Sivasankaran Saravanan : சென்னை ராயப்பேட்டையில் பைலட் சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நிறைய ஆங்கிலப்படங்கள் அதில் தான் ரிலீஸ் ஆகும்.
அதன் பெயர்க்காரணம் குறித்து எனக்கு எப்போதும் சுவாரசியம் உண்டு.
சென்னையின் வரலாறுகளை தொகுத்துவருபவரான திரு. ஶ்ரீராம் அவரது வலைப்பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டபோது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
Pilot என்பது ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய பேனா தயாரிக்கும் நிறுவனம். குறிப்பாக மையூற்றி எழுதும் fountain பேனாக்கள். இன்றும் pilot பேனா மற்றும் இங்க் வகைகள் முன்னணியில் உள்ளன.
1952ம் ஆண்டு சென்னையை சேர்ந்த திரு. பரஞ்சோதி ஆரோக்கியசாமி சஞ்சீவி என்பவர் ஜப்பான் பைலட் பேனா கம்பெனியிடம் லைசென்ஸ் பெற்று சென்னையில் The Pilot Pens Co Ind Pvt Ltd என்ற இங்க் பேனா தயாரிக்கும் தொழிலில் கால் பதிக்கிறார்.
சென்னையில் தயாரான indian pilot இங்க் பேனாக்களின் அனுபவத்தை 40 வயதுக்கு மேலான பெரும்பாலான நபர்கள் பெற்றிருப்பார்கள் என நம்புகிறேன். பைலட் பேனா வின் வளர்ச்சி முதலாளி பரஞ்சோதி ஆரோக்கியசாமிக்கு நல்ல லாபத்தை தந்தது. எனவே அந்த லாபம் தந்த முதலீட்டில் ராயப்பேட்டை பைலட் பேனா கம்பெனி இருந்த அதே இடத்தில் பைலட் சினிமா தியேட்டரை 1968 ம் ஆண்டு நிர்மாணிக்கிறார். பால்பாயின்ட் பேனாக்களின் வருகை மற்றும் புது பேனா கம்பெனிகளின் போட்டி காரணமாக பைலட் இந்தியா பேனா கம்பெனி தனது உற்பத்தியை 1978 ம் ஆண்டு நிறுத்திக்கொண்டது. ஆனாலும் அது தந்த பைலட் சினிமா தியேட்டர் மட்டும் 2014 ம் ஆண்டுவரை தொடர்ந்து இயங்கியது. அந்த பைலட் சினிமா தியேட்டரும் இடிக்கப்பட்டுவிட்டது. பைலட் இந்தியா பேனாவின் எஞ்சியிருக்கும் ஒரே அடையாளமாக ராயப்பேட்டையில் உள்ள Pilot lane பைலட் சந்து மட்டும் இன்றும் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக