ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் ஓடிடி தளங்கள் - யாருக்கு லாபம்? BBC

அஜித்
விஷ்ணுப்ரியா ராஜசேகர் -   பிபிசி தமிழ் : அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று.
ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள்.கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று.
விளம்பரம்

ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமா?

தொழில்நுட்பம் என்பது எப்போதும் மாறிக் கொண்டே இருப்பது. ஒருகாலத்தில் டிடிஹெச்சில் படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பிய தமிழ் சினிமாவில்தான் ஓடிடியில் படங்களை வெளியிட இன்று போட்டி உண்டாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு படங்கள் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒமிக்ரான் திரிபால் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. எனவே தியேட்டரில் படங்கள் வெளியாவதில் நிச்சயமற்ற நிலை நிகழும்போது ஓடிடி தளங்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலமாக மாறிவிடுமா?
கமல் ஹாசன்
கமல் ஹாசன்
பட மூலாதாரம், STRDEL/AFP via Getty Images
படக்குறிப்பு,

2013ஆம் ஆண்டில் விஸ்வரூபம் படத்தை DTH வெளியிடப்போவதாக கமல் அறிவித்தபோது அதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது

ஓடிடிதான் எதிர்காலம் என்று சொல்லமுடியாமா என தெரியவில்லை; ஆனால் பெருந்தொற்று காலத்தில் பலருக்கு வேலை கொடுத்தது இந்த தளங்கள் என்கிறார் சில்லுக் கருப்பட்டி படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
பெருந்தொற்று காலத்தில் வாய்ப்பாக இருந்த ஓடிடி

"ஓடிடியால் பயனடைந்த பலரில் நானும் ஒருவர். நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டருக்காகதான் படம் எடுப்பேன் என விடாப்பிடியாக இருந்தேன். ஆனால் என்னுடைய மொத்த கண்ணோட்டமும் இந்த பெருந்தொற்று காலத்தில் மாறிவிட்டது," என்கிறார் அவர்.

இவரின் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் பல்வேறு பாராட்டுகளை பெற்றது. ஆனாலும் கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தை வெளியிட்டிருந்தாலும் பொதுமுடக்க காலத்தில்தான் தனது படத்தை அதிகம் பேர் பார்த்தனர் என்கிறார்.

"சில்லுக் கருப்பட்டி படம் பெருந்தொற்றுக்கு சற்று முன்னதாக வெளியாகியிருந்தாலும், பெருந்தொற்று காலத்தில்தான் அது அதிக ரசிகர்களை சென்று சேர்ந்தது. இம்மாதிரியாக பல கதைகளுக்கு பெருந்தொற்று காலத்தில் லாபம் கிடைத்தது," என்கிறார் அவர்.
தமிழ் சினிமாவுக்கு லாபமா நஷ்டமா?

வர்த்தக ரீதியில் பார்க்க போனால் ஓடிடி உரிமம் என்பது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே ஒரு பெரிய சப்போர்ட் சிஸ்டமாகவே உள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜி. தனஞ்சயன்.

"தற்போது ஒரு சில படங்களின் சாட்டிலைட் உரிமத்தை காட்டிலும் டிஜிட்டல் உரிமம் அதிகமான தொகைக்கு விற்கப்படுகிறது. அதேபோல கொடுக்கப்படும் தொகையும் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய மாற்றம்.

ஓடிடி தளங்கள் நிறைய படங்களை வாங்குகிறார்கள். அது அத்தனையும் நேயர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் ஒரு தயாரிப்பாளர் பார்வையிலிருந்து பார்த்தால் அவருக்கு லாபம் வந்துவிட்டது.

சில படங்கள் தியேட்டருக்கு வந்திருந்தால் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் அவை ஓடிடியில் பெரும் வெற்றியை பெறுகிறது. தமிழ் சினிமாவில் ஓடிடி தளத்தை நோக்கி ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது." என்கிறார் தனஞ்சயன்.

ஆனால் சினிமாத் துறை என்பது வெறும் தயாரிப்பாளர்களை மட்டுமே உள்ளடக்கியது இல்லை. விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் இதில் லாபம் வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து பதிலளித்த தனஞ்செயன், "சில சமயங்களில் ஓடிடியில் வெளியான படங்கள் மக்கள் வரவேற்பை பெறாதபோது, அவை தியேட்டருக்கு வராமல் தாங்கள் நஷ்டத்திலிருந்து தப்பி விட்டதாக எண்ணுகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஓடிடி வர்த்தகத்திற்கு மொத்த துறையும் தற்போது பழகி கொண்டது," என்கிறார்.

2019ஆம் ஆண்டிலிருந்து இந்த வருடத்தை கணக்கிட்டால் ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் ஓடிடியில் வெளியாக இயலாத படங்களே பெரும் சவாலை சந்திக்க நேரிடும் என்கிறார் தனஞ்சயன்.

"இந்த வருடம் 100க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல பெரிய படங்களை மக்கள் எப்படியும் தியேட்டரில் பார்த்து விடுவார்கள். எனவே ஓடிடியில் வெளியாகாத சிறிய மற்றும் இடைநிலை படங்களை பார்க்க மக்களை தியேட்டருக்கு வரவைப்பது மிக சவலாக இருக்கும்," என்கிறார் அவர்.

அஜித் விஜய் படங்களும் காலப் போக்கில் ஓடிடியில் ரீலிசாகுமா?
ஜெய்பீம்ஜெய்பீம்

பட மூலாதாரம், STR/AFP via Getty Images
படக்குறிப்பு,

தமிழ், இந்தி உட்பட ஜெய் பீம் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது

ஓடிடி என்பது சிறிய படங்களுக்கு நிச்சயம் வரமாகத்தான் உள்ளது ஆனால் அது சிறிய படங்களுக்கானது மட்டுமே என்பது இல்லை என்கிறார் ஹலிதா ஷமீம்.

"முன்பெல்லாம் தியேட்டர் கிடைக்காமல்போன படங்களே ஓடிடியில் வருகிறது என்ற கண்ணோட்டம் இருந்தது ஆனால் முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்குமான இடைவெளியில் ஒரு படம் ஓடிடியில் வாங்கப்படவில்லை என்றால் தியேட்டருக்கு வருகிறது என்ற நிலைமை மாறியுள்ளது" என்கிறார் ஹலிதா.

பெரிய படங்கள் சிறிய படங்கள் என்ற வித்தியாசத்தை கடந்து ஒரு படம் எந்த அளவிற்கு லாபம் ஈட்டுகிறது என்பதே முக்கியம். எனவே இந்த ஓடிடி என்பது அதற்கு ஒரு நல் வாய்ப்பாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் ஓடிடியில் வெளியான சார்பாட்டா பரம்பரை மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஜெய் பீம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியானது. ஐஎம்பிடி வரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. வருடத்தின் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே ப்ரீமியர் செய்யப்பட்டபோது அது வரை இல்லாத அளவில் அதிக அளவிலான மக்களால் பார்க்கப்பட்டதாக டிஸ்னி தெரிவித்தது.

இதில் பல சமயங்களில் ஓடிடியின் பார்வையாளர்களை கொண்டு படம் எத்தனை பேரை சென்று சேர்கிறது என்பதும் அமைந்துவிடுகிறது.

"தியேட்டரோ அல்லது ஓடிடியோ எதுவாக இருந்தாலும் கதை நன்றாக இருக்க வேண்டும். எனவே ஒரு படம் வெற்றி பெற கதை மற்றும் மார்கெடிங் என இரண்டுமே வேண்டும்." என்கிறார் இயக்குநர் மற்றும் விமர்சகர் கேபிள் சங்கர்.

தமிழில் கடந்த வருடம் அண்ணாத்த, மாநாடு போன்ற படங்கள் தியேட்டரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் ஒரு சில வாரங்களில் அது ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது.

எனவே சிறிய படங்கள், பெரிய படங்கள் என்பதைத் தாண்டி வர்த்தகத்தை பொறுத்தே ஒரு படம் ஓடிடியில் வெளியாகிறது.

அடுத்தது என்ன?
ரஜினிரஜினி

பட மூலாதாரம், Getty Images

ஓடிடியை எதிர்த்தவர்கள் தற்போது அதன் வர்த்தகத்தை புரிந்து கொண்டனர். எனவே இயல்பாக ஒரு மாற்றம் நிகழும்.

"எதிர்காலத்தில் தியேட்டர் 50 - ஓடிடி 50 என்ற அளவில்தான் இருக்கும். 50 படங்கள் ஓடிடியில் ப்ரீமியர் ஆகும். 50 படங்கள் தியேட்டரில் ரீலிஸ் ஆகும். எனவே ஓடிடியில் படத்தை விற்க இயன்றவர்கள் தப்பி விடுவார்கள்," என்கிறார் தனஞ்சயன்.

ஓடிடி என்பது வர்த்தக ரீதியாக மட்டுமல்ல தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் சினிமா விமர்சனர் பரத்வாஜ் ரங்கன்.

"காலப்போக்கில் படம் எடுக்கும்போது தொழில்நுட்ப ரீதியாகவும் ஓடிடி குறித்து யோசிக்க தொடங்கிவிடுவார்கள். சில இயக்குநர்கள் அவர்களின் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன," என்கிறார் பரத்வாஜ் ரங்கன்.

ஒருபக்கம் ஓடிடி தரும் வசதிக்கு மக்கள் பழகிவிட்டனர் குறிப்பாக இளைய தலைமுறையினர். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்பது ஓடிடியால் கிடைக்கும் ஒரு பலன்.

ஆனால் தியேட்டரின் கொண்டாட்ட மனநிலையை ஓடிடி கொடுத்துவிடுமா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதாகதான் இருக்கும்.
அஜித்அஜித்

பட மூலாதாரம், BONEY KAPOOR
படக்குறிப்பு,

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படத்தின் வெளியீடு ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை, ராஜ மெளலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்கள் தியேட்டருக்காக காத்திருப்பதிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.

"அதேபோல கொண்டாட்ட மனநிலையுடன் உள்ள படங்கள்தான் தியேட்டரில் பெரிதாக ஓடும். அது தவிர படங்கள் பார்க்கப்பட்டாலும் அது பார்க்கப்படும் இடங்கள் என்பது மாறிவிடும். அது டிஜிட்டலாக இருக்கும் அல்லது தொலைக்காட்சியாகவும் இருக்கலாம்." என்கிறார் சினிமா விமர்சகர் கேபிள் சங்கர்.

ஓடிடியில் உள்ள எதிர்மறை விஷயங்கள்

திரைப்படங்களை ஓடிடி தளங்கள் வாங்குவது என்பது லாபமான ஒன்றாக இருந்தாலும் ஓடிடி தளங்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு படைப்பை உருவாக்குவதில் பல சிரமங்களும் உள்ளன என்கிறார் ஹலிதா.
ஹலிதா ஷமீம்
படக்குறிப்பு,

ஹலிதா ஷமீம்ஹலிதா ஷமீம்

"ஓடிடி தளத்தில் புது யோசனைகள் வரவேற்கபட்டாலும் ஓடிடி தளங்களால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சில சமயங்களில் அதீதமாக உள்ளன. எனவே ஒரே மாதிரியான கதைகள் வருவதற்கான ஆபத்துகள் உள்ளன. ஓடிடியிலும் சில எதிர்மறைகளும் உள்ளன. எனவே ஓடிடி தியேட்டர் என இரண்டும் தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒன்றுக்கு ஒன்று போட்டியாக கருத வேண்டும்," என்கிறார் ஹலிதா.

பெருந்தொற்று காலத்தில் ஒரு வாய்ப்பாக மாறிய ஓடிடி தளங்கள் தற்போது தமிழ் சினிமாவின் மையப்புள்ளியாக உருவாகிவிட்டது என்றாலும் தமிழ் நேயர்களை இலக்கு வைத்து அதிகப்படியான படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கூற்றும் உள்ளது.

"ஓடிடி மாற்றம் என்பது கட்டாயம் நிகழ்ந்துதான் ஆகவேண்டும். இருப்பினும் தமிழ் ஓடிடி பார்வையாளர்களை கொண்டு இன்னும் நேரடியாக கதைகள் எடுக்கப்படவில்லை; அவர்களை இலக்கு வைத்து அதற்கு ஏற்றற்போல தயாரிப்புகள் இருக்க வேண்டும்," என்கிறார் கேபிள் சங்கர்.

கருத்துகள் இல்லை: