வெள்ளி, 14 ஜனவரி, 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:24 காளைகளை பிடித்த கார்த்திக் முதலிடம்

BBC : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார், அந்த மண்ணில் பிறந்த இளைஞரான கார்த்திக்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த போட்டியில் 624 காளைகள் பங்கேற்றன.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று என்று 25 பேர் என மொத்தம் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகளில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த 25 வீரர்கள் 7வது சுற்றில் பங்கேற்றனர்.


இதில், கார்த்திக் என்பவர் 24 மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்றார்.அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவரது தனிப்பட்ட பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது.

வலையங்குளம் முருகன் என்கிற மாடுபிடி வீரர் 19 காளைகளைப் பிடித்து இரண்டாமிடம் பிடித்தார். அவருக்கு போட்டியின் தொடக்கத்திலேயே காயம்பட்டது. ஆனாலும் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் களத்துக்குத் திரும்பி காளைகளை பிடித்தார். அவருக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

12 காளைகளை அடக்கிய பரத் மூன்றாமிடம் பிடித்தார். அவருக்கு பசுங்கன்று வழங்கப்பட்டது.

மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயயம் என்பரின் காளை, சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் பரசாத வழங்கப்பட்டது.

சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்ககாசு, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் நிறைவாக வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் முதலிடம் பெற்ற கார்த்திக் பேசும்போது, ”கடந்த முறை 16 மாடுகளை பிடித்தேன். இப்போது 24 மாடுகள் பிடித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஜல்லிக்கட்டு களத்தில் பல புதிய உறவுகளைப் பெற்றேன். அவர்கள் நிறைய ஊக்கப்படுத்தினார்கள். அனைவருக்கும் நன்றி.” என்று கூறினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

கருத்துகள் இல்லை: