திங்கள், 14 நவம்பர், 2011

கொசுக்கடி, தட்டினேன்; விழுந்திருச்சு வேல்முருகன் பற்றி ராம்தாஸ் சூசகம்

வேல்முருகனை நீக்கியதால், பா.ம.க., பிளவுபடும் என செய்திகள் வெளியான நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று கடலூரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசும் போது, வேல்முருகன் பற்றி குறிப்பிடுகையில், "கொசுக்கடித்ததால், தட்டிவிட்டேன்; விழுந்திருச்சு' என்று சூசகமாக தெரிவித்தார்.பா.ம.க.,விலிருந்து வேல்முருகன் நீக்கப்பட்ட பின், அவரது ஆதரவாளர்கள் கடலூரில் போட்டிக் கூட்டம் நடத்தினர். இதனால், கடலூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. வேல்முருகன் ஆதரவு அதிகமுள்ளதாக கூறப்படும் கடலூரிலேயே பா.ம.க., மாவட்ட பொதுக்குழுவை கூட்டியிருந்தார்.

அதில் ராமதாஸ் பேசியதாவது:கட்சியின் பொதுக்குழு கடந்த ஜூன் 27ம் தேதி சென்னையில் நடந்தது. அதில், இனி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இது பொதுக்குழு எடுத்த முடிவல்ல. காலம் நமக்கு இட்ட கட்டளை. கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீரழித்து, சின்னாபின்னமாக்கி விட்டன. அதை சீரமைக்கும் கொள்கையுடைய ஒரே கட்சி பா.ம.க., தான்நாம்
இன்னும் நான்கரை ஆண்டுகள் மக்களை சந்தித்து, அவர்களுக்கு அரசியலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நாம் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு, இதுவல்லவோ அரசியல் கொள்கை. ஏன் இத்தனை காலம் இவர்கள் கொள்கையை நம்பாமல், தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார்கள் என்று கேட்கும் வகையில் நமது செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்திகள் தேவை தான். ஆனால், அதில் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகை நிருபர் என்னை போனில் தொடர்பு கொண்டு, என்ன இப்படி நடந்து விட்டது எனக் கேட்டார். அதற்கு நான், அது பிஞ்சியிலேயே பழுத்து விட்டது. எதற்கும் பயன்படாது என்பதால் தூக்கிப் போட்டு விட்டோம். கொசு கடித்ததால் தட்டினேன்; அது விழுந்து விட்டது என்றேன். வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என அவர் கேட்டதற்கு, இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, என்றேன். அதையேத்தான் இங்கும் சொல்கிறேன்.

பழம் சாப்பிட வாங்க; தடையில்லை: பா.ம.க., என்பது மிக வளர்ந்த ஆலமரம். அதில் எண்ணற்ற சங்க மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், விழுதுகளாக இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். இந்த ஆலமரத்திற்கு தற்போது இளைய சக்திகள் புதிய வேர்களாகவும், விழுதுகளாகவும் வந்து கொண்டுள்ளனர். இந்த ஆலமரத்தில் பறவைகள் வந்து தங்கலாம். ஏன், மரத்தில் பழுக்கும் பழத்தை சாப்பிட்டுவிட்டுக் கூட போகலாம். தடையேதும் இல்லை.

புதிய அரசியல் பாதையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலை, சமூக நீதி, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி இவை அனைத்தையும் கொள்கையாக கொண்ட ஒரே கட்சி பா.ம.க., தான்.காலம் இட்ட கட்டளையை ஏற்று தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தை காப்பாற்ற பா.ம.க., இருக்கிறது என்று மக்கள் கூறும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும்.இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: