ஞாயிறு, 20 நவம்பர், 2011

கடாபியின் மகன் எங்கே, என்ன கோலத்தில் அகப்பட்டுக் கொண்டார்?

லிபியாவின் இடைக்கால அரசு இன்று (சனிக்கிழமை) கடாபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னாள் கடாபி அரசின் இறுதி முக்கியஸ்தராக தேடப்பட்டு வந்தவர் இவர்தான். இவரது கைதுடன், கடாபி சகாப்தம் முடிவுக்கு வருகின்றது.
லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபியின் மகன் செய்ஃப் அல்-இஸ்லாம் எல்-கடாபி கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடாபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசு அறிவித்துள்ள போதிலும், இதற்கு வேறு உறுதிப்படுத்தல் ஏதுமில்லை. கைது செய்யப்பட்டவரை பார்வையிட யாரும் அனுமதிக்கப்படவில்லை. லோக்கல் பத்திரிகையாளர்கள், கடாபியின் மகனின் உருவ அமைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டதை பார்த்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் கைகள் பேன்டேஜ் போடப்பட்ட நிலையில் இருந்தது என்பதைத் தவிர, வேறு எந்த அடையாளத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.
தலைநகர் ட்ரிபோலியிலுள்ள அரசு அதிகாரிகள், “கைது செய்யப்பட்ட கடாபியின் மகன் கடுமையான பாதுக்காப்பு வளையத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை நடைபெறும்வரை இதுபோன்ற பாதுகாப்பு கொடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கடாபியும் உயிருடன் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே போராளிப் படையினரால் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், இவரது உயிருக்கு இடைக்கால அரசால் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தரவாதம் விசாரணை வரைதான். விசாரணை லிபியாவில் நடைபெற்றால் அநேகமாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கடாபியின் மகனைக் கைப்பற்றிய படைப்பிரிவின் தளபதி பஷிர் தெஹ்ல்பா, “தென்மேற்கு பாலைவனப் பகுதியில் அவ்பாரி என்ற இடத்திலுள்ள உள்ள மறைவிடத்தில் கடாபியின் மகனை உயிருடன் கைப்பற்றினோம். அவருடன், அவருக்கு நெருக்கமான வேறு மூன்று நபர்களும் இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட உடனே, பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்களை மேற்கு மலை நகரமான ஸின்டான் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளோம். இவர்களை நாம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய போர்க் கைதிகளாக நடாத்துகின்றோம். சட்டத்தின்படி போர்க் கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் இவர்களுக்கும் செய்து கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அல்-இஸ்லாம் எல்-கடாபியை என்ன செய்வது என்பதில் குழப்பம் நிலவுகின்றது. தளபதி பஷிர் தெஹ்ல்பா, “இவரை உடனடியாக மத்திய அரசிடம் நாம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. காரணம், தலைநகர் ட்ரிபோலியில் தற்காலிக அரசு ஒன்றுதான் இயங்குகிறது. இன்னமும் சில தினங்களில் நிரந்தர அரசு உருவாக்கப்பட்டு விடும். அதன் பின்னர்தான், அவரை மத்திய அரசிடம் எம்மால் ஒப்படைக்க முடியும்” என்கிறார்.
மற்றொரு சிக்கலும் உள்ளது. இவரை லிபியாவுக்கு வெளியே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்பது தற்காலிக அரசின் விருப்பம். ஆனால், ஸின்டான் நகரில் உள்ள போராளிப் படையினர் அவருக்கு லிபியாவிலேயே விசாரணை நடாத்தப்பட்டு, லிபியாவிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்றனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் பிராசிகியூட்டர் லூயில் ஓகம்போ, இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்காக அடுத்த வாரம் லிபியா செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். “நல்ல சேதி, அவர் கைது செய்யப்பட்டு, உயிருடன் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை எங்கே வைத்து விசாரிப்பது என்பதை நாம் லிபிய அரசோடு பேசி முடிவு செய்யலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கடாபிக்கு எதிரான போராட்டங்கள் லிபியாவில் வெடித்தபோது, கடாபி அரசின் சார்பில் அறிக்கை விடுத்த முதலாவது நபர் கடாபியின் மகன் செய்ஃப் அல்-இஸ்லாம் எல்-கடாபிதான். “எமது அரசுக்கு எதிராக போராடக் கிளம்பியிருப்பவர்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தம் ஒன்றை நடாத்தவும் எமது ராணுவம் தயாராக இருக்கின்றது. எமக்கு எதிராகப் போராடும் ஆட்களையெல்லாம் எலிகளை கொல்வது போல நசுக்கிக் கொல்வோம்” என்பது அவரது அறிக்கை.
அவரால் எலிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களின் கைகளில்தான் இப்போது கைதியாக உள்ளார் கடாபியின் மகன்.

கருத்துகள் இல்லை: