வியாழன், 17 நவம்பர், 2011

ஆவின் பால் விலை ரூ.6.25 உயர்கிறது-இனி லிட்டர் 24 ரூபாய்!!


Aavin Milk
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுவரை 1 லிட்டர் ரூ.17.75க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாய்க்கு விற்கப்படும்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள விலை உயர்வு பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:
பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் ஏற்கெனவே பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு, அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின் ஜெயா டிவியில் உரையாற்றிய அவர் பல்வேறு விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

ஆவின் நிறுவனத்தின் நிலைமையும் முந்தைய திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் மோசமடைந்துவிட்டது. எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2006ம் ஆண்டு வரை லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத துர்ப்பாக்கியமான நிலையில் ஆவின் நிறுவனம் உள்ளது. கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் சுமார் ரூ. 4 அளவுக்கு ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, 22 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம், தனது கொள்முதலை குறைத்துக் கொள்ள வேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் கொடுப்பதற்காக எனது தலைமையிலான அரசு மாதா மாதம் ரூ. 17 கோடி அளவுக்கு ஆவின் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களை விட, ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் அடையும் பயனை விட இடைத் தரகர்கள் அதிக அளவில் பயன் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் ஆவின் நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும். தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் வழங்கும் பால் கொள்முதல் விலையை விட அதிக விலையினை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில், 22 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே தற்போது ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.

தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் போது, ஆவின் நிறுவனம் குறைவாக கொடுப்பது நியாயமானதல்ல.

எனவே, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் ஏற்கெனவே பெருத்த நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு, அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்த்தப்பட்ட பின்பும் வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை குறைவாகவே இருக்கும். மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள விலையை விடவும் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா

கருத்துகள் இல்லை: