புதன், 23 நவம்பர், 2011

புட்டபர்த்தியில் சாய்பாபா பிறந்த நாள் விழா ; விமரிசையாக நடந்தது

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் ( 23 ம் தேதி) புட்டபர்த்தியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு சாய்பஜன் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு மற்றும் ஆண்டறிக்கையை வெளியிட்டார். பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல பக்தர்கள் திரளாக அதிகாலை முதலே புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் ஹாலில் குழுமியிருந்தனர்.

பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாய்பாபாவின் மகாசமாதியின் திரை திறக்கப்பட்டதும் பக்தர்கள் பக்தர்கள் பக்தி பெருக்கால் உற்சாகமாக கோஷமிட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ரோசய்யா தனக்கும் சாய்பாபாவிற்கு இருந்த நெருக்கத்தை,அன்பை குறிப்பிட்டவர் இனி கால,காலத்திற்கும் புட்டபர்த்தி பக்தர்களின் முக்கிய திருத்தலமாக விளங்கும் என்றார். சாய் அமைப்பின் அகில இந்திய தலைவர் சீனிவாசன் பேசும்போது,சாய்பாபா எப்போதும் நம்முடனே இருக்கிறார்.இதன் காரணமாக அவர் துவங்கிய கல்வி,அறப்பணிகள் இன்னும் சிறப்புடன் தொடர்ந்து நடைபெறும் என்றார்.இனி வருங்காலத்தில் முக்கிய பகுதிகளில் இயங்கும் வகையில் நடமாடும் மருத்துவமனை,ஆசிரியை பயிற்சி பள்ளி போன்றவை தொடங்க இருப்பதாக குறிப்பிட்டார்.

விழாவில் சாய்பாபாவின் முந்தைய பிறந்த நாள் உரை பெரிய திரையில் போட்டுக்காட்டப்பட்டதும் பக்தர்கள் மிகவும் உற்சாகப்பட்டனர்.பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமான கேக்குகள் பாபாவிற்கு படைக்கப்பட்டு பின் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.விழாவில் அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.வி.கிரி:பத்திரிகை ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: