சனி, 7 ஆகஸ்ட், 2010

தொண்டமானாறு பாலம் பக்தர்களின் பாவனைக்காகத் திறப்பு..!

வடமராட்சியின் பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு தொண்டமானாறு பாலத்தினூடான வீதி மக்களின் பாவனைக்காக நாளை திறந்துவிடப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் பருத்தித்துறை - யாழ்ப்பாண பிரதான நெடுஞ்சாலை வீதி அகலப்படுத்தும் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்ற இவ்வேளையில் வல்லைப் பாலமும் அகலப்படுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதனால் வல்லைப்பாலத்தினூடான போக்குவரத்து மிகவும் சிரமமானதாகக் காணப்படுகிறது. எனவே வலிகாமம் யாழ்ப்பாணம் மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அச்சுவேலியிலிருந்து - வறணம் - கதிரிப்பாய்ச்சந்தி - தம்பாலைச்சந்தி - காத்தாடிச்சந்தி ஊடாக தொண்டைமானாறு பாலம் வழியாக செல்வச்சந்நிதி முருகன் கோவிலை வந்தடையலாம். இம்முறை காவடி பாற்செம்பு, தூக்குக்காவடி என பெருவாரியான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவுள்ளனர். அத்துடன் தென்னிலங்கையிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வீதி திறந்து வைக்கப்படுவதால் பக்தர்களின் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டு இலகுவாகிவிடும்.

இதேவேளை எதிர்வரும் 10ம் திகதி காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: