திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்'

இந்தியா:சமீபகாலமாக, மொபைல்போன் வைத்திருப்பவர்களுக்கு மர்மமான ஒரு எஸ்.எம்.எஸ்., வருகிறது. அதில், "உங்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.அதை பெற, சர்வீஸ் சார்ஜாக சில லட்சம் ரூபாயை, எங்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அதன் பின், உங்களுக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்படும்' என்று ஆசையூட்டும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை படிக்கும் பலர், இது குறித்து தனது வீட்டிலுள்ளவர் களுக்கோ, நண்பர்களுக்கோ கூட தெரிவிக்காமல் ரகசியமாக செயல்பட்டு, கேட்கும் தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, கோடி ரூபாய் பரிசு தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாட்கள் பல கழித்தும் பரிசு வராத நிலையில், தாங்கள் ஏமாந்து விட்டோமென்பதை அறிந்து சிலர் போலீசில் புகார் அளிக்கின்றனர். பலர் தாங்கள் ஏமாந்து விட்டோமென்பதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, புகாரே கொடுப்பதில்லை.ஆன்-லைன் பரிசு மோசடி மூலம் இன்றைக்கு பலர் பல கோடி ரூபாயை இழந்துள்ளனர். ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்., தகவல் மூலம், பல லட்சம் ரூபாய்களை சுருட்டும் குற்றவாளிகள் குறித்து பல புகார்கள் போலீசாருக்கு வந்தன.

இதையடுத்து, பல கோடி ரூபாய்களை, தங்களின் மூளை திறமையால் கொள்ளை யடிப்பவர்கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில், நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆன்-லைன் பரிசு மோசடியில் பெரும்பாலும் நைஜீரியா நாட்டவர்களே ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொதுவாக, நைஜீரியர்கள் என்று கூறப்பட்டாலும் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த குற்றப் பின்னணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட, ஆப்பிரிக்காவிலுள்ள கானா, டோகோ, லைபீரியா, ஐவரிகாஸ்ட், நைஜீரியா, சீராலியோன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி உள்ளதே காரணமென்று அறியப்பட்டுள்ளது.ஏழ்மை, நோய், கல்வி இன்மை, ராணுவ ஆட்சி, உள்நாட்டு கலகம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.எனவே, வேறு வழியின்றி இந்த நாடுகளிலுள்ள இளைஞர் கள் இவ்வாறு மோசடி வேலை களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு மோசடி செய்வதற்கு பெரியளவில் மூலதனம் தேவையில்லை. ஒரு மொபைல் போனும், வங்கி கணக்கும் இருந்தாலே போதும். சில ரூபாய் செலவில் பலருக்கும் எஸ்.எம்.எஸ்., மற்றும் ஆன்- லைனில் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.அதில், பேராசை அதிகமுள்ள ஏமாளிகள் எளிதாக சிக்கி விடுகின்றனர். அவர்களை பலவகையில் மூளை சலவை செய்து முடிந்தவரை அவர்களிடமிருந்து பணத்தை மோசடி பேர் வழிகள் கறந்து விடுகின்றனர்.இந்த மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடமென்று கிடையாது. எந்த நாட்டுக்கு செல்கின்றனரோ அந்த நாடுகளில் தங்களது கைவரிசையை காட்டி ஏமாறுபவர்களிடம் பல கோடி ரூபாயை எளிதாக பறித்து விடுகின்றனர்.இவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடிப்பதும் எளிதான செயல் இல்லை. தங்களின் இடங்களை அவ்வப் போது மாற்றி விடுவார்கள். நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நைஜீரியாவிலுள்ள சில நகரங்களில் அந்த நாட்டு போலீசாரே செல்ல முடியாத நிலை உள்ளது.

ஐவரிகாஸ்ட் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்னை இருப்பதால், இவர்களை சொந்த நாட்டில் பிடிப்பது சுலபம் இல்லை. எனவே, இந்த மோசடி பேர் வழிகளை பிடிக்க பல நாட்டு போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.இத்தகைய மோசடி பேர் வழிகள் பெரும்பாலும் "ஹாட் மெயில்', "யாகூ', "நெட்ஸ்கேப்', "கேராமெயில்' உள்ளிட்ட சில இலவச மெயில் களிலேயே தாங்கள் முகவரி எதுவும் தெரிவிக்காமல் மொட்டையாக தகவல்களை அனுப்புவர். இன்டர்நெட்டில் "தனிப்பட்ட ஆய்வுக்காக உங்களது இ-மெயில் முகவரியை தரவும்' என்றோ "முகவரியை தெரிவிக்காமல் இ-மெயில் முகவரியை தரவும்' என்றோ சாதுர்யமாக செயல்பட்டு, மற்றவர்களின் இ-மெயில் முகவரியை கைப்பற்றி விடுகின்றனர்.

பணம், தங்கம், வைரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. அதை எங்கள் நாட்டிலிருந்து அனுப்பி வைப்பதில் சில சிக்கல் எழுந்துள்ளது.  எனவே, உங்கள் பரிசை விரைவாக அனுப்பி வைக்க குறிப்பிட்ட பணத்தை அனுப்பி வைக்கவும் இல்லையென்றால் பரிசு பொருள் உங்களுக்கு கிடைக்காது' என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.நகைகள், விலை உயர்ந்த உலோகங்கள் போன்றவற்றை காட்டி, "இவை கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டவை. எனவே, உங்களுக்கு மிக மலிவான விலைக்கு விற்கிறோம்.இதை மார்க்கெட்டில் வாங்குவதென்றால் அதிகமாக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டும்' என்று ஏமாறுபவர்களை மூளைச்சலவை செய்து, தங்களிடமிருக்கும் போலி சரக்கை ஏமாற்றி விற்றுவிடுகின்றனர்.

 "வெளிநாட்டிலுள்ள எனது நேர்மையான பாட்னர் தற்போது மிகுந்த பண நெருக்கடியில் சிக்கியுள்ளார். எனவே அவரது சிக்கலை தீர்க்க இந்த விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் ஆகியவற்றை குறைவான விலைக்கு விற்று தர கூறியுள்ளார்' என்று கதைவிட்டு, ஏமாந்தவர்களை எளிதில் ஏமாற்றி விடுகின்றனர்.இவர்களில் பலர், பெரிய நிறுவனத்தில் பணி செய்வதாகவோ அல்லது நைஜீரியா மத்திய வங்கியில் பணி செய்வதாகவோ கூறி மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.மேலும் சில மோசடிக்காரர்கள், "பணம் வேண்டுமெனில், முழு பெயர், வங்கி கணக்கு தகவல், ரவுண்டிங் எண்கள், வீடு மற்றும் அலு வலக தொலைபேசி, பேக்சி எண்கள் மற்றும் லெட்டர்ஹெட் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்' என்று விளம்பரம் வெளியிட்டு, தொடர்பு கொள்ளும் நபர்களிடம் மோசடி செய்கின்றனர்.

இவ்வாறு நைஜீரியர்கள் பல வழிகளில் தற்போது நாடு முழுவதும் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.எனவே, கோடிக்கணக்கான பரிசு போன்ற போலி தகவல்கள் வந்தால், அத்தகைய இ-மெயில் எஸ்.எம்.எஸ்., களை அலட்சியப்படுத்தி விட வேண்டும்.சிறிது சபலம் எழுந்தாலும் பணம் பறிபோய் விடும். எச்சரிக்கை
KIm - Korea,இந்தியா
2010-08-02 05:42:54 IST
இது பழைய கதை ! இன்னுமா மக்கள் இதை தெரியாமல் இருக்கிறார்கள் !! ஒரு உண்மை " உழைக்காமல் பணம் சம்பாதிக்க நினைப்பது ஆபத்தில் தான் முடியும் அப்படியே வந்தாலும் அது நிலைக்காது !! பேராசை பெரும் நஷ்டம் !! உழைத்து முன்னேற பார்க்கவும் !!...
SR - Kallakurichi,இந்தியா
2010-08-02 04:14:53 IST
என்னிடம் இது பற்றி ஆலோசனை கேட்ட பல நண்பர்களை இவர்களின் மோசடியைபற்றி கூறி காப்பற்றி இருக்கிறேன்....
கண்ணன் - Trichy,இந்தியா
2010-08-02 01:29:17 IST
நண்பர்களே, இதே போலே வெளிநாடு பயணம் செல்லும் போதும் கவனம் தேவை. நான் 2005 ம ஆண்டு பாங்காக் சென்ற பொழுது அங்கு உள்ள ஜெம்ஸ் பாக்டரி கு அழைத்து சென்றனர். அங்கு விலை அதிகம் என கூறி வைர மோதிரம் ஒன்றை ருபாய் பத்து ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இந்தியா வந்த பின்னர் தான் அது போலி என தெரிந்தது. அதனால் எச்சரிகையுடன் செயல்படுங்கள்....

கருத்துகள் இல்லை: