செவ்வாய், 11 ஜனவரி, 2022

மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலில் இணைந்த 750 ஜோடிகள்- கேரளா - முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பு

மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலில் இணைந்த 750 ஜோடிகள்- முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பு

மாலைமலர் : திருவனந்தபுரம்: மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சி நடந்த இடங்களில் போதை பொருட்கள் பரிமாற்றம் நடந்ததா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருக்காச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.


அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த தகவல்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:-

கேரளாவில் கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளைச் சேர்ந்த சிலர் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ரகசிய குழுக்கள் தொடங்கி உள்ளனர்.

இந்த குழுக்களில் திருமணமானவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ரகசிய வார்த்தைகள் அளிக்கப்படும். அந்த வார்த்தைகள் மூலம் குழுக்களில் உள்ள மற்றவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

பின்னர் இக்குழுக்களில் உள்ளவர்கள் நேரில் சந்தித்து பேசவும், பழகவும் குழுக்கள் ஏற்பாடு செய்யும். அப்போது அவர்கள் தங்களின் மனைவியரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கலாம். இதற்கு குறிப்பிட்ட தொகையை குழுக்கள் வசூலித்து கொள்ளும்.

மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சிகளை ஓட்டலிலோ அல்லது ரிசார்ட்டுக்களிலோ இந்த குழுக்கள் நடத்துவதில்லை. மாறாக குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலேயே இந்த விழாக்கள் நடைபெறும்.

இதற்காக குறிப்பிட்ட நாளில் உறுப்பினரின் வீட்டிற்கு குழுவினர் ஜோடி, ஜோடியாக செல்வார்கள். அங்கு நாள் முழுக்க கொண்டாட்டம் நடைபெறும். மது விருந்துடன் நள்ளிரவு வரை நீடிக்கும். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஜோடிகளை மாற்றி உல்லாசமாக இருப்பார்கள்.

மறுநாள் விரும்பியவர்கள் மேலும் ஒருநாள் தங்குவார்கள். மற்றவர்கள் ஊர் திரும்பி விடுவார்கள். மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்பார்கள்.

போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த இந்த தகவல்கள் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற குழுக்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். இதில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற வலைத்தளங்களில் 14 குழுக்கள் செயல்பட்டது தெரிய வந்தது.

இதில் 750 ஜோடிகள் என 1,500 பேர் உறுப்பினராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பல முறை பல்வேறு ஊர்களில் சந்தித்து உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த குழுக்களை தொடங்கியவர்கள் யார்? என்பதை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. அதன் அடிப்படையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே கைதான பெண்ணின் கணவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த குழுவில் முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களும் உறுப்பினர்களாக இருந்த தகவலும் வெளியாகி உள்ளது. கேரளா மட்டுமின்றி கோவா மாநிலத்தில் இருந்தும் சிலர் மனைவிகளை மாற்றும் உல்லாச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களை அடையாளம் காணவும், அவர்களுடன் வேறு யாரும் பங்கேற்றார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சி நடந்த இடங்களில் மது விருந்தும் நடந்ததாக கூறப்பட்டது. அதில் போதை பொருட்கள் பரிமாற்றம் நடந்ததா? இந்த குழுக்களை தொடங்கியதில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: