மின்னம்பலம் : வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில படங்கள் வந்து விழுந்தன. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மாப்பிளை சபரீசன் ஆகியோரின் படங்கள்தான் அவை.
என்ன திடீரென இவர்கள் படம் வருகிறதே என்று யோசிப்பதற்குள், அடுத்த டெலிகிராமில் செய்தி வந்தது.
“கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக தலைவரான ஸ்டாலினின் மகன் உதயநிதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஐபேக் ஆலோசனை கொடுத்தது. ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப் போகிறார் என்று திமுகவினர் பேசத் தொடங்கினர். இது பெரும்விவாதமாகவே மாறியது. இந்நிலையில் திருவாரூர் போன்ற தொகுதியில் நிற்பதை விட சென்னைக்குள்ளேயே சேஃப்டியான தொகுதியான தனது தாத்தா கலைஞர் வெற்றிபெற்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்றார் உதயநிதி ஸ்டாலின். அந்தத் தொகுதியை குறிவைத்து கிட்டத்தட்ட பணிகளை தொடங்கி செய்துகொண்டிருந்த பாஜகவின் குஷ்பு திடீரென தொகுதி மாற்றப்பட்டார்.
அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. உதயநிதி வென்றார்.
தேர்தலுக்கு முன்பு உதயநிதி தேர்தலில் நிற்பாரா என்று விவாதித்தது போல, தேர்தலுக்குப் பின் உதயநிதி அமைச்சர் ஆவாரா என்ற கேள்வி வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எழுந்தது. உதயநிதி நிச்சயம் அமைச்சராவார் என்று பலரும் திமுகவில் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி பெயர் இல்லை. அவரது நண்பரான அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வி முதலில் உதயநிதிக்குத்தான் என முடிவு செய்யப்பட்டு திடீரென மாற்றப்பட்டது என்றனர் திமுக மூத்த பிரமுகர்கள். உதயநிதி சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சட்டமன்றத்திலும், வெளியேயும் அவரை திமுகவினர் முதல்வருக்கு அடுத்த இடத்தில் வைத்துதான் அழகு பார்த்து வருகின்றனர்.
இப்படியே ஆறு மாதங்கள் ஓடிய நிலையில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று அன்பில் மகேஷ் தொடங்கி செந்தில்பாலாஜி என போய் மூத்த அமைச்சரான கே.என். நேரு கூட ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் உதயநிதி அமைச்சர் பதவி வகிக்க பொருத்தமானவர் என்று கருத்து தெரிவித்தார். இப்படி பல்வேறு அமைச்சர்களும் திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர் மட்டுமல்ல உதயநிதி துணை முதல்வராகவேண்டும் என்றும் பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் டிசம்பர் 26 கோவையில் கட்சி நிகழ்வில் பதிலளித்தார் உதயநிதி. ’இங்கே பேசியவர்கள் நான் அமைச்சராக வேண்டும் என்றார்கள். சிலர் துணை முதல்வர் பதவி வரை கொண்டுபோய் விட்டார்கள். ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னைப் பற்றி தினமும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அதற்கெல்லாம் ஆசைப்படுபவன் அல்ல. என்றும் மக்கள் பணியில் உங்களோடு ஒருவராக உழைக்கிறேன். உங்களுக்குத் துணையாக தலைவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்’ என்று பேசினார் உதயநிதி.
துணை முதல்வர் லட்சியம் அமைச்சர் நிச்சயம் என்பதுதானே திமுகவின் டாப் லெவலில் கூட உதயநிதி பற்றிய யூகமாக இருந்தது. ஏன் இப்படி பதில் சொல்லியிருக்கிறார் உதயநிதி என்று விசாரித்தால்... ‘உதயநிதியை வெறும் சட்டமன்ற உறுப்பினராக பார்க்க அவரது அம்மா துர்கா ஸ்டாலின் விரும்பவில்லை. தன் கணவர் ஸ்டாலினுக்கு அப்போதைய தலைவர் கலைஞர் காட்டிய தாமதத்தை உதயநிதிக்கு இப்போது ஸ்டாலின் காட்டிவிடக் கூடாது என்பதில் துர்கா தீவிரமாக இருக்கிறார். இந்தப் பொங்கலுக்கு முடியாவிட்டாலும் அடுத்த பொங்கலின் போது உதயநிதி துணை முதல்வராக இருக்க வேண்டும் என்பதே துர்காவின் அழுத்தமான ஆர்வமாக இருக்கிறது.
ஸ்டாலினும் தனது மகனான உதயநிதி மீது கொள்ளைப் பிரியம் கொண்டவர். பொதுவெளியிலோ, கட்சி நிகழ்ச்சிகளிலோ அதை அவர் பெரிதாக வெளிக்காட்டியதில்லை என்றாலும் உதயநிதியின் நிகழ்ச்சிகள், அவர் பேச்சு என அவரது வளர்ச்சி பற்றி அமைச்சர்களிடம் அடிக்கடி போன் போட்டு விசாரித்துக்கொண்டே இருக்கிறார் ஸ்டாலின்.
கடந்த டிசம்பர் மாதத்துக்குள் உதயநிதியின் சினிமா ப்ராஜக்ட்டுகளை எல்லாம் முடிக்கச் சொல்லியிருந்தார் முதல்வர். அதற்காகவே பொள்ளாசியில் முகாமிட்டு படப்பிடிப்பு பணிகளை விரைவுபடுத்தி வந்தார் உதயநிதி. ஆனால் நவம்பர் தொடர் மழை மற்றும் பல பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதமானது. இன்னும் சில மாதங்கள் டயம் எடுக்கும் போலிருக்கிறது.இதனால் உதயநிதியின் அடுத்த கட்ட ப்ரமோஷன் தாமதமாகிறது.
அதேநேரம் இப்போதே அமைச்சர் பொறுப்புக்கான ஹோம் வொர்க்குகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார் உதயநிதி. அரசாங்க மொழி, நுட்பம் ஆகியவற்றை அவருக்கு சில நம்பகமான அதிகாரிகளே சொல்லித் தருகிறார்கள். ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அத்துறையில் பெரிய தவறுகள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டார். மக்கள் நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுத்து அவற்றை குளறுபடி இல்லாமல் செயல்படுத்தும் பொறுப்பை அவர் தன் துறை அதிகாரிகளுக்கு கொடுத்திருந்தார். அதேபோல இப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது துறையில் அதிக தலையீடுகளை வைத்துக்கொள்வதில்லை. அதிகாரிகளோடு ஆலோசித்தே முடிவெடுக்கிறார். இதுபோல உதயநிதி அமைச்சர் ஆகும்போதும் தனது துறை க்ளீன் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இன்னும் எந்தத் துறை என்றெல்லாம் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் அவர் அமைச்சராகவோ துணை முதல்வராகவோ ஆகும்பட்சத்தில் கெட்ட பெயர் எடுக்காமல் நற்பெயர் எடுக்கும் வகையில் எந்தெந்த அதிகாரிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பட்டியல் கூட தற்போது தயாராகி வருகிறது.
இந்த நிலையில்தான் திடீர் ட்விஸ்ட்டாக முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் வெற்றிக்கான ஸ்டேட்டர்ஜி சபரீசனுடையதுதான் என்பதை முதல்வர் ஸ்டாலினே தனக்கு நெருக்கமானவர்கள் பலரிடமும் கூறியுள்ளார். ஐபேக்கை அழைத்து வந்தது முதல் ஐபேக் நிறுவனத்துக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் உரசலை களைந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டதில் சபரீசனுக்கு பெரும் பங்கு உண்டு. இப்போதும் பல அதிகாரிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது மகன் உதயநிதியை போட்டோ எடுத்துக் கொண்டு சந்தித்தால் சபரீசனை போட்டோ இல்லாமல் சந்தித்து வருகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். உதயநிதி வெளிப்படையான அதிகார முகமாக இருக்கிறார். சபரீசனோ முழுக்க முழுக்க பின்னணி வியூக வகுப்பாளராக இருக்கிறார்.
இதைப் பயன்படுத்தி உதயநிதிக்கு வேண்டியவர்களைப் பற்றி சபரீசனிடம் தவறாக சொல்வது, அதேபோல சபரீசனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் பற்றி உதயநிதியிடம் வேறு வேறாக சொல்வது என சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் குடும்பத்துக்கும் தெரியவர, ‘உங்கள் இருவரிடமும் இருவரைப் பற்றியும் யார் தவறாக சொன்னாலும் நீங்களே உட்கார்ந்து பேசிக்கொள்ளுங்கள். யார் இடைவெளி ஏற்படுத்த முயன்றாலும் அதற்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். சபரியும், உதயநிதியும் இதுபற்றிக் கேட்டு சிரித்திருக்கிறார்கள்” என்று முடிந்தது டெலிகிராம் மெசேஜ்.
“எந்த உறவையும் பிரித்துக் குளிர் காயும் முயற்சி அதிகார பீடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது, சோழன் காலத்தில் இருந்து ஸ்டாலின் காலம் வரை” என்றொரு பஞ்ச் டயலாக்கை போட்டோ ஷாப் செய்து அனுப்பியது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக