வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்? வினவு"
மறைக்கும் காவிப் புழுதி;
”நமது நாட்டில் உள்ள நகரங்களுக்கும் சாலைகளுக்கும் சிறப்பான வரலாற்று இடங்களுக்கும் முகலாய ஆட்சிக் காலத்திலும், கிறித்தவ ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தற்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு சென்னை என்ற பெயரைப் பெருமிதமாக நினைக்கிறோமே, அதுபோல பிரிஞ்சி முனிவர் தவம் செய்த இடம் ஆகையால் பறங்கிமலை என்பதை மாற்றி ‘பிரிஞ்சி மலை’ என்று அறிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்து மக்களின் கருத்திற்கு மதிப்பளித்தார். ஆனால் 1997 ஜனவரி முதல் வாரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அந்தக் குன்றுக்கு தாமஸ் என்று பெயரிட்டு இந்துக்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். தாமஸ் என்பது தமிழ்ப் பெயரில்லை. அவர் இந்தியாவிற்கு வந்தாரா என்பதே விவாதத்திற்குரிய விசயமாக இருக்கிறது. அலகாபாத் என்ற பெயர் முகலாயர் ஆட்சியில் திணிக்கப்பட்டது. உண்மையான பெயர் பிரயாகை ஆகும். அகமதாபாத் கர்ணவதி எனவும், ஹைதராபாத் பாக்யா நகர் என்றும் மாற்றப்பட வேண்டும். எனவே நகரங்கள், சாலைகள், சிறப்பான வரலாற்று இடங்கள் ஆகியவற்றிற்கு முன்பிருந்த பண்டைய பெயர்களை மாற்றி வைக்க வேண்டும்.” - ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’
இந்து முன்னணி வெளியீடு – பக்கம் 28.காலனிய ஆட்சியில் முக்கிய நகரமாக உருவான சென்னையில் இராணுவ வீரர்கள் குடியிருந்த இடமே இன்றைய ‘பறங்கி மலை’. இராணுவ கண்டோன்மென்ட் என்றழைக்கப்படும் இப்பகுதியில் அன்று வெள்ளையர்களே நிறைந்திருந்தனர். அவர்களைப் ‘பறங்கியர்கள்’ என்று அழைக்கும் மக்களின் வழக்கிலிருந்து ‘பறங்கி மலை’ என்ற பெயர் நிலை பெற்றது.
மற்றபடி வெள்ளையர்களை நேரில் பார்த்துப் பழகிய அளவுக்கு பிரிஞ்சி போன்ற முனிவர்களையோ, தவச்சாலைகளையோ பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘பிரிஞ்சி’ முனிவரைப் போலன்றி, தாமஸ் என்ற ஏசுவின் சீடர் வந்ததற்கும் அவரது தொண்டுகளுக்கும் சான்றுகளிருக்கின்றன. 100-க்கு 99 மலைகள் பார்ப்பனப் புரட்டுக் கதைகள், தெய்வங்களது பெயரைத் தாங்கியிருக்கும்போது, ஒரு குட்டி மலை ஏசுநாதரின் சீடரான தாமஸ் பெயரைத் தாங்கியிருப்பதில் தவறில்லை. இந்நாட்டில் மதப்பெயர் அனைத்தையும் நீக்க வேண்டும் என முடிவெடுக்கும் போது தாமசையும் மாற்றலாம்.
தென் தமிழகத்தில் காய்கறி, சோறு அடங்கிய கலவையைக் கூட்டாஞசோறு என்று அழைப்பர். அதையே ‘பிரிஞ்சி’ என்று சென்னையில் அழைக்கிறார்கள். ஏதோ தீவனத்திலாவது பிரிஞ்சி முனிவர் பெயர் வாழ்கிறதே என்று இந்து மதவெறியர்கள் அமைதி அடையட்டும்.
வாழ்விடங்களுக்கும், இயற்கைக்கும் உழைக்கும் மக்கள் சூட்டிய பொருட் செறிவும், இலக்கிய நயமும் கொண்ட பெயர்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டன. உடமை வர்க்கங்களின் கையில் அதிகாரம் குவியக் குவிய இத்தகைய பெயர்கள் மாற்றப்பட்டு அவர்களின் நாமகரணங்களைத் தாங்கி ஆதிக்கத்தின் கௌரவச் சின்னங்களாயின. இந்த உலக நடைமுறை இந்தியாவுக்கும் பொருந்தும். ஆகையினால் பெயர் மாற்றம் வேண்டுமென்றால் பார்ப்பனியம் திணித்திருக்கும் சமஸ்கிருதப் பெயர்களைத்தான் முதலில் மாற்ற வேண்டும். அவைதான் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடுகளை அழித்து ஆதிக்கத்தின் சின்னங்களாகத் துருத்தி நிற்கின்றன.
ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், விருத்தாசலம் என்று தமிழகத்தில் மட்டும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றப்பட்ட பெயர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அடுத்து காலனிய ஆட்சியிலிருந்து இன்று வரை – நகரமயமாக்கம் அதிகரிப்பதற்கேற்ப ஆதிக்க சாதியினரின் பெருமிதங்கள் தெருப்பெயர்களாக மாறி இருப்பதையும் ஒழிக்க வேண்டும். மேலும் வெள்ளையர்கள் ஆட்சியில் இங்கிலாந்தின் அரசர்கள் – ராணிகளின் பெயர்கள் சூட்டப்பட்டவையும் மாற்றவேண்டும். காரணம் அவர்கள் ‘கிறித்தவர்கள்’ என்பதால் அல்ல, காலனீய ஆதிக்கவாதிகள் என்பதால்தான் கூறுகிறோம்.
அதேசமயம் முகலாயப் பண்பாடு, பார்ப்பனியப் பண்பாட்டைப் போன்றதல்ல. ஏனைய ‘இந்து’ அரசர்கள் ஆட்சியைப் போன்றதுதான் முகலாய மன்னர்களின் ஆட்சியும். சாதிரீதியாகப் பிரித்து வைத்துக் கொடுமைப்படுத்திய பார்ப்பனியத்தின் சமூக ஆதிக்கம் முகலாயர்களின் பண்பாட்டில் இல்லை. எனவே அவர்கள் சூட்டிய பெயர்களை மாற்றத் தேவையில்லை. மேலும் வரலாறு, கல்வி, இசை, கட்டிடக் கலை, இலக்கியம் போன்றவற்றில் முகலாயர்களின் பங்கில்லாமல் இன்றைய இந்தியா இல்லை.
வேண்டுமென்றால் ‘தாஜ்மகாலை’ இந்துக்கள் யாரும் பார்க்கக் கூடாது, கஜல் இசையை இந்துக்கள் பாடவோ, கேட்கவோ கூடாது, தந்தூரி – பிரியாணி உணவுகளை இந்துக்கள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்ற இந்து முன்னணி கோரிப் பார்க்கட்டும்.
வெள்ளையர்கள் வந்தவுடன் டர்பன் கட்டி, கோட்டு போட்டு, ஆங்கிலம் கற்று அண்டிப் பிழைத்து முதலில் சோரம் போனவர்கள் பார்ப்பன மேல் சாதியினர்தான். பக்திப் பழங்களான பல ‘இந்துத்’ தரகு முதலாளிகள் பலரும் அன்றைய ஆங்கிலேய நிறுவனங்களை வாங்கி அதே ‘கிறித்தவ’ப் பெயரில்தான் இன்றும் தொழில் நடத்துகின்றனர். ஸ்பென்ஸர், சிம்சன், பிரிட்டானியா, ராலீஸ், லேலண்ட் போன்ற அத்தகைய இந்துத் தரகர்களிடம் பெயரை மாற்றச் சொல்லி இந்து முன்னணி போராட்டம் நடத்துமா?
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக