புதன், 23 நவம்பர், 2011

எம்.ஜி.ஆர் எழுந்து இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார்


க – 28
தனிக்கட்சி தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இனி பிரச்னை இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால் கருணாநிதியால் அப்படி நினைக்கமுடியவில்லை. காரணம், எம்.ஜி.ஆரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர். ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அமைதியாக இருக்கவிட மாட்டார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் இருக்கிறார். மோகன் குமாரமங்கலம் இருக்கிறார். ஈ.வெ.கி. சம்பத் வேறு அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். இதுதான் கருணாநிதியின் கணிப்பு.
அடுத்தது என்ன செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த கே.ஏ. மதியழகனும் எம்.ஜி.ஆரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதாகக் காற்றுவாக்கில் காதில் விழுந்தது கருணாநிதிக்கு. ஏதோ தீய்ந்த வாடை அடிப்பது போல இருந்தது அவருக்கு. ஆம். எம்.ஜி.ஆர் வலைவிரிக்கத் தொடங்கிவிட்டார். உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டென்று கருணாநிதியின் நினைவுக்கு வந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.
திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக இருந்தவர். தஞ்சாவூர் பகுதியில் செல்வாக்கு நிறைந்தவர். திமுகவின் முக்கியப் பிரமுகர்களுள் ஒருவர். கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். முக்கியமாக, மதியழகனின் நெருங்கிய நண்பர். ஆகவே எஸ்.டி. சோமசுந்தரத்தை அழைத்தார். கே.ஏ. மதியழகனைச் சென்று பாருங்கள். அவருடைய மனநிலையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை முகாம் மாறும் முடிவுக்கு வந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதுதான் எஸ்.டி. சோமசுந்தரத்துக்கு கருணாநிதி கொடுத்த பணி.
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் சேரப்போகிறார் மதியழகன் என்ற செய்தி அரசல் புரசலாகக் கசிந்துவிட்ட நிலையில் மதியழகனைச் சந்தித்துப் பேசுவது நேர விரயம் என்பது எஸ்.டி. சோமசுந்தரத்தின் கருத்து. ஆனாலும் கருணாநிதியின் வற்புறுத்தல் காரணமாக மதியழகனைச் சந்தித்துப் பேசினார். சிலபல வார்த்தைகள் வெளிப்பட்டபோதே தெரிந்துவிட்டது மதியழகன் முகாம் மாறப்போகிறார் என்பது. உடனடியாக கருணாநிதியைச் சந்தித்து விஷயத்தைக் கூறினார்.
ஆனாலும் மதியழகனை இழக்க மனம் வரவில்லை கருணாநிதிக்கு. எத்தனை ஆண்டுகால நட்பு. திமுகவின் முக்கியத் தூண்களுள் ஒருவர். செயல்வீரர். அதன் காரணமாகவே தன்னுடைய முதல் அமைச்சரவையில் மதியழகனுக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்திருந்தார் கருணாநிதி. ஆனால் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி தொடர்பாக எழுந்த சொத்து முறைகேடு காரணமாக பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்ததால் மதியழகனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது.
இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனபோது மதியழகனுக்கு அமைச்சராக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் சர்ச்சைகளையும் தவிர்க்கவேண்டும்; கௌரவத்தையும் கொடுக்கவேண்டும் என்பதால் சபாநாயகர் என்ற கௌரவம் நிறைந்த பொறுப்பைக் கொடுத்தார் கருணாநிதி. அந்தஸ்துதான் பெரியதே தவிர ஆஸ்திகள் பெருக வாய்ப்பில்லாத பதவி என்பது பொதுவான கணிப்பு. ஆகவே, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைவதற்கே அதிகம் விரும்பினார் மதியழகன். ஆனால் அதற்கு கருணாநிதி சம்மதிக்கவில்லை.
அதிருப்தியில் இருந்த மதியழகனை அழைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் முயற்சி மேற்கொண்டார். அதைத் தடுக்கவே மீண்டும் ஒருமுறை எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூது அனுப்பினார் கருணாநிதி. அப்போது அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துசேர்ந்தது. ஆம். மதியழகனுடன் எஸ்.டி.சோமசுந்தரமும் கைகுலுக்கிவிட்டார். அவரும் அதிமுகவில் இணையப் போகிறார். எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூதராக அனுப்பியது எத்தனைப் பெரிய தவறு என்பது கருணாநிதிக்குப் புரிந்தது. அவருடைய கணிப்புகள் அடுத்தடுத்து பொய்த்துப் போகத் தொடங்கின.
அப்போது கருணாநிதி அரசுக்கு எதிராக அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்றை சென்னையில் நடத்தின. 10 நவம்பர் 1972 அன்று நடந்த ஊர்வலத்தை அண்ணா சாலையில் இருந்து பார்வையிட்டார் சபாநாயகர் மதியழகன். தார்மீக அடிப்படையில் அது சரியா என்ற சர்ச்சை எழுந்தபோதும் மதியழகன் முகாம் மாறிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. அதேசமயம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாமல் சட்டமன்றத்தில் நடக்கப் போகும் குழப்பங்களுக்குத் தலைமையேற்கப் போகிறார் என்பது பிறகுதான் தெரியவந்தது.
13 நவம்பர் 1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி ஒழுங்குப் பிரச்னை ஒன்ø எழுப்பினார். கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னால் ஒழுங்குப் பிரச்னையை எதையும் கிளப்பக்கூடாது என்பது சட்டமன்ற விதி. ஆனாலும் அந்த ஒழுங்குப் பிரச்னைக்கு அனுமதி கொடுத்தார் சபாநாயகர் மதியழகன். அதுதான் சபாநாயகர் முகாம் மாறிவிட்டார் என்பதற்கான நேரடி சாட்சி. அப்போது சமீபத்தில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ராஜினாமா செய்தது பற்றியும் பிறகு அமைச்சரவையில் இணைந்தது பற்றியும் ஒழுங்குப் பிரச்னை எழுப்பப்பட்டது. ஆனால் அமைச்சரவையை மாற்றியமைப்பது முதலமைச்சரின் தனி உரிமை என்றது ஆளுங்கட்சித் தரப்பு.
அடுத்ததாக, எம்.ஜி.ஆர் எழுந்து இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார். மாநில அமைச்சரவை ஆளுங்கட்சியின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது; மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. ஆகவே, இந்த அமைச்சரவை தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிதி ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதா? என்பதுதான் எம்.ஜி.ஆர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்னையின் சாரம்.
எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிவிட்டார் என்பது உண்மை. அவருடன் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களும் திமுகவில் இருந்து விலகிவிட்டார்கள் என்பதும் உண்மை. அதன்மூலம் ஒட்டுமொத்த திமுகவும் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டது என்பது எம்.ஜி.ஆரின் வாதம். அதேசமயம், மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது என்பதை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியத்தையும் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் வைக்கவில்லை. இருந்தாலும் ஒழுங்குப் பிரச்னை எழுந்துவிட்டது.
பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நிலை. எழுந்தார் கருணாநிதி. சபையில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு வேறு விவாதத்தை எடுத்துக் கொள்ள நாங்கள் தயார். அமைச்சரவை மீது கொண்டுவரப்படும் கண்டனத் தீர்மானத்தை விவாதிக்கவும் தயார்!
எம்.ஜி.ஆரும் சபாநாயகரும் விரும்பியது விவாதங்களை அல்ல; சட்டமன்றக் கலைப்பை. சபாநாயகர் பேசினார்.
‘இன்று கிளப்பப்பட்டுள்ள பிரச்னை அசாதாரணமான பிரச்னை. இதற்கு ஓர் அசாதாரண தீர்வு கண்டுதான் சமாளிக்க முடியும்… இன்று மாநிலத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் சிபாரிசு செய்யவேண்டும் என்ற என்னுடைய யோசனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்… சபாநாயகர் என்ற முறையில் அல்ல; ஒரு நண்பர் என்ற முறையில் சொல்கிறேன். மக்களை இன்றைக்கே சந்திக்கிறீர்களா என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?’
சட்டமன்றத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் பொதுவாகச் செயல்படவேண்டிய சபாநாயகர், திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டது கருணாநிதியை கவலைகொள்ளச் செய்தது. சபாநாயகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்பதை சைகை மூலம் காட்டிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அவையின் மூத்த உறுப்பினர்கள் தங்கமணி போன்றோரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, 5 டிசம்பர் 1972க்கு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் மதியழகன்.
சபாநாயகரின் மனமாற்றம் கருணாநிதியைக் கவலைக்குள்ளாக்கவில்லை. ஆனால் அவருடைய அதிரடியான செயல்பாடுகள் ஆத்திரத்தை வரவழைத்தன. அப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றிப் பேச்சுகள் எழுந்தன. தயாரானார் நாவலர் நெடுஞ்செழியன்.
நாங்கள் எல்லாம் தங்களிடம் முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் நம்பிக்கை வீணாகும் வண்ணம் அண்மைக் காலத்தில் ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு விரோதமாகத் தாங்கள் நடந்துகொண்டது கண்டு வருந்துகிறோம். தங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆகவே தாங்கள் சட்டப் பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம் என்று தீர்மானம் எழுதப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் 185 பேர் அதில் கையெழுத்திட்டனர்.
தீர்மானம் தயார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சட்டசபையைக் கூட்டுவதில் சிக்கல். காரணம், சபாநாயகர் மதியழகன் கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டுச் சென்றிருந்தார். பிறகு நிபுணர்களின் ஆலோசனையின்படி சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கையில் கவர்னர் இறங்கினார். 2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் மீண்டும் கூடியது.
மொத்தம் இரண்டு திட்டங்கள் தயாராக இருந்தன. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது ஆளுங்கட்சியின் திட்டம். அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பது அதிமுக, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் திட்டம்.
2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் எழுந்த திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி எழுந்தார். தற்போதைய சபாநாயகர் மீது 185 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 179 ஆவது விதியின்படி அதைத்தான் முதலில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து எழுந்த அவை முன்னவரான நெடுஞ்செழியன், அரசியல் சட்ட 181 ஆவது பிரிவின்படி சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் வருமானால் அப்போது சபாநாயகர் அவையில் இருந்தாலும் அவர் அவைக்குத் தலைமை தாங்கக்கூடாது என்று உள்ளது. ஆகவே, துணை சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்கிட வேண்டும் என்றார்.
சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் பக்கம். துணை சபாநாயகர் ஆளுங்கட்சியின் பக்கம். அடுத்தது என்ன நடக்கும்? இடியாப்பச் சிக்கல்தான்!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார் www.tamilpaper.com

கருத்துகள் இல்லை: