சனி, 7 ஆகஸ்ட், 2010

்கே.பி.,புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தரவுகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பிலான வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் புலனாய்வுத்தரப்பினர் அறிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் எழுதிய நாட்குறிப்புகள் கூட இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களை அறிவதற்கு தன்னுடையதோ அல்லது ஏனைய செயற்பாட்டாளர்களுடையதோ ஒத்துழைப்புகள் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தொடர்பிலான தகவல்கள் அனைத்தையும் கொண்டுள்ள அவர்கள் அதன் அடிப்படையிலேயே விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்க அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய சிங்கள இனவாதி என கோத்தபாய பற்றி தம்மிடம் வர்ணிக்கப்பட்டதாக தெரிவித்த பத்மநாதன் அச்சத்துடன் அவரது இல்லத்துக்கு சென்ற போதும் அங்கிருந்த புத்தர் சிலை தன்னை சுதாகரித்துக் கொள்ள வழி செய்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வீட்டிலும் புத்தர் படம் இருப்பதாகவும் தன்னுடடைய மனைவியின் மதம் என்ற அடிப்படையில் புத்த மதம் தனக்கு அன்னியமாகப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், அச்சத்துடன் இருந்த தனக்கு புத்தர் சிலை தன்னம்பிக்கையை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் கோத்தபாயவை சந்தித்த போது மிகவும் பொறுமையாக தன்னுடன் பேசியதாகவும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், தமக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். ஒன்று விசாரணைக்கு ஒத்துக் கொள்ளாதது மற்றது அவர்களுடன் ஒத்துழைப்பது என்பதே ஆகும்.
ஒத்துழைக்காத பட்சத்தில் தாம் பல வருடங்களுக்கு தடுத்து வைக்கப்படலாம், அத்துடன் தன்னால் யாருக்கும் பலன் இருக்காது. எனினும் அவர்களுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் ஏதேனும் தமிழ் மக்களுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,  தற்போது தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இல்லத்திற்குள் தமக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாருடன் வேண்டுமானாலும் தொலைபேசியில், மின்னஞ்சல் போன்றவற்றில் தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர் யாரையேனும் சந்திக்க வேண்டுமானால் சில அதிகாரிகளின் அனுமதியுடன் அதனை மேற்கொள்ள முடியும் எனவும் விரும்பிய இடங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியுடன் சென்று வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: