ஞாயிறு, 9 ஜனவரி, 2022

Noam Chomsky அமெரிக்காவில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டுபவர்.

 சுமதி விஜயகுமார் :  மொழியியலாளர், தத்துவவியலாளர், அறிவாற்றல் விஞ்ஞானி, வரலாற்றாசிரியர். அரிசோனா பல்கலைக்கழகம், Massachusetts Institute of Technologyகளில் பேராசிரியராக பணிபுரிந்தவர்.
150 நூல்களுக்கு மேல் எழுதியவர். இதற்காகவெல்லாம் அவரை இந்த உலகம் கொண்டாடவில்லை. அமெரிக்காவின் காலடியில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கியூபாவை இந்த உலகம் எதற்காக கொண்டாடுகிறதோ அதற்காக தான் இவரையும் கொண்டாடுகிறது.
இவர் அமெரிக்காவில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டுபவர்.
 டிரம்ப் அதிபரானாலோ , பைடேன் அதிபரானாலோ இவரிடம் முதல் கருத்து கேட்பு நடக்கும். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதல் புதிய சட்டத்திருத்தம் வரை இவர் குரல் இல்லாமல் விவாதம் நடக்காது.
Noam Chomskyக்கு இப்போது வயது 93. தனது 10 ஆம் வயதில் பரிசேலோனாவின் வீழ்ச்சியை தொடர்ந்து பாசிசத்தின் பரவலை பற்றி இவர் எழுதியது தான் முதற் கட்டுரை.

1962ல் வியட்நாம் போரில் அமெரிக்காவை எதிர்த்து தொடர் பிரச்சாரம் செய்து பலமுறை கைதானவர். உலகில் எந்த ஒரு நாடும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பொழுதும் இவர் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்கும். திமோரில் இந்தோனேசியாவின் அராஜகமும், ஈராகில் அமெரிக்காவின் தலையீடும் இவருக்கு ஒன்றுதான். நம் மொழியில் சொல்ல வேண்டுமானால் , இவர் ஒரு ஆன்டி அமெரிக்கன். இஸ்ரேலின் பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பை ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து எதிர்த்து வருபவர். அதற்கு துணை புரியும் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து வரும் Noam பிறப்பால் ஒரு யூதர்.
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று போர் கொடி உயர்த்தியவர். அந்த சுதந்திரம் அனைவர்க்கும் இருக்க வேண்டும் என்பதை செயலிலும் காட்டியவர். உலகம் அறிந்த யூத இன படுகொலையை இன்றளவும் மறுத்து வருபவர்கள் உண்டு. அப்படி மறுபவர்களுக்கும் அப்படி மறுப்பதற்கான உரிமை உள்ளது என்று சொன்னதாலேயே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். ஒருமுறை அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க ஏகாதிபத்யத்தை பற்றி உரை நிகழ்த்திவிட்டு கேள்வி பதில் நேரத்தில் அமெரிக்க தேசபக்தி கொண்ட ஒரு மாணவர் அவரை கடுமையாக விமர்சித்த போதும் சிறிதும் அலட்டி கொள்ளாமல் 'நீங்கள் சொன்னவற்றை இந்த அவை பதிவு செய்து கொண்டது' என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றார். ஒருமுறை இவரது நூலை அச்சிட்டதற்காக ஒரு பதிப்பக உரிமையாளர் துருக்கியில் கைது செய்யப்பட, நீதிமன்ற விசாரணையின் போது , தானும் ஒரு பிரதிவாதி என்று தன்னை இணைத்து கொள்ள, உலக ஊடகங்கள் அனைத்தும் அந்த விசாரணையை மையப்படுத்த, துருக்கி அந்த பதிப்பாளரை விசாரணையின்றி விடுதலை செய்தது.
உலக அரசியலை தெரிந்து கொள்ள வேணுமானால் இவரின் கட்டுரைகளையும் நூல்களையும் அவசியம் படிக்க வேண்டும். இவர் எழுதிய நூல்கள் தமிழில் எதுவும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. கொரோனவை பற்றி அவரின் கருத்தை கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கம் கீழ்கண்டவாறு:
' கொரோனா ஒரு முக்கிய பிரச்சனை. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை விட இரண்டு முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது. பெருகி வரும் அணுசக்தி மற்றும் பூமி வெப்பமயமாகல். நமக்கு இருக்கும் நேரம் மிக குறைவு. இதை கட்டுப்படுத்த இப்போது நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மனித குலம் கூண்டோடு அழிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் Doomsday Clock ( உலக விஞ்ஞானிகள் இந்த கடிகார முல்லை ஒவ்வொரு ஆண்டும் மாற்றி வைப்பார்கள். முள் 12 ஐ தொடும் போது இந்த உலகம் அழியும் என்பது கணக்கு. உலக அழிவிற்கு எவ்வளவு அருகில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதற்க்கான கடிகாரம் இது) 12 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. டிரம்ப் பதவி ஏற்ற பின், அது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மிக அருகில் 2 நிமிடத்தில் நிற்கிறது. இப்போது நிமிட கணக்கு போய் , 100 வினாடிகள் மட்டுமே இருக்கிறது.
நாம் மீண்டும் கொரோனாவிற்கு வருவோம். கொரோனா ஒரு கொடிய நோய். அக்டோபர் 2019 லேயே உலக சுகாதாரத்திற்க்கு தகவல் கிடைத்தது. பின்பு சீன விஞ்ஞானிகள் அது காரோண என்று கண்டு பிடித்தனர். ஆனாலும் உலக நாடுகள் மெத்தனம் காட்டின. பிரிட்டன் மோசமாக நடந்து கொண்டது என்றால் அதை விட மோசமாக அமெரிக்கா நடந்து கொண்டது. அதற்கு வரப்போகும் தேர்தல் பற்றி தான் அக்கறை இருந்தது.
15 வருடங்களுக்கு முன்னர் சார்ஸ் நோய் தோற்று உண்டானபோதே உலக சுகாதாரம் விழிப்படைந்து இருக்க வேண்டும். காரோண போன்ற பெருந்தொற்றை எதிர்பார்த்து தயாராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? நான் சிறுபிள்ளையாய் இருந்த போது போலியோ பெரும் அச்சமாக இருந்தது. ஆனால் இப்போது அது போன தடம் தெரியவில்லை. அப்போது அமெரிக்கா அதிபராய் இருந்த ரூஸ்வெல்ட் போலியோ மருந்திற்கு காப்புரிமை வாங்கவில்லை. அதனால் அது உலக மக்கள் அனைவர்க்கும் சொந்தமானது. போலியோ முழுமையாக ஒழிக்க பட்டது. இப்போது நடப்பது என்ன? மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் லாப நோக்குடன் செயல் படுகின்றன. ரொனால்ட் ரீகன் மருத்துவ நிறுவனங்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அளித்துவிட்டார். அவர்களுக்கு கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிப்பதை விட, அழகுக்கு கிரீம்கள் தயாரிப்பது அதிக லாபத்தை கொடுக்கிறது. அரசோ அதை கட்டுப்படுத்த தயங்குகிறது.
ஐரோப்பாவில் இருக்கும் நாடுகள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய தவறுகிறார்கள். இங்கிருக்கும் கியூபா தன்னை மீட்டெடுத்ததுடன் ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவி அளிக்கிறது. அமெரிக்காவோ நலிந்த நாடுகளின் குறைவளையை இன்னும் நெறுக்கிகிறது. உலகம் ஆட்சிகளின் கைகளில் இருந்து மீட்கப்பட வேண்டும்.'
Noam Chomsky எந்த விதமான ஆட்சியையும் ஏற்று கொள்ளாதவர். மார்க்சிச லெனினிய ஆட்சி உட்பட. ஆட்சி என்பது மக்கள் சார்ந்ததாக , மக்களால் இருக்க வேண்டும் என்பதே அவரின் நிலை பாடு. வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் அவரை படிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: