ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஜீயருக்குக் குவியும் கண்டங்கள்!

மின்னம்பலம் : கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகவே அது தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்ததுவரும் நிலையில், நேற்று (ஜனவரி 26) திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், “உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளைப் பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். எதற்கும் துணிவோம்” என்று கூறியிருந்தார்.
ஜீயரின் பேச்சுக்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இன்று (ஜனவரி 27) இது தொடர்பாக திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள், கல் எறிந்தாலும் சோடா பாட்டில் வீசினாலும் அதை அண்ணா வழியில் எதிர்கொள்வோம். அண்ணா கத்தியைத் தீட்டாமல் புத்தியைத்தான் தீட்டச் சொல்லியிருக்கிறார் அவர் வழியில் செயல்படுவோம்" என்றும் ஜீயரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரையடுத்துப் பேசிய திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "ஜீயர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி கல் எறிவதும் சோடா பாட்டில் வீசுவதும்தான் என்று இன்றுதான் புரிந்துகொண்டேன்" என்றார்.
ஜீயர் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "சோடா பாட்டில் வீசுவேன் கல் எறிவேன் என்று ஜீயர் கூறியது பொறுப்பற்ற பேச்சு, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது" என்று கூறியுள்ளார்.
ஜீயரின் பேச்சு தொடர்பாக ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன், "ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக, ‘எங்களுக்கும் கல்லெறியத் தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும்’ என்றெல்லாம் பேச்சளவிற்குக்கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கதும் ஆகும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரும் ஜீயர் பேச்சை கண்டித்து வரும் நிலையில் பாஜகவைச் சார்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "சோடா பாட்டில் வீசுவோம் என்பதை நல்ல அர்த்தத்தில்தான் ஜீயர் சொல்லியிருப்பார் எனவும் சோடாவைக் குடித்துவிட்டால் அது வெறும் பாட்டில்தான் " எனவும் ஜீயருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: