புதன், 30 மார்ச், 2011

மட்டைபந்து [cricket] மானங்கெட்டவர்களின் விளையாட்டு.

 by teavadai
மட்டைபந்து உலககோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாளை நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கும் பாகிசுதானுக்கும் இடையிலான அரையிறுதி போட்டி பற்றி கடந்த நான்கைந்து நாட்களாக ஊடகங்கள் பரபரப்பூட்டி வருகின்றன.காதை பிளக்கும் இவர்களது கூச்சல்களுக்கு இடையே மட்டைபந்து குறித்து இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாக்கியுள்ள பிரமைகளை களைந்து அதன் கோரமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியிருக்கிறது.
கல்வி,மருத்துவம் என எதையும் விட்டு வைக்காத வணிகமயமாக்கம் விளையாட்டை மட்டும் விட்டு வைக்குமா.இந்திய துணைக்கண்டத்தில்  கடந்த சில பத்தாண்டுகளாக ஆளும் வர்க்க மேல்சாதி கும்பல் திட்டமிட்டு திணித்துள்ள மட்டைபந்து மீதான காதலை தங்கள் வணிக நோக்கங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்தி தங்கள் உற்பத்தி பொருட்களை மக்கள் தலையில் கட்டி வருகின்றனர்.அதனால்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக  எண்ணிப்பார்க்கவே மலைப்பூட்டும் அளவிற்கு கோடிகள் கொட்டப்படுகின்றன. இப்படி கோடிகளில் புரள்வதால்தான் ஆட்டத்தை நேரில் பார்க்க சில நூறு ரூபாய்களுடன் வரும் ரசிகர்களை காவல்துறையை விட்டு நாயை அடித்து விரட்டுவது போல அடித்து விரட்டுகிறார்கள் ”பெருமாந்தர் விளையாட்டு”நிர்வாகிகள்.
அடிமைத்தனத்தை நேசிப்பதே மட்டைப்பந்து விளையாடுவது.
 இங்கிலாந்தில் தோன்றிய மட்டைபந்து விளையாட்டை பிரித்தானிய ”துரைமார்கள்” குடியேற்ற நாடுகளிலும் விளையாடி பிரபலப்படுத்தினர். வெள்ளை நாய்களுக்கு நாட்டை காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த இந்திய மன்னர்கள் என்ற பெயரில் வாழ்ந்த இழிபிறவிகள் அவர்களோடு சேர்ந்து இந்த மட்டைப்பந்தை விளையாடி வந்தனர்.பகல் பொழுதில் வெள்ளையனின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கு ஒத்தூதி விட்டு மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் குடித்து கும்மாளமிட்டும் பொழுதை கழித்த இந்த இழிபிறவிகள் தூக்கி பிடித்த விளையாட்டுதான் இந்த மட்டைப்பந்து விளையாட்டு. இவர்களோடு சேர்ந்து அன்றைய ஆட்சி இயந்திரத்தில் பங்கு வகித்த பார்ப்பன மேல்சாதியினரும் இந்த விளையாட்டை தூக்கி பிடித்து வந்தனர்.
ஆகவேதான் மட்டைப்பந்து விளையாட்டு இன்றளவும் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. இந்தியாவில் இன்றளவும் முன்னாள் மன்னர்களின் வாரிசுகளும் மேல்சாதியினருமே இந்திய அணியில் இடம்பெறுகிறார்கள்.ரஞ்சி மகராசா பெயரில்தான் ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. மன்னர் பரம்பரையை சேர்ந்த பட்டோடி நவாப்களும் கெய்க்வாடுகளும் பார்ப்பன மேல்சாதியினரான சிரிகாந்துகளும் கவாசுகர்களுமே இந்திய மட்டைபந்து விளையாட்டை கட்டுபடுத்துகின்றனர்.
ஆக வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிமைகளும் அடிமைத்தனத்தை நேசிப்பவர்களும் மட்டுமே மட்டைபந்தை விரும்பி விளையாடலாம். மான உணர்ச்சி கொண்டோர் விரும்ப முடியாது.
இந்திய துணைக்கண்டத்திற்கு ஏற்றதல்ல மட்டைப்பந்து.
மட்டைப்பந்து கண்டுபிடிக்கப்பட்ட இங்கிலாந்து ஒரு குளிர் நாடு. ஆண்டின் ஆகப்பெரும்பான்மையான நாட்களில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் வகையில் உலக உருண்டையின் ஓரத்தில் அமைந்த நாடு.குளிர் மிகுந்த அந்நாட்டில் வெயில் என்பதே அபூர்வமானது.இதமானது.அங்கு நீண்ட நேரம் வெயிலில் காய்வது உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்கிறது.ஆகவே அந்த நாட்டில் நாள்முழுவதும் வெயிலில் நின்று விளையாடும் மட்டைப்பந்து அவர்களுக்கு பொருத்தமான விளையாட்டு.அப்படியிருந்தும் அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் விரும்பி விளையாடுவதும் ரசிப்பதும் கால்பந்து விளையாட்டைத்தான்.அங்கும் கூட மட்டைப்பந்து மேட்டுக்குடி சோம்பேறிகளின் விளையாட்டாகவே இருக்கிறது.கால்பந்தே உழைக்கும் மக்களின் விளையாட்டாக இருக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத விளையாட்டு மட்டைப்பந்து.நில நடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால் ஆண்டின் பெரும்பாலான  நாட்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் வெப்பமண்டல பகுதி இது.இங்கு வெயில் என்பதே சுட்டெரிப்பது.கொடுமையானது.இந்த நாடுகளில் நாள் முழுவதும் வெயிலில் நின்று விளையாடுவது என்பது உடலுக்கு தீங்கிழைப்பதாகவே இருக்குமேயன்றி நலன் பயப்பதாக இருக்காது.இங்கு இதமான மாலை வெயிலில் ஓரிரு மணிநேரம் கால்பந்து,கூடைப்பந்து,கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதே உடல்நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இருக்கும்.
மட்டைப்பந்து ஒரு விளையாட்டே அல்ல.
விளையாட்டு மனித உடலுக்கு மூன்று நன்மைகளை தர வல்லது என்கிறார்கள் விளையாட்டுத்துறை வல்லுனர்கள்.அவை;வேகம் [speed] வலு  [strength] ஆற்றல்வலு  [stamina]. இவற்றை மட்டைபந்து ஒருக்காலும் தரமுடியாது.அதற்கான வாய்ப்பும் அந்த விளையாட்டில் இல்லை.ஒருவர் பந்து வீச,அதை ஒருவர் அடிக்க ஏனைய அனைவரும் சோம்பி நிற்கும் விளையாட்டில் என்ன நன்மை விளைந்திட முடியும்.அதிக நேரம் கொளுத்தும் வெயிலில் காய்வதால் ஆற்றல் இழப்பும் தோல் புற்று நோயும் வேண்டுமானால் ஏற்படலாம்.
ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓடியவாறு விளையாடும் கால்பந்தையும் கூடைப்பந்தையும் தாவியும் குதித்தும் இடைவிடாது வலுக்கொண்டு ஆடும் கைப்பந்தையும் [volleyball] இந்த சோம்பேறிகளின் விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.
ஆகவே ஏகாதிபத்திய வெள்ளையர்களும் அவர்களது அடிவருடிகளும் நம் மீது திணித்த இந்த மட்டைப்பந்து என்ற அவமானத்தை துடைத்தெறிவோம்.நம் மண்ணுக்கேற்ற விளையாட்டுகளை விளையாடி உடல் உரம் பெறுவோம்.
இந்த விளையாட்டை அது தோன்றிய நாட்டிலேயே இப்படி காரி உமிழ்ந்தான் அறிஞன் பெர்னாட் சா.
”பதினோரு முட்டாள்கள் மற்றொரு பதினோரு முட்டாள்களுடன் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கிறார்கள்”

கருத்துகள் இல்லை: