உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவால், காங்கிரசுக்கு மிகப் பெரிய செக் வைத்துள்ளது தி.மு.க. தனித்துப் போட்டி முடிவை பூசி மெழுகி அறிவித்திருந்தாலும், "எனது தயவு தான் உனக்கு வேண்டும், உனது தயவு எனக்கு தேவையில்லை' என்பதையே காங்கிரசுக்கு, தி.மு.க., வெளிப்படுத்தியுள்ளது.
சட்டபை தேர்தலின்போது, காங்கிரசுக்காக வளைந்து நெளிந்து, கடைசி வரை விட்டுக் கொடுத்து தி.மு.க., தலைமை செயல்பட்டது, தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரசின் ஆசியில் தி.மு.க., இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது என குமுறாத தொண்டர்களே இல்லை."தனித்துவத்தை இழந்துவிட்டோமே' என, வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கினர் தி.மு.க., மூத்த நிர்வாகிகள். இதற்கெல்லாம், தலைமையின் குடும்பமே காரணம் என சாடவும் செய்தனர்.தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கும் தி.மு.க.,வே காரணம் என்று கூட்டணிக் கட்சிகள் பழி சுமத்தின.இதற்கு பதில் கூட சொல்ல முடியாமல், "தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்' என கருணாநிதி கூறினார்.
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என இளைஞர் காங்கிரஸ் கூறத் துவங்கியது. காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இதையே வழி மொழிந்தனர். இதற்கும் தி.மு.க.,வால் பதில் சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் தனித்துப்போட்டி குறித்த நேரடிக் கேள்விகளுக்கு, காங்கிரசுடனான கூட்டணி தொடர்கிறது என்றே தி.மு.க., தலைவர் சொல்லி வந்தார்.
இந்த தவிப்புக்கெல்லாம், "தி.மு.க.,வுக்கு வேறு வழியில்லை. கூட்டணி அதற்கு அவசியம். ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் நிலையில், காங்கிரஸ் உறவை துண்டித்துக் கொள்ள தி.மு.க., தயாராக இல்லை' என்ற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.இதற்கெல்லாம், விடை சொல்லும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என, தி.மு.க., அறிவித்துள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளிடம் ஆலோசனை செய்யாமலேயே, இந்த முடிவை தி.மு.க., அறிவித்துள்ளது. இதைக் கட்சித் தொண்டர்கள் முதல் அனைவரும் வரவேற்கின்றனர்.
"எப்பவோ எடுத்திருக்க வேண்டிய முடிவை கட்சித் தலைமை, காலம் தாழ்த்தி எடுத்துள்ளது. தனது அடையாளங்களை பெருமளவு இழந்துவிட்ட நிலையில், இப்பவாவது இந்த முடிவுக்கு கட்சி வந்துள்ளதே' என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தி.மு.க.,வின் முடிவு, திரிணமுல் காங்கிரசின் வழியொட்டியதாக உள்ளது, என அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
மத்திய அரசில் அங்கம் பெற்றாலும், தனது தனித்துவத்தை இழக்காமல், "மாநில அளவில் நான் தான் வழிநடத்துவேன்' எனக் கூறும் திரிணமுல் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு தி.மு.க., வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க., சமையல் எரிவாயு உயர்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் இதையே பிரதிபலித்துள்ளன. இந்த நிலைப்பாட்டில் கட்சி நிலையாக இருக்க வேணடும் என தி.மு.க., எம்.பி., ஒருவர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதிமன்றம் தான் முடிவு சொல்ல வேண்டும். வழக்கை சந்திக்கத் தயாரான பின்னர் காங்கிரசின் தயவுக்கு மண்டியிட வேண்டிய அவசியமில்லை. பின்னோக்கி வெகுதூரம் வந்துவிட்ட பின், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவின் மூலம், மீண்டும் முன்னேறி செல்ல முதல்படி எடுத்து வைத்துள்ளோம்' என்கிறார்.
தனித்துப்போட்டி என்ற முடிவு, இதுபோன்ற சாதகங்களை தி.மு.க.,வுக்கு ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்பத்திலும் அதிர்வை உண்டாக்கியுள்ளது. காங்கிரசை விட்டு விலக முடியாது என்று கூறிவரும் அழகிரிக்கு, தனித்துப் போட்டி முடிவு புதிய கட்டுப்பாட்டை உணர்த்தியுள்ளது. வரும் காலங்களில், தன் இஷ்டம் போல் கட்சியை வழிநடத்தி செல்ல முடியாது எனவும் அவருக்கு சொல்லியுள்ளது.இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சி, குடும்பத்தின் மீது படிந்துள்ள கரையை துடைக்கும் முயற்சி, தோல்வியில் துவண்டுள்ள தொண்டனுக்கு புத்துணர்வை ஊட்டும் முயற்சி போன்றவைக்கு தனித்துப்போட்டி முடிவு கைகொடுக்குமா என்பதற்கு, உள்ளாட்சி தேர்தல் முடிவு தான் பதில் சொல்லும்என தி.மு.க. தலைமை எதிர்பார்க்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக