சனி, 7 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாட்டு செலவு 232 கோடியே 76 இலட்சம் ரூபாய்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாடு தொடர்பான செலவுகளுக்காக முதலமைச்சர் கருணாநிதி 73 கோடி ரூபாய் அனுமதித்தார்.அத்தொகையில், கொடிசியா அரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கத்திற்கான அரங்குகள் அமைத்தல், அரங்கத்திற்கான வாடகை, ஆய்வரங்க அமைப்புக் குழு தொடர்பான செலவுகள் 13 கோடியே 4 இலட்ச ரூபாய்; பொதுமக்களுக்கான பொதுஅரங்க நிகழ்ச்சிகளை நடத்திட, திடலைச் சமதளப்படுத்துதல், பந்தல் அமைத்தல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கான செலவுகள் 13 கோடியே 93 இலட்ச ரூபாய்;கண்காட்சி அரங்குகளை அமைத்தல் மற்றும் அவை தொடர்பான செலவுகள் 6 கோடியே 31 இலட்ச ரூபாய்;
மாநாட்டினையொட்டி நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்குபெற்ற அலங்கார ஊர்திகளுக்கும், கலைக்குழுவினர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் 6 கோடியே 30 இலட்ச ரூபாய்;மாநாட்டிற்கு வருகை தந்தோர்க்காக அமைக்கப்பட்ட உணவுக் கூடம், உணவுக்கான செலவுகள் 5 கோடியே 87 இலட்ச ரூபாய்;
மாநாட்டில் பங்குபெற வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைபுரிந்த அறிஞர் பெருமக்கள் தங்குவதற்கும், அவர்களின் போக்குவரத்துகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் 7 கோடி ரூபாய்;
மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்புமலர் தயாரிப்புப் பணிகளுக்கான செலவு 88 இலட்சம் ரூபாய்; இணையதள மாநாடு மற்றும் இணையதளக் கண்காட்சி தொடர்பான பணிகளுக்குரிய செலவு 2 கோடியே 30 இலட்சம் ரூபாய்;மாநாட்டிற்கு வருகை தந்த பெருமக்களை வரவேற்றல் மற்றும் மக்கள் தொடர்பு, விளம்பரப் பணிகளுக்கான செலவு 11 கோடியே 81 இலட்சம் ரூபாய்;
மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலருக்கான அலுவலகம் மற்றும் சிறப்புப் பணி அலுவலருக்கான அலுவலகம், பாதுகாப்புப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட இதர இனங்களுக்கான செலவுகள் 1 கோடியே 56 இலட்ச ரூபாய்;ஆக மொத்தம் 69 கோடி ரூபாய் செலவிடப்பட்டு; அனுமதிக்கப்பட்ட 73 கோடி ரூபாயில், 4 கோடி ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, முதலமைச்சர் கருணாநிதி, கோவை மாநகரில் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் 239 கோடியே 26 இலட்சம் ரூபாய் அனுமதித்தார்.
கோவை மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, சுகாதாரப் பணிகள், கழிப்பறைகள் மேம்படுத்துதல், ரங்க விலாஸ் மில், எஸ்.எல்.ஆர். சாலை, எல்.பி.ஏ. சாலை ஆகிய புதிய இணைப்புச் சாலைப் பணிகள் ஆகியவற்றுக்காக 46 கோடியே 59 இலட்சம் ரூபாய்;அவினாசி சாலை முதல் கொடிசியா வரை இணைப்புச் சாலைக்காக 1 கோடியே 85 இலட்சம் ரூபாய்;கொடிசியா சித்ரா இணைப்புச் சாலை மற்றும் அவினாசி சாலையில் விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக 3 கோடியே 65 இலட்சம் ரூபாய்;
விளாங்குறிச்சி ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுக்காக 1 கோடியே 41 இலட்சம் ரூபாய்;
சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, நீலாம்பர் ஆகிய இடங்களில் மின்விளக்குகள் அமைக்க 50 இலட்சம் ரூபாய்;நெடுஞ்சாலைத் துறை மூலம் 72 சாலைகளை மேம்படுத்துவதற்கு 53 கோடியே 35 இலட்சம் ரூபாய்;பொதுப்பணித்துறை மூலம் சுற்றுலா மாளிகை கட்டிடம் மற்றும் மின்வசதி மேம்பாட்டுக்காக 2 கோடியே 70 இலட்சம் ரூபாய்;சேத்துமடை முதல் ஆனைப்பாடி வரை பொதுப்பணித்துறை சாலை சீரமைப்புக்காக 88 இலட்சம் ரூபாய்;
செம்மொழிப் பூங்கா மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 20 கோடியே 43 இலட்சம் ரூபாய்;கோவை மாநகராட்சி நடைபாதைகளில் பேருந்து நிழல்குடைகள் அமைத்திட 21 கோடி ரூபாய்;கோவை மாநகராட்சியின் சொந்த நிதியில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு 25 கோடியே 40 இலட்சம் ரூபாய்;தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 55 கோடி ரூபாய்;
என மொத்தம் 232 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டு; அனுமதிக்கப்பட்ட 239 கோடியே 26 இலட்சம் ரூபாயில், 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: