வியாழன், 17 நவம்பர், 2011

மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!


கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை  விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.  இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், “”முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக” உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !இது அப்பட்டமான பொய் என்பதற்குப் பல நேரடியான சாட்சியங்கள் உள்ளன.  சென்னை போலீசார் முத்துவைக் கைது செய்து, இத்திருட்டு சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக முத்துவின் சொந்த ஊரான கடலூருக்கு அவரை அழைத்துவந்தபொழுதே, “”அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்ததாக”க் கூறுகிறார், அம்பிகா என்ற பெண்.  முத்து இரத்தம் வடிந்த நிலையிலேயே கடலூருக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதை முத்துவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர்.  வழக்குரைஞரும் முத்துவின் உறவினருமான நாகசுந்தரம் என்பவரும், “”முத்துவின் தலையிலும் காதுகளுக்குக் கீழேயும் காயங்கள் இருந்ததையும், அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததையும் அவரது கையின் புஜப்பகுதி வீங்கிப் போயிருந்ததோடு, உடலெங்கும் காயங்கள் இருந்ததையும் தான் பார்த்ததாக”ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இவர்களையெல்லாம்விட மிகவும் நம்பத்தகுந்த சாட்சியம் ஒன்று உள்ளது.  “”மயக்கமாக வருவதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும்” முத்து கூறியவுடனேயே, அவரை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக போலீசார் கூறியுள்ளனர்.  அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான எஸ். ஆனந்தகுமார், “”முத்துவை இறந்துபோன நிலையில்தான் போலீசார் தூக்கி வந்ததாகவும், அவரது தலையிலும் புஜப் பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்ததை எமது மருத்துவர்கள் பார்த்ததாகவும்” டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறியிருக்கிறார்.
25 பவுன் நகை, 12,000 ரொக்கப் பணத்தைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முத்துவைக் கைது செய்து, ஓரிரு நாளிலேயே அவரைக் கொன்று “உடனடி நீதியை’ வழங்கியிருக்கிறது, ஜெயாவின் போலீசு.  அதேசமயம், தான் முதல்வராக இருந்த சமயத்தில் 66 கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சுருட்டியிருக்கிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெயாவை ஒரேயொருமுறை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்குள்ளாகவே பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன; முத்துவை இரத்தம் சொட்டச்சொட்ட  கடலூருக்கு இழுத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறது, தமிழக போலீசு.  ஆனால், 66 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஜெயாவோ சாட்சிக் கூண்டில் ஒரு குற்றவாளியைப் போல ஏற்றி நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படவில்லை.  ஜெயா, அரசு மரியாதை  பாதுகாப்போடு, நீதிபதிக்கு எதிரே ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்துகொண்டு, நீதிபதியின் கேள்விகளுக்கு அலுங்காமல் குலுங்காமல் பதில் அளித்திருக்கிறார்.  முத்து திருட்டுப் பட்டத்தோடு இறந்து போய்விட்டார்.  ஜெயாவோ முதல்வர் என்ற பந்தாவோடு வலம் வருகிறார்.
· · ·
மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !முத்துவின் அகால மரணம், ஜெயா மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், மிகவும் குறுகிய காலத்திற்குள் நடந்துள்ள எட்டாவது கொட்டடிக் கொலையாகும்.  அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பதினைந்தாவது நாளிலேயே, ஜூன் 2 அன்று மார்க்கண்டேயன் என்பவர் மதுரை  ஊமச்சிக்குளம் போலீசு நிலையத்தில் கொல்லப்பட்டார். இத்துணைக்கும் மார்க்கண்டேயன் மீது எந்தவொரு வழக்கோ புகாரோ கிடையாது. தனது பெண் கடத்திச் செல்லப்பட்டதாகப் புகார் கொடுக்கப் போனவர், பிணமாக வீடு திரும்பினார்.
மார்க்கண்டேயன் கொல்லப்பட்ட அடுத்த பதினாறாவது நாளில், ஜூன் 18 அன்று  பழனிக்குமார் என்பவர் காரைக்குடி வடக்கு போலீசு நிலையத்திலும்; ஜூலை 3 அன்று சரசுவதி என்பவர் சென்னை ஆர்.கே. நகர் போலீசு நிலையத்திலும்; ஜூலை 7 அன்று சின்னப்பா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 11 அன்று சலீம் என்பவர் கோபி போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 30 அன்று ரமேஷ் என்பவர் பல்லடம் மகளிர் போலீசு நிலையத்திலும்; செப்டம்பர் 3 அன்று குப்புசாமி என்பவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசு நிலையத்திலும் இறந்து போயுள்ளனர்.  ஜெயா பதவியேற்ற பின், சராசரியாக பதினைந்து நாளுக்கு ஒருவரை போலீசு கொட்டடியில் வைத்துக் கொன்றிருப்பதை இப்பட்டியல் அம்பலப்படுத்துகிறது.
இக்கொட்டடிக் கொலைகள், பரமக்குடி மற்றும் மதுரையில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, கோவை துடியலூர் போலீசு நிலையத்தில் ஆனந்தீஸ்வரன் என்ற வழக்குரைஞர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது — என இச்சம்பவங்கள் அனைத்தும் ஜெயாவின் ஆட்சி என்றாலே போலீசு ஆட்சிதான் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.  முந்தைய அவரது ஆட்சிகளில் நடந்த சிதம்பரம் பத்மினி பாலியல் வன்முறை மற்றும் பத்மினியின் கணவர் கொட்டடிக் கொலை வழக்கு, கொடியங்குளம் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல், வாச்சாத்தி வழக்கு போன்ற பல்வேறு அரசு பயங்கரவாத வழக்குகளில் குற்றமிழைத்த கிரிமினல் போலீசாரைக் காப்பாற்ற அவரது ஆட்சி முயன்றதைப் போலவே இப்பொழுதும் அ.தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.
பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியோடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை வெளிப்படையாகவே ஆதிரித்துச் சட்டசபையில் உரையாற்றினார், ஜெயா.  கோவை துடியலூர் வழக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களுள் யாரும் அக்கொலைவெறித் தாக்குதலுக்காகக் கைது செய்யப்படவில்லை.  அக்காக்கிச் சட்டைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோவை பகுதி வழக்குரைஞர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பிறகும், ஜெயா அரசும், போலீசும் அக்குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பாமல் வெளியே வைத்துக் காப்பதில்தான் குறியாக இருந்து வருகின்றன.  சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை முடக்குவதிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலும் தமிழக போலீசு உயர் அதிகாரிகள் மும்மரம் காட்டி வருவதும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !இக்கொலையில் கண்ணன், ரியாசுதீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களுக்குத் தொடர்பிருப்பதாக சங்கர சுப்பு குற்றம் சாட்டியிருப்பதால், இக்கொலை வழக்கைத் தமிழக போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளியே வராது என ஒப்புக்கொண்டு, வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது.  ஆனாலும், சி.பி.ஐ., தனது விசாரணையைத் தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்த பிறகும் விசாரணையில் ஒரு சிறிதளவு முன்னேற்றம்கூட எட்டப்படவில்லை.
“”தனது மகனின் கொலைக் குக் காரணமான கண்ணன், ரியாசுதீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களையும்; இக்கொலை நடந்தபொழுது திருமங்கலம் போலீசு நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சுரேஷ்பாபு தடயங்களை அழித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முறையாக விசாரிக்க முயலவில்லை; வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இணை இயக்குநர் அசோக்குமாருக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.  இதில் ஒரு அதிகாரிக்கு வலது, இடதுமாக இருப்பவர்கள்தான் நான் குற்றஞ்சாட்டும் காவல் ஆய்வாளர்கள்.  எனவே, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிகாரி அசோக்குமார் எல்லா வேலைகளையும் செய்தார்.  அதனால்தான் புலனாய்வில் தொய்வு ஏற்பட்டது.” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், வழக்குரைஞர் சங்கர சுப்பு.
சி.பி.ஐ விசாரணை குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, “”விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும்.  அதற்கு வசதியான தேதியை சி.பி.ஐ. வழக்குரைஞர் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் முகமாகச் சிறப்பு விசாரணைக் குழுவை சி.பி.ஐ. இயக்குநர் அமைக்க உள்ளதாகவும், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் சலீம் அலி இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்க இருப்பதாகவும் சி.பி.ஐ. உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை நவம்பர் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுவொருபுறமிருக்க, இக்கொலை வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் போலீஸ் ஆய்வாளர்களில் ஒருவர்கூடப் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.  குறிப்பாக, தடயங்களை மறைக்கவும், இக்கொலையைத் தற்கொலை எனக் காட்டவும் முயன்ற போலீசு ஆய்வாளர் சுரேஷ் பாபு, தான் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு போலீசு அதிகாரிகள் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாக வழக்குரைஞர் சங்கர சுப்பு கூறியிருக்கிறார்.  உண்மை இவ்வாறிருக்க, தமிழக போலீசோ, வழக்குரைஞர் சங்கர சுப்பு விசாரணைக்கு ஒழுங்காக ஒத்துழைப்பதில்லை; அவருக்கும் இறந்துபோன அவரது மகன் சதீஷ்குமாருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது; மன உளைச்சலால்தான் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனத் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகிறது.
· · ·
ஜெயா எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த காலத்தில்கூட போலீசின் அட்டூழியங்களுக்கு எதிராக “”சவுண்டு” விட்டதில்லை.  சட்டம்  ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசின் வரம்பற்ற அதிகாரங்களுக்கும், அதனின் சட்ட விரோதக் கொள்ளைக்கும் அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்குவதில் மற்ற அரசியல்வாதிகளைவிட முன்னணியில் நிற்கும் ஜெயா, “”போலீசின் சட்டவிரோத அட்டூழியங்களுக்காகக்கூட அதனைத் தண்டித்துவிடக் கூடாது; அப்படித் தண்டித்தால், போலீசின் செயல்திறன் குறைந்து போகும்” என்ற பாசிச சிந்தனையைக் கொண்டவர்.  அ.தி.மு.க.வின் கடந்த (200106)  ஆட்சியின்பொழுது, கஜானா காலியாகிவிட்டதெனக் கூறி, மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் வெட்டிய ஜெயா, போலீசு துறைக்கு சலுகைகளையும் படிகளையும் உயர்த்தி வாரியிறைத்தார்.  கருணாநிதியைவிட, தான்தான் போலீசு துறையை நவீனமயமாக்கவும், போலீசாருக்கு வேண்டிய சலுகைகளை அளிக்கவும் பாடுபடுவதாகத் திரும்பத் திரும்பக் கூறி, போலீசின் விசுவாசத்தைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் கில்லாடி அவர்.
இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த விவாதத்தின்பொழுது, போலீசு துறை மானியம் குறித்துப் பேசிய ஜெயா, தமிழக போலீசை நவீனப்படுத்தப் போவதாகக் கூறி, அதற்குக் கொம்பு சீவி விட்டார்.  இதற்கு அடுத்த இரண்டொரு நாட்களில்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பது தற்செயலானதல்ல.  அத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசு அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யவும், இத்துப்பாக்கிச் சூடு குறித்து நியாயமாக விசாரணை நடத்தவும் மறுத்துவருவதன் மூலம், தான் போலீசின் ஆள் என நிரூபித்திருக்கிறார்.  வீரப்பனைத் தேடுவது என்ற பெயரில் பாலியல் வன்முறைக் கொடுமைகளையும், போலி மோதல் படுகொலைகளையும் நடத்திய கிரிமினல் போலீசாரைத் தண்டிக்காததோடு, அவர்களுக்குப் பதவி உயர்வுகளையும், பணம், வீட்டு மனை  என சன்மானங்களையும் வாரி வழங்கியவர்தான், ஜெயா.  அவரது ஆட்சியில் போலீசார் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபொழுது, அப்பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு போலீசு மீது பழிபோடுவதாகக் கூறி, போலீசுக்கு வக்காலத்து வாங்கிய வக்கிரப் பேர்வழி அவர்.
அதனால்தான் தி.மு.க. ஆட்சியைவிட, பார்ப்பன  பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சொந்த ஆட்சியாகவே தமிழக போலீசு கருதிக் கொண்டுத் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறது; துப்பாக்கிச் சூடு, கொட்டடிக் கொலை போன்ற அரசு பயங்கரவாத அட்டூழியங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி நடத்தத் துணிகிறது.

கருத்துகள் இல்லை: