செவ்வாய், 15 நவம்பர், 2011

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கும் தியாகராஜ பாகவதரும்


1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர். இவருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட்வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவர் நடித்து வெளியான சிந்தாமணி படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தாமணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே நடிகர் இவர்தான்.
இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்காரமும் இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல் என்று அதற்குப் பெயர். திரையுலகை இவர் அளவுக்கு ஆண்ட இன்னொருவரைச் சொல்வது கடினம். திரையுலகின் மூலம் இவர் அடைந்த லாபங்களும், திரையுலகம் இவர் மூலம் அடைந்த லாபங்களும் மகத்தானவை. தங்கத் தட்டில் உணவு உண்டவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறிப்போனது. அதுதான் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

பாகவதரைப் போலவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.  வில்லுப்பாட்டு, மேடை நாடகம், திரையுலகம் என்று பல துறைகளில் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதினார். சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி.எம்.மதுரம் கலைவாணரின் நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தாக்கி சீரழித்தது.
இரு பெரும் நடிகர்களின் வாழ்வில் சுனாமியை ஏற்படுத்திய அந்த லட்சுமிகாந்தன் யார்? இன்றைய மஞ்சள் பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழந்த சினி கூத்து என்னும் சினிமா இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர். சினி கூத்தில் சினிமாவைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல, சினிமாக்காரர்களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. பரபரப்பான கிசுகிசுக்கள், எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ்யமான’ செய்திகள் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் என்ற பெயரில் பல புனைவுகள் தயார் செய்யப்பட்டு அச்சில் ஏற்றப்பட்டன. அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு (இவர் பிரபல இயக்குனர். கோவை பக்ஷிராஜ் ஸ்டுடியோவின் உரிமையாளர்) மூவரும், அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் சென்று லட்சுமிகாந்தனுக்கு சினி கூத்து பத்திரிக்கை நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளுநரும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இசைந்து லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார்.
ஆனால், லட்சுமிகாந்தன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. போலியான ஆவணங்களின் பேரில் தன் வெளியீட்டைத் தொடர்ந்து நடத்திவந்தான். அரசாங்கத்துக்கு இது தெரிய வரவே அந்த வெளியீட்டையும் முடக்கியது. லட்சுமிகாந்தன் இதற்கும் அசரவில்லை. ஹிந்து நேசன் என்ற வேறொரு பத்திரிகையைத் தொடங்கினான். மீண்டும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை எழுதினான். இம்முறை ஒரு முன்னேற்றம். சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள், தொழில் அதிபர்கள் என்று அனைவரைப் பற்றிய ரகசியங்களையும், புனை கதைகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளினான்.
லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்களுக்கு பயந்தவர்கள், அவனுடைய நட்பைச் சம்பாதிக்க அவனுக்கு ஏகப்பட்ட பணத்தை வழங்கினர். இதன் காரணமாக லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங்கிவிட்டான். தனக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ராமுலு ஆகியோர்மீது நிறைய கிசுகிசுக்களை எழுதினான். அந்தக் காலகட்டத்தில் மேற்சொன்ன மூவரைத் தவிர்த்து லட்சுமிகாந்தனின் கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்டு அவனுக்குப் பல எதிரிகள் உருவாயினர்.
இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வெப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனியரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனுப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வெப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான். தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்திவிட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ்.கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.
மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட்டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந்ததாகவும் சொல்வார்கள். மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களிடம் லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறான்.  சமீபத்தில் தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அது. அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாகவும் லட்சுமிகாந்தன் சொன்னான். அந்த நடிகைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச் சிக்கவைக்கப்போகதாகவும் தெரிவித்தான்.
மறு நாள் விடியற்காலையில் எதிர்பாராத விதமாக லட்சுமிகாந்தன் உயிரிழந்தான். லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இது நடைமுறையில் இல்லை.
வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.
பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். தியாகராஜ பாகவதர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அவை அனைத்தும் கை நழுவிப் போனது. பாகவதரின் மவுசு காணாமல் போயிருந்தது. அவர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடினார்.
திராவிட இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை, தியாகராஜ பாகவதரைத் திராவிட இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பாகவதர் இணங்கவில்லை. பாகவதர் திரைப்படத்துறையிலிருந்து விலகிய பிறகு, தமிழ் திரைப்படங்கள் வேறொரு தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தது. நாத்திக கொள்கையையும், கடவுள் மறுப்புப் பிரசாரத்தையும் மக்களிடையே சேர்ப்பதற்கு திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகவதரால் மீண்டும் உயரத்தைத் தொடமுடியாமலே போய்விட்டது. 1959ம் ஆண்டு, தன்னுடைய 49-வது வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் பாகவதர் போல் இல்லாமல், திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ஆம் ஆண்டு தன்னுடைய 48வது வயதில் கலைவாணர் காலமானார்.
லட்சுமிகாந்தனை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.
0
S.P. சொக்கலிங்கம் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: