செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

68 லட்சம் முறை "நவகார்' மந்திரம்,உலக அமைதிக்காக எழுதும் மகோற்சவம்

சென்னை: உலக மக்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளமுடன் அமைதியாக வாழ வேண்டி ஜைன மத மக்கள், 68 லட்சம் முறை, "நவகார்' மந்திரம் எழுதும் மகா மகோற்சவ விழா சென்னையில் பக்தி பரவசத்துடன் நடந்தது. சென்னை அயன்புரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயின் தாதாவாடி கோவில் வளாகத்தில், "நவ்கார்' மந்திரம் எழுதும் மகா மகோற்சவ விழா நடந்தது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஜைனர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 7,000 பேர், தலா 100 தடவை, "நவகார்' மகா மந்திரத்தை மொத்தமாக 68 லட்சம் முறை எழுதினர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொண்டனர். ஜெயின் சமூக மக்களின் புண்ணிய தலமாகக் கருதப்படும், குஜராத் மாநிலம் பாலிதானா ஆதிநாத் கோவிலின் மூத்த துறவிகள் பிரேம் பூஜ்யா ஆச்சார்யா ஸ்ரீ ஜெயின்சந்திர சாகர் சுரீஸ்வார்ஜி மற்றும் ஸ்ரீ ஹேம்சந்திர சாகர் சுரீஸ்வார்ஜி ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இவர்கள் தலைமையில் 25 துறவிகள் சென்னை வந்துள்ளனர். இதில், இளம் துறவிகள் சிலரும் இடம் பெற்றுள்ளனர்.
விழாவில் புதுவை கவர்னர் இக்பால் சிங், தமிழக போலீஸ் ஐ.ஜி., கருணாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, இளம் துறவிகளுடன் சேர்ந்து உபன்யாசம் செய்த மூத்த துறவி ஹேம்சந்திரசாகர் சுரீஸ்வார்ஜி, ஸ்ரீ ஜெயின்சந்திர சாகர் சுரீஸ்வார்ஜி கூறுகையில், "ஒவ்வொரு மதத்திற்கும் மந்திரங்கள் உள்ளன. அவை அனைத்துமே தனித்தனி சிறப்பம்சங்கள் கொண்டவை.
ஜெயின் சமூக மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை பெற்று நல்வாழ்வு வாழ்வதற்காக, "நவகார்' மந்திரம் எழுதும் நிகழ்ச்சி அமையும்' என்றார்.
முன்னதாக, சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் உள்ள ஜெயின் ஆராதனா பவனில், பாலிதானா ஆதிநாத் கோவில் போன்ற மாதிரி உருவாக்கப்பட்டது. இங்கு வரும் பக்தர்கள், "நவகார்' மந்திரம் கூறி அதை பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

கருத்துகள் இல்லை: