத் தொடங்கி வைக்கப் போகிறவர் இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா.

முந்தைய ஆட்சி துவக்கி வைத்த திட்டத்தை அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் நிறைவு செய்வதுதான் மரபு. அப்படித்தான் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை இன்னும் விரிவாக்கி இருக்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்னும் விரிவடைவதற்கு ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அந்தத் திட்டங்களை இன்றைய அ.தி.மு.க. அரசு செயல்படுத்து வதுதான் அரசியல் நாகரீகம். அதனை விடுத்து முழு அளவில் இயங்கிக் கொண் டிருக்கும் ஒரு நூலகத்தை, அறிவுச் சோலையை இடம் மாற்றம் செய்வோம். அதற்காக இன்னும் ஒரு 200 கோடி கொட்டி புதி தாகக் கட்டிடம் கட்டுவோம் என்பது என்ன நியாயம்? அது அரசியல் தர்மம் அல்ல.

சென்னை நேரு விளையாட்டு அரங்கம் செல்வி ஜெயலலிதா கட்டியதுதான். அதற்காக அடுத்து முதல்வராக வந்த கலைஞர் அதனை வழிப் போக்கர்களின் சத்திர மாகவா மாற்றினார்? இல்லை. அதே அரங்கில் தான் அவர் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அதுதான் அரசியல் பண்பு. அரசியல் கண்ணியத்தைக் காயப்படுத்தக் கூடாது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர்கோயில் கட்டினார்கள். அதனால் பாபர் மசூதி மக்களின் மனங்களிலிருந்து மறைந்து விடவில்லை. அதேபோல புதிய சட்டமன்றக் கட்டிடத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்தினாலும் அண்ணா நூலக கட்டிடம் மருத்துவமனையானாலும் கலைஞரின் பெயர் மறையப் போவதில்லை.

சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் நிற்கும் வள்ளுவர் வரை இதற்கு இடைப்பட்ட தூரங்களில் ஆங்காங்கே எழும்பியிருக்கும் மணிமண்டபங் களெல்லாம் கடல் உள்ளளவும் கலைஞரின் புகழை பரப்பிக் கொண்டிருக்கும்.

அதேபோன்று செல்வி ஜெயலலிதாவும் சாதனைகள் செய்ய வேண்டும் என்றுதான் நமது விருப்பம். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னராவது மாவட்டம் தோறும் அமரர் எம்.ஜி.ஆர். நினைவாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளை எழுப்புங்கள். இது போதாது அன்னை சத்யா நினைவாகவும், அன்னை சந்தியா பெயராலும் குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவமனைகளை துவக்குங்கள்.

சரித்திரத்தில் இடம்பெறத் தக்க இன்னும் எத்தனையோ சாதனைகளை முதல்வரால் செய்ய முடியும். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில்- அரசினர் மருத்துவமனையை அடுத்து மத்திய சிறைச்சாலை இருந்த இடம். புதிது புதிதாக சிறப்பு மருத்துவமனைகள் அமைப் பதற்குச் சரியான மைதா னம்- இருப்பதை இடித்து இன்னொரு கட்டிடம் கட்டு வது பெருமை சேர்க்காது. பொட்டல்வெளிகளில் புதி தாய் எழும்பும் பயன்தரும் கட்டிடங்கள்தான் பெருமை கூட்டும்.

அண்ணா சாமானியர். சமுதாயத்தின் அடித்தளத் திலிருந்து எழுந்து வந்த சூரியக்கதிர். நெருங்கலாமா? பாவம், அவர் நினைவாக கோட்டூர்புரத்தில் எழும்பி யிருக்கும் ஆசியாவின் மிகப் பெரும் நூலகத்தை அப்படி யே விட்டு விடுங்கள்.

thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை: