ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அம்பேத்கார் :பாப்பனர்கள் புத்த மதத்தை முறியடிக்கவே மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் -தலைமுறை
தலைமுறையாக பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருக்கின்றனர். அப்படியானால் அவர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்? உச்சகட்ட நடவடிக்கையாக அவர்கள் மாமிசத்தை அறவே ஒதுக்கிவிட்டு சைவத்திற்கு மாறியது ஏன்? இரண்டு புரட்சிகளின் சங்கமம் என இதனைக் கூறலாம். பார்ப்பனர்களது தெய்வீக சட்ட வல்லுநரான மநுவின் அறிவுரைகளால் இந்த புரட்சிகர மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவருடைய ஆணைகளைப் புறக்கணித்தே இந்தப் புரட்சி நடைபெற்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையைப் பார்ப்பனர்கள் ஏன் மேற்கொண்டனர்?...
ambedkar 278ஒரு தந்திரோபாயமாகவே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை விடுத்து, பசுவை வழிபடத்தொடங்கினார்கள் என்று என் மனதிற்குப் படுகிறது. பார்ப்பனர்கள் ஏன் திடீரென்று பசுவை வணங்கத் தொடங்கினார்கள் என்ற புதிருக்கான விடையை பவுத்த மதத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் காணலாம். பவுத்த மதத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு சாதனமாகவே பார்ப்பனியம் பசு வழிபாட்டை மேற்கொண்டது எனலாம்;
பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இந்து மதத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்குவது சாத்தியமில்லை.

கெடுவாய்ப்பாக, இந்திய வரலாற்று மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணரத் தவறி விட்டனர். இந்தியாவில் பார்ப்பனியம் இருந்து வந்தது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தத்தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பார்ப்பனியமும் பவுத்தமும் நடத்தி வந்த போராட்டத்தையும் இந்தியாவின் மதத்திலும் சமூகத்திலும் அரசியலிலும் அழிக்க முடியாத சில முத்திரைகளைப் பதித்ததையும் இவர்கள் முற்றாகக் காணத் தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

பவுத்த மதம் ஒரு காலத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மை மக்களின் மதமாக இருந்து வந்தது. பல நூற்றாண்டு காலம் அது பரந்த மக்கள் பகுதியினரின் மதமாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. வேறு எந்த மதமும் இதற்கு முன்னர் செய்யாத வகையில் அது பார்ப்பனியத்தை எல்லா பக்கங்களிலும் தாக்கி வந்தது. பார்ப்பனியம் அச்சமயம் தேய்ந்து வந்தது; அவ்வாறு இறங்குமுகத்தில் இல்லையென்றாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் அது இருந்தது. பவுத்த மதம் வெகுவேகமாகப் பரவி வந்ததன் விளைவாக பார்ப்பனர்கள் அரசவையிலும் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்து வந்தனர். பவுத்த மதத்திடம் தாங்கள் அடைந்த தோல்வியால் அவர்கள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தனர்; பொருமிக் கொண்டிருந்தனர்; தாங்கள் இழந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் மீட்கத் தங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

பவுத்தம் பரந்துபட்ட மக்கள் பகுதியினரைப் பெரிதும் கவர்ந்திருந்தது; அவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய நிலைமையில் பவுத்தர்களின் வழிமுறைகளைக் கைக்கொண்டும் பவுத்த தத்துவத்தை அதன் தீவிர வடிவில் கைப்பற்றியும் பவுத்தர்களை எதிர்த்துப் போராடுவதைத் தவிர, பார்ப்பனர்களுக்கு வேறு வழி ஏதும் இல்லாதிருந்தது. புத்தரின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றியவர்கள் அவரது சிலைகளை வைப்பதிலும் தூண்களை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு பல கோவில்களைக் கட்டினர்.

அவற்றில் சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் போன்றோரின் சிலைகளை நிறுவி வந்தனர். பார்ப்பனியத்தில் இதற்கு முன்னர் இடம் பெற்றிராத கோவில்களும் விக்கிரகங்களும் இப்படித்தான் இந்து மதத்தில் நுழையத் தொடங்கின. யாக யக்ஞங்களையும் விலங்குகளை குறிப்பாக பசுவை பலியிடுவதையும் கொண்ட பார்ப்பனிய மதக்கோட்பாடுகளை பவுத்தர்கள் நிராகரித்தனர். பசுவதையை பவுத்தர்கள் கண்டித்ததானது மக்களைப் பெரிதும் கவர்ந்தது; அதிலும் குறிப்பாக அவர்கள் விவசாயிகளாக இருந்ததும் பசு மிகவும் பயனுள்ள விலங்காக இருந்ததும் இதற்கு முக்கியமான காரணமாகும். 


பவுத்தத்தை முறியடிக்கவே பார்ப்பனர்கள் மரக்கறி உண்டனர் - II 

அக்காலத்தில் பார்ப்பனர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களை கவுரவிப்பதற்கு பசுவைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி "கோக்னா' என்று அழைக்கப்பட்டு வெறுக்கப்பட்டார். இதுபோன்றே பசு வதையைச் செய்பவர்கள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர்.

இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக யக்ஞத்தை நிறுத்துவதையும், பசு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பவுத்தர்களுக்கு எதிராக தங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை.

மாட்டிறைச்சி உண்பதை பார்ப்பனர்கள் நிறுத்தியதன் நோக்கம் பவுத்த பிக்குகளிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே என்பது, பார்ப்பனர்கள் மரக்கறி உணவுக்கு மாறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பார்ப்பனர்கள் சைவ உணவாளர்களாக மாறியது ஏன்? அவர்கள் மரக்கறி உணவாளர்களாக மாறவில்லை என்றால் தங்களுடைய எதிராளிகளிடமிருந்து அதாவது புத்த மதத்திடமிருந்து தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதே இக்கேள்விக்கு அளிக்கக்கூடிய சரியான பதிலாக இருக்க முடியும்.

புத்த மதத்துடன் ஒப்பிடும்போது, பார்ப்பனியம் பொது மக்களின் நன்மதிப்பை இழக்கக் காரணமாக இருந்த ஓர் அம்சத்தை இங்கு நினைவுகூர்வது அவசியம். விலங்குகளைப் பலியிடும் நடைமுறையே அந்த அம்சம். இது, பார்ப்பனியத்தின் அடிப்படை சாராம்சமாக இருந்தது. அதே நேரத்தில் புத்தமதம் இதைக் கடுமையாக எதிர்த்தது. எனவே விவசாயத்தை தொழிலாகக் கொண்ட பெருவாரியான மக்களிடையே புத்தமதம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்ததும் பசுக்கள், எருதுகள் உட்பட விலங்குகளைக் கொன்று குவிக்கும் பார்ப்பனியத்திடம் அவர்கள் அருவருப்பு கொண்டிருந்ததும் முற்றிலும் இயல்பே.

இத்தகைய நிலைமையில் பார்ப்பனர்கள் தாங்கள் இழந்த செல்வாக்கை எவ்வாறு மீட்க முடியும்? இறைச்சி உண்பதைக் கைவிடுவதன் மூலமும் மரக்கறி உண்பவர்களாக மாறுவதன் மூலமும்தான் இதைச் சாதிக்க முடியும். இதைத்தான் அவர்கள் செய்தார்கள். பார்ப்பனர்கள் சைவ உணவாளர்களாக மாறியதன் நோக்கமே இதுதான் என்பதை பல்வேறு வழிகளில் மெய்ப்பிக்க முடியும்.

விலங்குகளைப் பலியிடுவது மோசமான செயல் என்பதைப் பார்ப்பனர்கள் உள்ளபடியே உணர்ந்து செயல்பட்டார்கள் என்பது உண்மையானால் அவர்கள் செய்திருக்க வேண்டியதெல்லாம் யாகங்களில் விலங்குகளைப் பலியிடுவதை நிறுத்துவதுதான். அவர்கள் சைவ உணவாளர்களாக மாறவேண்டிய அவசியமே இல்லை.அவ்வாறிருக்கும்போது அவர்கள் மரக்கறி உணவை மேற்கொண்டதற்கு ஒரு முக்கிய உள்நோக்கம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. இரண்டாவதாக, அவர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக மாறவேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால் பவுத்த பிக்குகள் சைவ உணவு உண்பவர்கள் அல்லர்.

இவ்வாறு கூறுவது பலரை வியப்படைய வைக்கலாம். அகிம்சைக்கும் புத்த மதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது, அடிப்படையானது, இன்றியமையாதது என்று மக்களிடம் நிலவும் ஆழமான நம்பிக்கையே இதற்குக் காரணம். பவுத்த பிக்குகள் புலால் உணவைத் தொடுவதில்லை, அதனை அவர்கள் தவிர்த்து வந்தார்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. இது தவறு...

இதிலிருந்து, பவுத்த பிக்குகளே புலால் உண்டனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அப்படியிருக்கும்போது பார்ப்பனர்கள் புலால் உணவைக் கைவிடக் காரணமே இல்லை. பின்னர் ஏன் பார்ப்பனர்கள் இறைச்சி உண்பதை விடுத்து, மரக்கறி உணவாளர்களானார்கள்? தாங்களும் பவுத்த பிக்குகளைப் போன்றவர்களே என்பதை பொதுமக்கள் பார்வையில் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்பியதே இதற்குக் காரணம்... புலால் உணவு உண்பதில் பவுத்த பிக்குகளின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றியிருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

பவுத்தர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பார்ப்பனர்கள் கொண்டிருந்த பேரார்வத்தை நிறைவேற்ற அது உதவ முடியாது. யாக யக்ஞங்களுக்காகப் பசுக்கள் பலியிடப்படுவதை எதிர்ப்பதன் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றிருந்த பவுத்தர்களை அந்த உன்னத இடத்திலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள்.

தங்களது இந்த குறிக்கோளை அடைவதற்கு பார்ப்பனர்கள் மற்றவர்களது கண்களில் மண்ணைத் தூவும் சாகசச் செயல்களில் ஈடுபட வேண்டியிருந்தது. தீவிரவாதத்தை தீவிரவாதத்தால், முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கையே இது. இடதுசாரிகளை சமாளிப்பதற்கு எல்லா வலதுசாரிகளும் வழக்கமாகக் கைக்கொள்ளும் தந்திரமே இது.

பவுத்தர்களை முறியடிப்பதற்கு அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று மரக்கறி உணவாளர்களாக மாறுவதுதான் பார்ப்பனர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.


(டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு - 7, பக்கம்: 344 - 347)  .ambedkar.in/ambedkar/s

கருத்துகள் இல்லை: