புதன், 8 பிப்ரவரி, 2017

எப்படியும் 20 க்கு மேற்பட்ட எம் எல் ஏக்கள் பன்னீருக்கு உண்டு .. சசிகலாவின் முதல்வர் கனவு கனவேதான்?

சென்னை: சசிகலாவின் முதல்வர் கனவு நிச்சயம் தவிடுபொடியாவது உறுதி என்று தகவல்கள் கூறுகின்றன. 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவாக வெளியேறினால் அல்லது அவருக்குப் பின்னால் வந்து நின்றால் நிச்சயம் சசிகலாவால் முதல்வராக முடியாது. பெரும் சிக்கலாகி விடும். சோழவந்தான் உள்ளிட்ட சில தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாகவே ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.
இது சசிகலா தரப்புக்கு பெரும் கிலியைக் கொடுத்துள்ளது. நேற்று இரவு முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் புகார்களுக்குப் பதிலளிக்க ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்கு வெளியே வந்த சசிகலாவின் முகம் வெளிறிப் போயிருந்தது இதையே காட்டுகிறது.

மொத்தம் 136 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவுக்கு, தற்போது சட்டசபையில் 135 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியமைக்க 117 பேர் தேவை. 135 பேரில் ஓ.பி.எஸ். எதிராக மாறி விட்டார்.
 மீதமுள்ள 134 பேரில் 20 பேர் விலகினால் அதாவது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக மாறினால், 114 பேர்தான் சசிகலா வசம் இருப்பார்கள். ஆட்சியமைக்க முடியாது.
அதேசமயம், திமுக ஆதரவுடன் ஓ.பி.எஸ். ஆட்சியில் நீடிக்க முயல்வாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு தேர்தலைச் சந்திக்க முயல்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிச்சயம் திமுகவின் ஆதரவை ஓ.பி.எஸ் பகிரங்கமாக கேட்பாரா என்பது சந்தேகம்தான்.
இருப்பினும் திமுக தானாக முன்வந்து ஓ.பி.எஸ்ஸுக்கு முட்டுக் கொடுக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி சட்டசபையை சஸ்பெண்ட் செய்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே எந்தப் பாதையில் இந்தக் குழப்பம் போகப் போகிறது என்பது தெளிவாகவில்லை என்பதே உண்மை. tamiloneindia

கருத்துகள் இல்லை: