புதன், 16 நவம்பர், 2011

ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!

2008-ஆம் வருடம்  பெரம்பலுர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார் பாளையம், கடுவனுர் கிராமத்தை சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அனைவருக்கும் கண் பார்வை முழுமையாக பறிபோனது .மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தியை சொல்லாமல் சொட்டு முருந்தும், வெள்ளை மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.
விஷயம் வெளியே தெரிந்தவுடன் தமிழுக அரசு அவசரமாக மருத்துவ  விசாரணை  குழு அமைத்து இழப்பீடாக தலா 1 லட்சம் கொடுத்து பிரச்சினையை சுமுகமாக மூடி விட்டது. அன்றைக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து  உ்ணமைகள திரட்டி  மருத்துவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதிய இழப்ீடு ஜோப் மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பினோம். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட ஏழைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசின் செவிட்டு காதுகளுக்கு உரைக்க வில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜீ சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் ஆரம்பம் முதல் இந்த வழக்கை நடத்தி வருகிறார். முதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மற்றொரு கண்ணை சிகிச்சை அளிக்க உயர் மட்ட மருத்துவர்கள் குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது. இரத்த அழுத்தம் உள்ளது, சர்க்கரை உள்ளது, பல் வலி இருக்கிறது, தலை ஆடுகிறது என பல பேர் கண்புரை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்று திருப்பி அனுப்பட்டார்கள். எழும்பூர் கண் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு நீண்ட நாள் வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் ஒரு கண் முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் மற்றொரு கண் மங்கலான நிலையில் ஊட்டச்சத்து இல்லாமல் வயிரை மட்டுமே நிரப்பிய ஏழைகளின் முழு உருவ புகைப்படத்துடன் தலைமை நீதியரசருக்கு, “நடைபிணமாக வாழும் நாங்கள் பிணமாவதற்குள் வழக்கின் தீர்ப்பை தெரிந்து கொள்ள வேண்டும், எனவே எங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என மனு அனுப்பினோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடினோம்.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தலைமை நீதியரசர் சி.பி.ஜ க்கு மாற்றி  உத்திரவிட்டார். இந்த மனுவை ‌விசா‌ரி‌த்து தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ‌பிற‌ப்‌பி‌த்த உத்தர‌வி‌ல்,
“பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரும் நிதியுதவியுடன் இந்தத்திட்டம் மாவட்ட வாரியாக மாவட்ட கண்பார்வை குறைபாடு கட்டுப்பாட்டு சங்கம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 2008-09-ஆம் ஆண்டுக்காக ரூ.23.25 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது. திட்டத்தை செயல்படுத்த ஜோசப் கண் மருத்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அனுமதி அளித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கிய ரூ.23.25 கோடியில் இருந்து, இந்த முகாமுக்கான செலவுக்காக மட்டும் ஜோசப் மரு‌த்துவமனைக்கு ரூ.1.15 கோடி தரப்பட்டு உள்ளது. இதை பார்க்கும்போது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த தொகை எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை எப்படி அரசு கண்காணிக்கிறது?  என்பதும் தெரியவில்லை.”
“இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை பார்க்கும்போது, மாநில அரசு அதிகாரிகள் பலர், ஜோசப் மரு‌த்துவமனைக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அனுமதி அளிக்கப்படுவதில் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. எனவே இலவச கண் முகாம் என்ற போர்வையில் இந்தப் பணத்தை சிலர் தவறான வழியில் கையாண்டிருக்கலாம் என்பதில் முகாந்திரம் உள்ளது.”
“மேலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஜோசப் மரு‌த்துவமனை தகுதியானதல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, பெரம்பலூர், அரியலூர் பகுதிகளிலும் முகாம் நடத்துவதற்கு இந்த மரு‌த்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் எந்த சூழ்நிலையின் கீழ் அனுமதி அளித்தார்? என்பது புரியாத புதிராக உள்ளது.”
“எனவே ஆவணங்களையும் குற்ற முகாந்திரத்தையும் பார்க்கும்போது, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பதே நல்லது என்று முடிவு செய்கிறோம். 65 பேருக்கு கண் பார்வை போனதற்கு மரு‌த்துவ‌ர்கள், அதிகாரிகளை பொறுப்பாளிகளாக்க வேண்டும். அந்த பொறுப்பாளிகள் மீது குற்ற வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்ய வேண்டும்.”
“மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் பெரும்பகுதி இந்த மரு‌த்துவமனைக்கு எந்த சூழலில் வழங்கப்பட்டது என்பதையும், அந்த பணம் எப்படியெல்லாம் செலவிடப்பட்டது என்பதையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.” இதுதான் நீதிபதிகள் பிறப்பித்த உத்திரவு.
இந்த உத்திரவை எதிர்த்து ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நேற்று 15-11-11  மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ.தரப்பில் ஜோசப் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். நெல்சன் ஜேசுதாசன், துணை இயக்குனர் கே.அவ்வை, தலைமை நிர்வாகி.ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர்கள் அசோக், சௌஜன்யா, தென்றன், பொன்னுதுறை,ஆகியோர் மீது 37 r/w 325 இ.த.ச.படி (கொடுங்காயம் விளைவித்தல் ) குற்றப்பத்திரிக்கை திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அறிவித்தனர். தலைமை நீதியரசர் 66 பேர் கண் பார்வை பறி போனதற்கான குற்றம் நடந்துள்ளது. அதற்கான சாட்சிய முகாந்திரம் உள்ளதால் இடைக்கால நிவாரணமாக தலா ஒரு லட்சம் இழப்பீடு தரவேண்டும் என உத்திரவிட்டுள்ளார் (மொத்தம் 66 லட்சம்). இறுதி விசாரனணயின்போது இழப்பீடு எவ்வளவு என்பதை முடிவு செய்யலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்திய மருத்துவ துறை வரலாற்றில்  தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். தவறான சிகிச்சை அளித்த பின்பும்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், (தலைவர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம்) அரசு மருத்துவர் , ஜோசப் மருத்துவமனைக்கு அதற்கான தொகையை கொடுத்துள்ளனர். சி.பி.ஐ., மருத்துவர் பிரபு மற்றும் ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துறைத்துள்ளது.
ஏழைகளுக்கும் இதுபோல் அரிதாக சில நீதிகள் கிடைப்பதுண்டு. வழக்கு என்பது டைப்படித்த காகிதம் அல்ல அதற்கு உயிர், உணர்வு, அரசியல், போரட்டம், என பல பரிமாணங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தினோம். உணர்த்துவோம்.  முழுமையான நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
_______________________________________________________________
-          மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: