சனி, 19 நவம்பர், 2011

நான் ஒருமுறை கூட விலைகளை உயர்த்தவே இல்லையே!


Karunanidhi
சென்னை: பஸ் கட்டணம், பால் விலை ஆகியவை தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட உயர்த்தப்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பேருந்து கட்டண உயர்வு
ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு வரியை சுமத்திவிட்டு; இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார். அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பையேற்றபோது சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்றிருந்த கட்டணத்தை ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

முன்பெல்லாம் ரெயில் கட்டணம் அதிகமாகவும், பேருந்துக் கட்டணம் குறைவாகவும் இருக்கும். ஆனால் தற்போது பேருந்து கட்டணங்கள், ரெயில் கட்டணத்தைவிட கூடுதலாக்கப்பட்டுள்ளன.

பால் விலை உயர்வு ஏன்?

பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அறிக்கையிலே ஒப்புக் கொண்டுள்ள ஜெயலலிதா, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு கொள்முதல் விலையை ரூ.18 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தியிருக்கிறார். எருமைப் பாலுக்கு ரூ.26 லிருந்து ரூ.28 ஆக உயர்த்தியிருக்கிறார். கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தியிருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.13.45லிருந்து ரூ.15.64 ஆகவும், எருமைப் பால் விலையை ரூ.18 லிருந்து ரூ.23 ஆகவும் - அதன்பின் 5-1-2011-ல் பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.15.64 லிருந்து ரூ.16.64 ஆகவும், எருமைப் பால் விலையை ரூ.23 லிருந்து ரூ.25.20 ஆகவும் - 16-2-2011 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.16.64லிருந்து ரூ.18 ஆகவும், எருமைப்பால் விலையை ரூ.25.20-லிருந்து ரூ.26 ஆகவும் அதிகப்படுத்திக் கொடுத்த போதிலும், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ.17.75 என்பதிலிருந்து ஒரு பைசா கூட உயர்த்தவில்லை.

மின்கட்டண உயர்வு

மூன்றாவதாக மின் கட்டணத்தையும் உயர்த்தக்கோரி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது ரூ.11,700 கோடி அளவிற்கு வருவாய் வரக்கூடுமென்று எதிர்பார்க்கிறார்கள். மின் கட்டணத்தை எந்த அளவிற்கு உயர்த்தப் போகிறார்கள் என்றால், யூனிட்டுக்கு 25 பைசாவோ, 30 பைசாவோ அல்ல; யூனிட்டுக்கு ஒன்றரை ரூபாய் கட்டணம் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

எப்படி சமாளிப்பார்கள்?

மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, இதற்கெல்லாம் காரணம் கடந்த கால தி.மு.க. ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத் தான் என்று பழியை நம்மீது போட்டிருக்கிறார்.

பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழை, எளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை.

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைக் கொடுமைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்தக் கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள்தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன்.

ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு ரூ.500 அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: