துரை வைகோ அறிக்கை: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மத்திய அரசு ஆணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தமுடியவில்லை. இதன்காரணமாக, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தச் சூழலில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திர சூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
அஜய் பூஷண் பாண்டே குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு அறிவித்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றி 2021-2022 ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை செல்லும். இது குறித்து இனி விசாரிக்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றது.
சமூகநீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கங்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வரவேற்று மகிழ்கின்றேன்.
அன்புடன்,
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்' சென்னை - 8
08.01.202
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக