வியாழன், 31 மார்ச், 2011

புலிகள் ஆதரவு உறுமல் சத்தம் அடங்கிய நிலையில் தமிழகத் தேர்தல் களம்


கோயம்புத்தூர்: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழக மாநிலம் எங்கும் தேர்தல் களங்களில் புலிகள் சார்பு "உறுமல்கள்' எதிரொலித்துக் கொண்டிருந்தன.

லோக்சபாத் தேர்தலின்போது இலங்கையின் யுத்தமும் சிறுபான்மைத் தமிழர்களின் துன்பநிலையும் நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமித்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கையாலாகாத தன்மையைக் கொண்டிருப்பதாகச் சாடியதுடன், அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தியிருந்தார். அதன் பின்னர் 18 மாதங்கள் கடந்து விட்டன.

தமிழ் நாட்டிலுள்ள புலிகள் சார்பில் உரத்துக் குரலெழுப்பும் வைகோ தேர்தல் களத்திலிருந்து இப்போது அகன்றுவிட்டார். அத்துடன், கடந்த மூன்று தேர்தல்களில் தோல்வி கண்டிருந்த அ.தி.மு.க. தமிழ்நாட்டில் இலங்கை விடயம் தேர்தலில் வெற்றிபெறச் செய்யாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால், புலிகள் சார்பு துப்பாக்கிகள் ஏன் மௌனமாகியுள்ளன? புலிகள் சார்புக் குழுக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தன. இதற்கு அ.தி.மு.க. ஆதரவளித்திருந்தது. ஆனால், இப்போது அந்த விடயத்தில் சத்தமின்றி அ.தி.மு.க. ஓய்வெடுத்துவிட்டதாகத் தெரிகின்றது. ஆனால், நடிகரும் இயக்குநருமான சீமான் 63 தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். ஆயினும் புலிகள் சார்பு முன்னணி ஆதரவாளர்கள் பலர் இந்தக் காட்சிகளை ஓரத்தில் நின்றே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பணவீக்கம்,இலவசம்,மோசடிகள் என்பனவே தேர்தலின் தொனிப்பொருளாகக் காணப்படுகிறது. இலங்கைத் தமிழர் விவகாரம் வாக்கை வசீகரிக்கும் விடயமாகக் காணப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்போவதாக தி.மு.க.,அ.தி.மு.க. கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தாலும் கூட இந்த விடயம் வாக்கு வங்கிக்கான காட்சியாகத் தென்படவில்லை. இராமேஸ்வரத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருந்த சீமான் தமதுரையில்;

"தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இதுவாகும்.இலங்கைத் தமிழர்களின் துன்பங்கள் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் பேசாமல் இருப்பது துன்பகரமான நிலைமையாகும் என்று தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வும் தி.மு.க. வும் ஈழம் விவகாரத்தை உயர்த்திப் பிடித்திருந்தன. வாக்குகளுக்காக இதனை மேற்கொண்டிருந்தன. ஆனால், அவர்கள் தமிழர்களை உண்மையாக நேசிப்பவர்களல்ல' என்று சீமான் குற்றஞ்சாட்டுகிறார்.

சென்னையைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணியான ராஜீவ் காந்தி என்பவர் கடந்த தேர்தலில் நான்காயிரம் வாக்குகளை சிவகங்கைத் தொகுதியில் பெற்றவர். அங்கு சிதம்பரம் சிறிதளவு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்தார். இந்த முறை ராஜீவ் காந்தி போட்டியிடவில்லை. சீமானுடன் அவர் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். ஈழ விவகாரத்தை அரசியல் கட்சிகள் மறந்துவிட்டதாக அவரும் சாடியுள்ளார்.

புலிகளின் ஆதரவாளர்களில் அநேகமானோர் தமது சுருதியை அடக்கி வாசிக்கின்றனர். பெரியார் திராவிட கழகத்தின் கே.இராமகிருஷ்ணன் 2009 பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலத்தில் இராணுவ வாகனத் தொகுதி மீதான தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரும் தேர்தலை பகிஷ்கரிக்கின்றார். நாங்கள் தேர்தலை பகிஷ்கரிக்கத் தீர்மானித்துள்ளோம். இப்போது எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கமாட்டோம். தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க.,காங்கிரஸில் இணையக்கூடும். இதனை ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் காங்கிரஸுடன் கூட்டுச்சேரவே விரும்புகின்றார் என்று இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை மோதல் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க காங்கிரஸைத் தோற்கடிக்க வைப்பது மிகவும் முக்கியமானதாக அச்சமயம் கருதப்பட்டது என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இப்போது இலங்கைத் தமிழர்கள் மறக்கப்பட்டவர்களாகத் தோன்றுகின்றது என்பதை இராமகிருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறார். புலிகள் சார்பு உறுமல் இப்போது அமர்ந்துவிட்டதாகத் தென்படுகிறது என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: