Seshathiri Dhanasekaran : திராவிட லெனின் டாக்டர் டி எம் நாயர் 154 பிறந்தநாள் இன்று.
டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் பிறந்தார்.
டாக்டர் டி.எம்.நாயர் தனது பள்ளிக்க்லவியை கேரளத்தில் முடித்த பின்பு உயர்கல்வி பெற சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அறிவியலை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த டி.எம்.நாயர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் படித்த போது மூன்று ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். பள்ளிப்பருவத்திலேயே கூர்மையான அறிவும் கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வமும் அவருக்கு இருந்தது.
அறிவியல் ஆராய்ச்சிக்கு தகுதியான மாணவர் இவர் என்று அவருடைய பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்றார்.மேல்நாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர எண்ணி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.சி.எம் பட்டம் பெற்றார்.
மாணவப்பருவத்திலேயே அரசியல், பொதுப்பணி என செயல்பட்ட நாயர் அவர்களால் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் மருத்துவ தொழிலை மட்டுமே செய்து கொண்டு பார்வையாளராக இருக்க முடியுமா? இந்திய மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் சுதந்திரம் பெற வேண்டியும் அரசியலில் இணைந்து கூட்டங்கள், மாநாடுகள் என பங்காற்றினார்.
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும் தேசிகாச்சாரியின் வறட்டுப் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டிய பதவியை உதறி விட்டார். அப்போது இழந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதே மாநகராட்சியின் பிரதிநிதிக்கான தேர்தலில் வென்று 1912 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.
டாக்டர் டி.எம். நாயரும் சர்.பி. தியாகராயரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தபோது பார்ப்பனரல்லாத மக்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களின் மனப்போக் கை நன்கு அறிந்த டாக்டர் சி. நடேசனார், அவர்களை அணுகித் தாம் நிறுவிய திராவிடச் சங்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை விளக்கி அவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களும் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகி, 1916ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் “தென் னிந்திய நல உரிமைச் சங்கம்” என்னும் நீதிக்கட்சி யைத் தொடங்கினர்.
நீதிக்கட்சியை உருவாக்கியதில் நடேச முதலியாரும் தியாகராயச் செட்டியாரும் கூட்டாளிகளாக இருந்திருப் பினும் கட்சியின் அமைப்பிற்கும், விதிகளுக்கும் கொள் கைகளுக்கும் பெரும்பான்மையும் நாயரே பொறுப் பாவார். நீதிக்கட்சியை வடிவமைத்ததில் உள்ளூர்த் தாக்கங்களைவிட மேற்கத்திய அரசியல் மதிப்பீடுகளின் தாக்கமே அவரிடம் மிகுதியும் செல்வாக்குச் செலுத்தின. நீதிக்கட்சி கொள்கையில், பிரிட்டிஷ் சனநாயகவாதிகளின் மரபும் பிரெஞ்சுத் தீவிரவாதிகளின் மரபும் மணம் பரப்புவதைக் காணலாம்.
நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிசக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர். பிரெஞ்சு நாட்டின் புரட்சியாளர் ஜியார்ஜியஸ் கிளமென்சோவின் (Georges Clemenceau 1841-1929) ‘ரேடிகல் ரிபப்ளிகன் கட்சியின்’ (Radical Republican Party) தாக்கம் நாயருக்கு இருந்தது. அக்கட்சியின் விதிமுறைகளைப் பின்பற்றியே தன் இயக்கத்தைக் கட்டமைத்தார்.
அதனால்தான் கட்சியின் பெயர் South Indian Liberal Federation என வைக்கப்படலாயிற்று. இதன் தமிழாக்கம் ‘தென்னிந்தியர் விடுதலைக் கழகம்’ என்றி ருந்திருக்க வேண்டும். ஆனால் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்றே வழங்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கு வதென்று முடிவு செய்யப்பட்ட முதல் கூட்டத்திலேயே கட்சிக்கான முதல் பணியாகப் பத்திரிகை தொடங்குவ தெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி நடத்திய தமிழ் இதழ் ‘திராவிடன்’. தெலுங்கு ஏடு ‘ஆந்திரப்பிரகாசிகா’ இவ்ஏடுகளுக்கு, முறையே பக்தவத்சலம் பிள்ளையும், பார்த்தசாரதி நாயுடுவும் ஆசிரியர்களாயிருந்தனர்.
26.2.1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’க்கு நாயரே ஆசிரியராக இருந்தார். இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு ஜியார் ஜியஸ் கிளமென்சோ (Georges Clemenceau 1841- 1929) 1880 முதல் நடத்திய ‘லா ஜஸ்டிஸ்’ (La Justice) என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார்.
1881இல் இந்துச் சட்டத்திற்கான தனது பணியில் ஜே.எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பகுப்புசார்ந்த சொற்களைப் பயன்படுத்தியது முதல் 1916ஆம் ஆண்டுவரை பலரும் அச்சொல்லை ஆங்காங்குப் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் பிரெஞ்சு நாட்டு ராடிக்கல் ரிபப்ளிகன் பார்ட்டி பயன்படுத்திய பிரபுக்கள் அல்லாதார் என்ற சொல்லின் தாக்கமும் சேர்ந்து தான் நாயரிடம் பிராமணரல்லாதார் என்ற அடையாளமாக உறுதிபெற்றது.
1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் டி.எம். நாயர் அவர்களைப் பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில்,
“அவர் காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம். நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்” என்றார்.
நாயர் நீதிக்கட்சியில் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் 24 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவ ராகத் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வழி நடத்தினார். நீதி (Justice) என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பை மட்டும் அவர் ஏற்றுக்கொண்டார்.
“நீதிக்கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்ப தல்ல. எங்களுக்குச் சமூக நீதி வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டிஷ் அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தரவேண்டும். நீதிக்கட்சி இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது. அதேநேரத்தில் பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக் கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும். அதுவே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டும், எழுதியும் வருவதற்காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்து சென்று வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் நாயர்.
டாக்டர் நாயர் நீதிக்கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவைத் திரட்டித் தந்ததில் நிகரற்றவராக விளங்கினார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிரா விடர் அமைப்புகள் நடத்தின. இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக் கப்படுகிறது. பெரும் மக்கள்திரள் என்ற முறையிலும் நாயரின் ஆவேசமான உரை என்ற விதத்திலும் இக் கூட்டம் நீதிக்கட்சி வளர்ச்சியிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
முதலில் எழும்பூர் ஏரி மைதானத்தில் இம்மாநாடு நடத்துவதற்கு மைதானத்தில் விளையாட வரும் உயர் வகுப்பினர் தடை ஏற்படுத்தினர். அப்போது அத்தடை யை நீக்கி மாநாடு நடப்பதற்கு டி.எம். நாயர் உதவினார்.
மாநாட்டில் பேசிய டி.எம். நாயர் பஞ்சமர்கள் இது போன்று அடக்கப்படுவார்களானால் அதை மீறுவதற் கான வழி வன்முறையற்றதாகவே இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது என்றார். மேலும் நாயர், அம் மக்களை விழித்தெழுந்திடுமாறு வேண்டுகோள் விடுத் தார். அங்ஙனம் எழுந்து நிற்காவிடின் என்றென்றுமாக வீழ்ந்துபோவோம் என்றும் எச்சரித்தார்.
டி.எம். நாயர் அவர்களின் உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க உரை எனப் பலராலும் புகழ்ந்து பாராட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில் பார்ப்பன இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டு தகராறு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பாரதியார் தனது கட்டுரையில்,
“சென்னைப் பட்டினத்தில் நாயர் சாதிக் கூட்ட மொன்றில் பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் இந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்” என்றும்,
என்னடா இது இந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
அடே, பார்ப்பானைத் தவிர மற்ற சாதியாரெல் லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகின்றனர். அவர்கள் எல்லோரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? என்று எழுதியிருந்தார். மேலும் நீதிக்கட்சியின் ஒப்பற்ற தலைவர் டி.எம். நாயரை “இந்து மத விரோதி” என அடையாளப்படுத்தினார்.
டாக்டர் நாயர் 1918 அக்டோபர் 2ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாத அரசியல் சீர்திருத்தம் தோல்வியையே தழுவும் என் றார். 1909இல் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டதைப் போலவே பிராமணரல்லாதாருக்கும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பேசினார். மேலும் இந்தியாவில் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நடைபெறும் கொடுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆதர வையும், மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு, 1919 சனவரி 7இல் டாக்டர் நாயர் வெற்றிப் பெரு மிதத்துடன் சென்னை வந்தடைந்த பிறகு ‘சவுத்பரோ குழு’ அறிக்கையை வெளியிட்டது. அதில் பிராமணரல் லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை வழங்கப்படவில்லை.
ஆதலால், நீதிக்கட்சி மீண்டும் டாக்டர் நாயர் தலைமையில் ஒரு குழுவை இங்கிலாந்துக்கு அனுப்பத் தீர்மானித்தது. டாக்டர் நாயர் நீரிழிவு நோயினால் மிகவும் நலிவுற்றிருந்தார். தன் நலிவுற்ற உடல் நிலையைப் பற்றிச் சிந்தியாது, பிராமணரல்லாதாரின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, 1919 மே 6ஆம் தேதி மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணமா னார். சூன் 19ஆம் தேதி இங்கிலாந்தை அடைந்தார். இங்கிலாந்தில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் லார்டு செல்போர்ன் அவர் களிடம் சூலை 18ஆம் தேதி நாயரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால் டாக்டர் நாயர் சூலை 17ஆம் தேதி காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் ‘கோல்டன் கிரீன்’ என்ற இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று இந்திய முறைப்படி எரியூட்டப்பட்டது. இறுதிப் பயணத்தில் நீதிக் கட்சித் தலைவர்களும் அவரது ஐரோப்பிய நண்பர் களும் கலந்துகொண்டனர். அப்போது இங்கிலாந்தில் இருந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. டாக்டர் நாயரின் இணைபிரியா நண்பர் என்று அறியப்பட ‘இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார் கூட கலந்து கொள்ளவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக