வியாழன், 17 நவம்பர், 2011

உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்? விலை உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்: ஜெயலலிதா


முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தனியார் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப  சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

 தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும்.
போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல்,  உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில் கொண்டு; சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்; புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இவ்வாறு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம் கூட தென் மாநிலங்களில் உள்ள பேருந்துக் கட்டணங்களை விட குறைவானதே ஆகும்.
பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும். தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் வழங்கும் பால் கொள்முதல் விலையை விட அதிக விலையினை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில், 22 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே தற்போது ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் போது, ஆவின் நிறுவனம் குறைவாக கொடுப்பது நியாயமானதல்ல. எனவே, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட பின்பும் வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை குறைவாகவே இருக்கும்.  மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள விலையை விடவும் குறைவாகவே இருக்கும். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை   மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும்; இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?
எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொண்டு,
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! (கோவிந்தா கோவிந்தா)என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

கருத்துகள் இல்லை: