ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவனின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார் :  தமிழ்நாட்டில் பல மாணவர்களின் உயிர்களைக் குடித்த தேர்வு நீட். எந்த மாணவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அரசு நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம்  நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது.


இந்நிலையில்  சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரில் நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் (வயது 19) இன்று (12/09/2021) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்த தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த தி.மு.க.வின் இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிய வர, அவர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் சென்ற நிலையில், தற்பொழுது நேரில் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் உடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  

 

கருத்துகள் இல்லை: