புதன், 16 நவம்பர், 2011

ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!

“மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு”  இது நேற்றைய (15.11.2011) தினமணியின் தலைப்பு செய்தி. பக்கத்தை திருப்பினால், மூணாவது பக்கத்தில் காவல் துறைக்கு 34 புதிய திட்டங்கள் என்று இருந்தது. அம்மாவின் ராசி நெம்பர் 7 ஆக மாறிவிட்டது போலிருக்கிறது. 0 ஆக மாறாதவரை கவலை இல்லை. அது கிடக்கட்டும். திட்டங்களுக்கு வருவோம்.
அண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா? இதே வேகத்தில் போனால் அடுத்த சில நாட்களிலேயே அன்புச் சகோதரர் மோடியின் குஜராத்தை அம்மா விஞ்சிவிடுவார் போலிருக்கிறதே என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.
“பெரியகுளம் – கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.
“காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
“கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதுக்குப் பேரெல்லாம் திட்டமாய்யா? இதை திட்டம்னு எழுதிக்கொடுத்திருக்கானே அவனெல்லாம் ஐஏஎஸ் ஆப்பீ..சரா என்று நாம் நினைக்கலாம்.
ஆப்பீசர் பிரச்சினை ஆப்பீசருக்குத்தான் தெரியும். கலெக்டர்கள் மாநாடு முடிஞ்சு எல்லாரும் கிளம்பற நேரத்தில “என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கூட்டுனா 7 வர மாதிரி அறிவிப்பு வெளியிடணும்”னு ஜோசியர் கிட்டேர்ந்து உத்தரவு வந்திருக்கும். சரி சீக்கிரம் திட்டத்தை தயார் பண்ணுங்கப்பான்னு உத்தரவு போட்டிருப்பார் தலைமைச் செயலர்.
அரை மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தலா 100 புதிய திட்டங்களை தரவேண்டும் என்று திட்ட இலக்கு தீர்மானித்திருப்பார்கள். “கலெக்டர் ஆபீசுக்கு ஒட்டடை அடிப்பது, தாலுகா ஆபீசுக்கு சுண்ணாம்பு அடிப்பது, டவாலியின் மீசைக்கு டை அடிப்பது” உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்கள் மாவட்டம் தோறும் வந்து குவிந்திருக்கும். எல்லாமே நல்ல நல்ல திட்டங்களாக இருந்தாலும், திட்டங்களை ஆயிரக்கணக்கில் அறிவித்தால் மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதுடன், அவற்றை வெளியிடுவதற்கு பேப்பர் செலவும் ரொம்ப அதிகமாகும் என்பதை தினமணி ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருப்பார். எனவே எல்லாவற்றையும் வடிகட்டி 43 திட்டங்களை மட்டும் வெளியிட்டிருப்பார்கள்.
அடுத்தது காவல்துறை. காவல் துறைக்காக முதல்வர் அறிவித்திருக்கும் 34 புதிய திட்டங்களில் முதல் திட்டம் இது.
“பெண்கள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட பலரும் காவல் நிலையங்களுக்கு வரும் போது அவர்கள் அமர்வதற்கு வசதி இல்லை. எனவே, ஆயிரத்து 492 காவல் நிலையங்களுக்கு ரூ.1 கோடி செலவில் தலா 10 பிளாஸ்டிக் இருக்கைகள் வழங்கப்படும். இது, நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படும் திட்டமாகும்.”
போலீசு ஸ்டேசனுக்கு மக்கள் போனால் உட்கார வைப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் என்று நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா? புரட்சித்தலைவி சிந்தித்திருக்கிறார். போலீசு அதிகாரிகள் விரும்பினாலும், அப்படி ஒரு மரியாதையை குடிமக்களுக்கு அவர்களால் வழங்க முடியவில்லையே ஏன், என்று ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். தேவையான நாற்காலிகள் ஸ்டேசனில் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை இந்தியாவிலேயே முதலாவதாக புரட்சித்தலைவிதான் கண்டு பிடித்திருக்கிறார். கண்டு பிடித்ததோடு மட்டுமின்றி, நாற்காலிகளை வழங்கும் திட்டத்தையும் உடனே அறிவித்து விட்டார். இந்திய துணைக்கண்டத்தில் போலீசு நிலையத்திலேயே நாற்காலி போட்ட முதல் மாநிலம் தமிழகம்தான் என்பது மட்டுமல்ல, உலகத்திலேயே போலீசு ஸ்டேசனில் பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
புரட்சித் தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளை, எஸ்.ஐ இன் மேசைக்கு எதிரில் போடுவார்களா, அல்லது லாக் அப்புக்கு உள்ளே போடுவார்களா என்பது தெரியவில்லை.
எப்படியானாலும் இந்த நாற்காலி திட்டம் ஒரு பல நோக்குத் திட்டம் என்பதை மறுக்க முடியாது. வாரம் இரண்டு லாக் அப் கொலைகள் என்று இந்தியாவிலேயே முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது தமிழகம். குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைத்து விசாரிப்பதற்கு மட்டுமின்றி, தேவைப்பட்டால் அவர்களைத் தூக்கித் தொங்க விடுவதற்கும் இந்த நாற்காலிகள் போலீசு அதிகாரிகளுக்குப் பயன்படும்.
போலீசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் இரு திட்டங்களும் இங்கே குறிப்பிடத்தக்கவை.
“சாலை விபத்துகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்”.
“விபசாரத்தில் இருந்து மீட்கப்படுவோரின் வாழ்வாதரம் மேம்படவும், நிவாரணம் பெறவும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்”
இவற்றை காவல்துறைக்கான புதிய திட்டமாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்று வாசகர்கள் குழம்பக்கூடும். விபத்தில் உயிரிழப்போரும் விபச்சாரத்திலிருந்து மீட்கப்படுவோரும் காவல்துறையினர் என்ற பொருளில் இத்திட்டத்தை நிச்சயம் அறிவித்திருக்க மாட்டார்கள். மேற்படி தொகைகளை முழுமையாகவோ, பகுதியாவோ விழுங்க விருப்பவர்கள் காவல்துறையினர்தான் என்பதனால் இவற்றையும் காவல்துறைக்கான நலத்திட்டப் பட்டியலில் எதார்த்தமாக சேர்த்துவிட்டார்கள் போலிருக்கிறது.
இருப்பினும் “லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். ஆகவே, இனி காவல் நிலையத்துக்கு செல்லும் குடிமக்கள், உள்ளே நுழைந்தவுடன் முதல்வரின் பிளாஸ்டிக் நாற்காலி எங்கே என்று கேட்டு அதில் படையப்பா ஸ்டைலில் அமர்வதுடன், லஞ்சம் கேட்டால் முதல்வரின் மேற்படி வசனத்தைப் பேசிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: