தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், ஒரு சிலருக்கு மட்டும் கெடுபிடிகள் தளர்த்தப்படுவது போல தோற்றமளிப்பதை மறுக்க முடியாது. தேர்தல் கமிஷன் நடத்திய வாகன சோதனை மூலம் சாதாரண வியாபாரிகள், பொதுமக்கள், அவசிய தேவைக்காக எடுத்துச் செல்கிற பணம் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சொந்தப் பணி நிமித்தமாக, பொருளோ, பணத்தையோ கொண்டு செல்கிறபோது, அவர்களிடம் கெடுபிடிகள் செய்வதை தேர்தல் கமிஷன் தவிர்த்து இருக்க வேண்டும். அரசியல் கட்சி கொண்டு செல்லும் பணத்தை தடுக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபனை இல்லை.
தேர்தல் கமிஷன் கெடுபிடியால், அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டு, கட்சித் தலைவர்களின் சிலைகள் கூட துணிகளால் மூடப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதியின் அறிக்கையை, ஐகோர்ட் தானாகவே பிரச்னையாக எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. நீதித்துறை தலையீட்டின் காரணமாகத் தான், மீண்டும் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன.
பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் தவிர, வீடுகளின் முன் உள்ள கொடிக் கம்பங்களும், இரவோடு, இரவாக ரம்பத்தால் அறுத்து எடுத்துச் செல்கின்றனர். தேர்தல் ஆடம்பரம், படோபகாரம், கண்ணை உறுத்தும் விளம்பரத்துக்கு நடவடிக்கை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். கட்சிக் கொடியையே பறிக்கும் அளவு கெடுபிடி என்றால், ஜனநாயகம் கேலியாகிவிடும். கொடிகள் இல்லாமல், சின்னங்களை வெளிப்படுத்தாமல் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? மொத்தத்தில் தேர்தல் கமிஷன், நமது அடிப்படை உரிமைகளை பறிப்பதைப் போலவே நிலைமை உள்ளது.
தேர்தலை நேர்மையாக நடத்த முனைப்பு காட்டும் தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் டி.ஜி.பி., அதுவும் பெண் டி.ஜி.பி.,யையே மாற்றுகின்றனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் தான் கெடுபிடிகள் அதிகமாக இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது. ஜெயலலிதாவின் பிரசாரத்துக்கு லாரிகள், வேன்கள் மூலம் ஆட்கள் ஏற்றிச் செல்வதைக் கூட தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.
தேர்தலைச் சந்திக்க வேண்டிய பரபரப்பில் இருக்கிற காரணத்தால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை குறித்து பேச முடியவில்லை. வருகிற காலங்களில், தேர்தல் கமிஷன் நடைமுறை குறித்து, பார்லிமென்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குரிய பரிகாரம் காணப்படும்.
ந.பாலகங்கா, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணைச் செயலர் : தமிழகத்தில் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிற கட்டுப்பாடுகள் ஆரோக்கியமான தேர்தலை நடத்த வழிகோலும். விதிமுறைகளை மீறி தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. அது குறித்து புகார் அளித்தால், அளிக்கப்பட்ட புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரிவதில்லை.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தி.மு.க., பணம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கொடுத்துள்ளோம். அவர்கள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேர்தல் கமிஷனைப் பாராட்டுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது கடும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் கருணாநிதி வழக்கமாகக் கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் கொடி கட்டக் கூட விடவில்லை.
ராவ் என்னும் தேர்தல் அதிகாரி, ஆளுங்கட்சியான எங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். தொகுதியில் அமைச்சர்கள் தங்குவதற்கு கூட அனுமதிக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, தேர்தல் கமிஷனைப் பாராட்டினார். இன்று இவர் முதல்வராக இருக்கும் போது, தேர்தல் கமிஷன் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தால், அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்.
தேர்தல் கமிஷன் நடத்தும் வாகன சோதனை பாராட்டக் கூடியது. ஆளுங்கட்சியினர் பணத்தை சுதந்திரமாக எடுத்துச் சென்று வாக்காளர்களுக்கு அளிக்கும் செயலை வாகனச் சோதனை தடுக்கிறது. வாகனச் சோதனையில் இதுவரை 23 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை ஒருவர் கூட கேட்டு முறையிடவில்லை.
காவல் துறை வாகனங்களிலேயே தி.மு.க.,வினர் பணத்தை அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு, "108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக, தி.மு.க.,வினர் பணத்தை அனுப்பி வருகின்றனர். கடந்த 17ம் தேதி தி.மு.க., தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஒன்பது "108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெளியேறின. அவை அங்கு வந்த காரணம் என்ன? இது குறித்து நானும், மைத்ரேயனும் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்.
துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் உள்ள, ஒரு மருத்துவமனையில் வைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது. அதை, கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் விதிமுறை மீறல்களைச் செய்வதற்காகவே, மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகளை தங்களுக்கு வசதியாக ஏற்கனவே தி.மு.க.,வினர் நியமித்துவிட்டனர். தற்போது பணப்பட்டுவாடாவிற்கு அவர்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் கமிஷனின் செயல்பாடு இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக