ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பெ.மணியரசன் : அவசர சட்ட நகலை கண்ணிலே காட்டாமல் ஏமாற்றுவது ஏன்? மீண்டும் பீட்டா தடை கொண்டுவரும்?

thetimestamil.com :வனவிலங்குகள் நலச் சட்டத்தின் 11, 22ஆம் பிரிவுகள் மற்றும் அரசியல்சாசனத்தின் 37ஆம் பிரிவு ஆகியவை தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் புதிய அவசர சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :
தடைநீக்கி, சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்துவிட்டார், அவசரச் சட்டம் இதோ வந்துவிட்டது என்று நேற்று (21.01.2017) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்ச் செல்வம் அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அவசரச் சட்டத்தின் நகலை எங்கேயும் வெளியிடவில்லை. அதன் எழுத்துவடிவம் ( Text) திங்கள் கிழமைதான் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. திங்கள் கிழமை எழுத்து வடிவில் வருவதாகச் சொல்லப்படும் அவசரச்சட்டத்தைச் சொல்லி வெள்ளிக் கிழமையே “ வெற்றி வெற்றி” என்று முழங்குவது சரியா?
எழுதப்பட்ட வடிவத்தைக்கூட காட்டாமல், அவசரச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி, இலட்சோபலட்சம் களப் போராளிகளை வலியுறுத்துவது ஞாயமா? அறமா? இப்போக்கு முதலமைச்சர் மீதான நம்பகத் தன்மையை சீர்குலைக்காதா?

கடும் வெயில், கடும் பனி, கொட்டும் மழை, எல்லாவற்றையும் தாங்கி 6 நாட்களாகப் போராடும் இலட்சோப இலட்சம் தமிழ்மக்கள், குறிப்பாக இளம் பெண்கள், ஆண்கள், மாணவர்கள் முதலமைச்சரின் முழுமையற்ற அறிவிப்பை ஏற்காமல் தமிழர் உரிமைப் போராட்டத்தைத் தொடர்வது, தமிழினத்தின் வரலாற்று வீரத்தை, பெருமிதத்தை மீண்டும் நிலைநாட்டியதாக அமைந்துவிட்டது. இரவு பகலாகப் பல நாட்கள் நடத்தும் அறப்போராட்டத்தில் எந்த ஒழுங்கீனமும் இல்லை. சட்டம் ஒழுங்குச் சிக்கலும் இல்லை. சுற்றுச்சூழல் கேடும் இல்லை என்று நடுநிலையாளர்கள் பாராட்டுகிறார்கள். அதே வேளை தலைமை இல்லாத போராட்டம் என்றும் வியக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்குத் தலைமை இல்லை என்ற கருத்து வெளித்தோற்றம் மட்டுமே! தமிழன்னை தன் பிள்ளைகளின் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
இந்தியவிலங்குகள் நலச் சட்டம் 1960 என்பது நடுவண் அரசு சட்டம். இதில் உள்ள 11-இன் உட்பிரிவுகள் 1 மற்றும் 2, விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் வகைகளை விரித்துரைக்கிறது.
11இன் உட்பிரிவு 3 – எந்தெந்தச் செயல்கள் விலங்குகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளாகக் கருதப்பட மாட்டாது என்று விரித்துரைக்கிறது. இதில் இப்போது நமக்குத் தேவையான பகுதி -3 (a) பிரிவாகும். அது கூறுகிறது.
“3 (a) கால்நடையின் கொம்புகளை நீக்குவது, மலடாக்குதல், சூட்டுக்கோலால் குறியீடு போடுவது, மூக்கணாங்கயிறு போடுவது போன்றவை விலங்குகளைத் துன்புறுத்திய குற்றமாகாது”
இதில் ஏறுதழுவல் – சல்லிக்கட்டு என்பது சேர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அவசரச் சட்டத்தில் “ஏறுதழுவல்”சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்து மேற்படிச் சட்டம் பிரிவு 22 ( ii) காட்சிப்படுத்தவோ அல்லது பயிற்றுவிக்கவோ தடை செய்யப்பட்டுள்ள விலங்கை காட்சிப்படுத்துவதும் பயிற்றுவிப்பதும் தண்டைனைக்குரிய குற்றம்.” என்று கூறுகிறது.
நடுவணரசு காட்சிப்படுத்திடத் தடை செய்துள்ள விலங்குப்பட்டியலில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, காளை முதலியவை உள்ளன.
இந்தச் சட்டத்தின் 37ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
“37 அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தல் :
இந்தச் சட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு நடுவண் அரசு உத்திரவிடலாம். அதற்கான சூழ்நிலை இருக்கிறது என்று நடுவண் அரசு கருதினால் அவ்வாறு செய்யலாம். நடுவண் அரசு தனது இந்த அதிகார ஒப்படைப்பு முடிவை அரசிதழில் வெளியிட வேண்டும்.”
இவ்வாறு நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் பொது அதிகாரமாகவுள்ள பொதுப்பட்டியலிலிருந்து ஓர் அதிகாரத்தை மாநில அரசுக்கு நடுவண் அரசு வழங்கலாம் என்று இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 213 கூறுகிறது.
இப்பொழுது நமக்கு எழும் வினாக்கள்
இந்திய அரசு சல்லிக்கட்டு தொடர்பான அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளதை நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டிருக்கிறதா?
தமிழ் நாடு அரசு 23.01.2017 அன்று வெளியிடுவதாகக் கூறியுள்ள அவசரச் சட்டத்தில் மேற்படி விலங்கு துன்புறுத்தல் தடைச் சட்டத்திலுள்ள விதி 11 உட்பிரிவு 3ல் உள்ள விதிவிலக்குகளில் சல்லிக்கட்டு நடத்துவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?
விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டம் 22 கூறுவது போல் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இப்போது காளை இருப்பதை தமிழ் நாடு அரசு சட்டம் நீக்கிவிட்டதா?
இந்த வினாக்களுக்கான விடையை, போராடும் தமிழர்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரியும் வகையில் தெளிவாக தமிழ்நாடு அரசு சார்பில் நேற்றிலிருந்து விளக்காதது ஏன்?
அவசரச் சட்டம் என்பதையே ஒரு தற்காலிக ஏற்பாடு என்று போராடும் மக்கள் ஐயுறும்போது, “இது நிரந்தரமானது” என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொல்வது மட்டும் போதுமா? ஏன் இதுவரை முறையான விளக்கத்தை மாநில அரசு வெளிப்படையாகக் கூறவில்லை. எதையும் மறைக்க விரும்புகிறதா தமிழ்நாடு அரசு.
அடுத்து 2014ல் சல்லிகட்டைத் தடை செய்து உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள எதிர்வகைக் காரணங்களையும் சந்தித்து நிலைக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் இருக்க வேண்டும். இல்லையேல் நடுவண் அரசின் விலங்குகள் பாதுகாப்பு நல வாரியமும், வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவும் உடனடியாக உச்சநீதி மன்றத்தில் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்காடி மீண்டும் முறியடிக்கும் அவலம் ஏற்படும் என பெ. மணியரசன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: