tamil.indianexpress.com : திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்க கொள்கைகளை உறத்து முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பெயரும் ராஜ்ய சபா எம்.பி ரேஸில் இடம்பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதால் திமுகவில் முன்னணி நிர்வாகிகல் இடையே ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு உச்ச கட்ட போட்டி நிலவுகிறது.
இதில் திமுகவில் இல்லாத ஆனால், திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து உறத்து முழங்கி வரும் சுப.வீரபாண்டியன் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மார்ச் 23, 2021ல் காலமானார்.
அதனால், அதிமுக சார்பில் ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது.
அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.க்களாக பதவி வகித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, இருவரும் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து 3 ராஜ்ய சபா எம்.பி இடங்கள் காலியானது. இந்த 3 இடங்களும் அதிமுகவில் இருந்து காலியானவை.
திமுக முதலில் காலியான முகமது ஜான் இடத்திற்கு தனியாகவும் மற்ற 2 இடத்துக்கு தனியாகவும் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முதலில் ஜான் முகமதுவின் இடத்துக்கு மட்டும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு ராஜ்ய சபா எம்.பி.யைத் தேர்ந்தெடுப்பதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை . ஆனால், ஒரு ராஜ்ய சபா எம்.பி இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள கட்சிக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், இந்த இடம் திமுகவுக்கு கிடைக்கும் என்று உறுதியானது. திமுக சார்பில் இருந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்பதால் அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடக்கவிருந்தது. எதிர்த்து யாரும் போட்டியிடததால், தேர்தல் நடக்காமலேயே போட்டியின்றி தி.மு.க வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவில் இஸ்லாமியரான முகமது ஜான் காலமானதால் இந்த ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது என்பதால், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதே இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லாவை எம்.பி ஆக்கியிருக்கிறார் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
அதே போல, தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு (வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி வகித்த ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான இடங்கள்) இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவுக்கு 66 எம்.எல்.ஏக்களும், பாஜக – 4 மற்றும் பாமக 5 என மொத்தம் அதிமுக கூட்டணியில் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், திமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் – 18, விசிக 4, சிபிஐ – 2, சிபிஎம் 2 என திமுக கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் இந்த 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களையும் திமுகவே வெற்றி பெறும் என்பதால், 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கு திமுகவில் உச்ச கட்ட ரேஸ் நடந்து வருகிறது.
காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகளில் ஒரு இடத்துக்கு திமுகவில் இருந்து திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ராஜ்ய சபாவில் திமுகவுக்கு ஆதரவாக திராவிடக் கொள்கைகளை அழுத்தமாக முன்வைக்க திராவிடக் கொள்கை சார்ந்த ஒருவரை தேர்வு செய்து ராஜ்ய சபாவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர்பொள்ளாச்சி உமாபதி பெயர் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான ரேஸில் இடம்பெற்றுள்ளது. மற்றொருவர் யார் என்றால், அவர் திமுகவில் இல்லை என்றாலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையை நடத்தி வரும் சுப.வீரபாண்டியன் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்க கொள்கைகளை உறத்து முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பெயரும் ராஜ்ய சபா எம்.பி ரேஸில் இடம்பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சுப.வீ ராஜ்ய சபா எம்.பி ஆகிறாரா என்று தமிழக அரசியல் களத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ராஜ்ய சபா எம்.பி பதவியைத் தனக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதனால், மு.க.ஸ்டாலின் 1 ராஜ்ய சபா எம்.பி இடத்தை காங்கிரஸுக்கு அளிப்பதாக இருந்தால் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றால் 2 இடத்திற்கு திமுகவே வேட்பாளர்களை அறிவிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக