வெள்ளி, 25 நவம்பர், 2011

இலங்கையில் 2012 மும்மொழி .கலாம் கொழும்பு செல்கிறார்


Abdul Kalam
கொழும்பு: வரும் 2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக கடைபிடிக்கப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. இது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க வரும் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை செல்கிறார்.
கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மையத்தில் நடந்து வரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறுகையில்,
2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.இலங்கை மக்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 2012ம் ஆண்டில் அரசு அமலாக்கவுள்ளது. இதற்கான செயல் திட்டத்தை தொடங்கி வைக்க இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலும் பங்கேற்பார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், நாட்டின் வட கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தப் பகுதிகளில் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட வருமாறு சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். அதே போல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: