புதன், 23 நவம்பர், 2011

மும்பை 'தலால் ஸ்ட்ரீடை' கைப்பற்றும் போராட்டம் வரும்-ராமதாஸ் எச்சரிக்கை


Ramadossதிண்டிவனம்: அமெரிக்காவில் நடக்கும் வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் போராட்டம் போல இந்தியாவில் மும்பை 'தலால் ஸ்ட்ரீடை' கைப்பற்றும் போராட்டமும் வரலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், அமெரிக்காவில் நியூயார்க் நகர 'வால் ஸ்டீரிட்டை' கைப்பற்றுவோம் என்ற போராட்டம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி தொடங்கி, தொடர்ந்து உலகமெங்கிலும் 82 நாடுகளில் நடந்து வருகிறது.
'வால் ஸ்டீரிட்' ஆக்கிரமிப்பு என்பதன் கருப்பொருள் பேராசைக்கு எதிரான போராட்டம். உலகின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான உலக வங்கிகள், பெரும் முதலாளித்துவ அரசாங்கங்கள் என இவர்கள் எல்லோரையும் எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதாக இந்த போராட்டம் உருவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும்போது உலகின் 42 சதவீத வருமானம் மேல்தட்டைச் சேர்ந்த 10 சதவீத மக்களுக்குத் தான் செல்கிறது. கீழ்தட்டு மக்களுக்கு ஒரு சதவீதம் தான் செல்கிறது. இதனால் நாளுக்கு நாள் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த தனியார்மயம், தாராளமயம், உலக மயமாக்குதல் போன்ற அநீதியான பொருளாதார வளர்ச்சிக்கு முடிவு கட்டுவதுதான் 'வால் ஸ்டீரிட்' போராட்டத்தின் அடிப்படையாகும். இப்போராட்டத்துக்கு தனி தலைவரோ அல்லது தனி அமைப்போ இல்லாமல் முகமற்ற போராட்டமாக தன் எழுச்சியோடு நடைபெறுகிறது.

போராட்டக்காரர்களின் ஒற்றை குறிக்கோள் அரசாங்கத்தை பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதுதான், ஏற்ற தாழ்வு வேலையின்மை, வறுமை இதற்கெல்லாம் காரணம் பெரும் நிறுவனங்களும், வங்கிகளும், பங்கு சந்தைகளும்தான்.

தமிழகத்தில் கடந்த 2005ல் ரூ. 625 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா செல்போன் நிறுவனத்துக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இதன்படி மற்ற மாநிலங்களில் இந்த நிறுவனத்துக்கு விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியையும் கூட தமிழக அரசே ஏற்கிறது. இதுபோக குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இந்த நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இலவசங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்களாக நமது அரசுகள் உள்ளன.

மொத்தத்தில் அரசாங்கம் பணம் படைத்தவர்களுக்கே சாதகமாக உள்ளது. பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருவாயை கல்வி, மருத்துவத்துக்கு அரசு செலவு செய்ய வேண்டும். கல்வி, அடிப்படை மருத்துவம் போன்ற சலுகைகளை அரசாங்கமே வழங்க வேண்டும்.

பணக்காரர்களிடம் பறித்து ஏழைக்கு வழங்க வேண்டும். அமெரிக்காவின் ஏழை, பணக்காரர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் நிலையும் ஒன்றுதான். வேறுபாடு இல்லை. குறைந்த வருவாய் பிரிவின் பணத்தை அபகரித்து அதிக வருவாய் பிரிவினருக்கு வழங்குவதாகவே அமைந்துள்ளது.

உலகில் குறைவாக வரி செலுத்துவோர் உள்ள நாடு இந்தியாதான். இந்தியாவில் உள்ள பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரியும் மிக, மிக குறைவாகும்.

இந்தியாவில் தாராளமயம், உலக மயமாக்கல் கொள்கையை திணித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். இப்போது 12வது 5 ஆண்டு திட்டத்தை தயாரித்து, அவரது நண்பர் மாண்டேசிங் அலுவாலியா செயல்படுத்தியுள்ளார்.

ஆனால், இப்போது தாராளமயமாக்கல் கொள்கையால் கேடு நேர்ந்துள்ளதாக மன்மோகன் சிங்கே ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிக்குமானால் 'வால் ஸ்டிரீட்' போராட்டம் போல் விரைவில் மும்பை 'தலால் ஸ்ட்ரீடை' கைப்பற்றும் போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை: