ஞாயிறு, 9 ஜனவரி, 2022

வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அவர்களின் ஒரே நம்பிக்கை..' மவுனம் கலைத்த மாயாவதி- திடீர் அட்டாக் ஏன்

  Vigneshkumar -  Oneindia Tamil :  லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரை அமைதியாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி திடீரென பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம் சமீபத்தில் தான் அறிவித்தது.
வரும் பிப். 10 முதல் தேர்தல் தொடங்குகிறது.
இதில் பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக உபி-இல் ஏழு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அங்கு முதற்கட்ட தேர்தல் பிப். 10ஆம் தேதி தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து கடைசிக் கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் மார்ச் 10இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஜன. 15ஆம் தேதி வரை நேரடி பிரசாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை ஏற்கனவே அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.
இங்கு பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அக்கட்சியின் தலைவர் மாயாவதி இதுவரை அமைதியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில். இன்று லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாயாவதி பாஜக அரசை நேரடியாக மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்,

செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "அரசு இயந்திரம் சரிவரச் செயல்படத் தேர்தல் ஆணையத்தின் மீதான பயம் அவசியம். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அரசு இயந்திரம் மற்றும் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருந்தால் இந்த தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும். உபி-இல் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும்.

ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். போலீசார் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். உத்தரப் பிரதேச மக்கள் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் எங்கள் கட்சி முறையாகப் பின்பற்றி பிரசாரம் செய்யும்" என்று அவர் தெரிவித்தார். பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளைப் போல இல்லாமல் இந்த முறை மாயாவதி சற்று அமைதியாகவே இருந்து வருகிறார்.

பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் களத்தில் இறங்கித் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் வாக்காளர்களையும் நேரடியாகச் சந்தித்து வருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது, அதேநேரம் அமைதியாக இருக்கும் மாயாவதி தீவிர பிரசாரத்தைத் தொடங்கினால், அது அக்கட்சி நிர்வாகிகளுக்குக் கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் 2007இல் பெற்றதை போல மாபெரும் வெற்றியைப் பெற முக்கிய தலைவர்களுடன் மாயாவதி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாகப் பிராமணர்களின் வாக்குகளைப் பெற நெருங்கிய அரசியல் உதவியாளரான சதீஷ் சந்திர மிஸ்ரா எம்பி உடன் சேர்ந்து மாயாவதி முக்கிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது அவர் பாஜகவை நேரடியாக விமர்சிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: