செவ்வாய், 14 செப்டம்பர், 2021

அண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை ! எதிர்க்கும் தமிழ்நாடு பாஜக

 மின்னம்பலம் : தமிழ்நாட்டில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து என்று பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் ஹெச்.ராஜா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ரவி, “சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் மீது எந்தவொரு லஞ்ச புகாரும் வரவில்லை. பிரதமர் மோடி மன் கி பாத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளார்.
திமுகவின் ஹனிமூன் முடிந்துவிட்டது. அவர்களின் எண்ண ஓட்டம் எப்போதும் ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்படுவதுதான். ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு ஒன்றிய அரசுக்கும், மோடிக்கும் எதிராக செயல்படுகிறது. அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்க தெரியவில்லை. பாஜக எப்போதும் தமிழ்நாடு மக்களுடனும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

100 சதவிகிதம் நாங்கள் மாநில அரசுக்கு உதவியாக இருக்கிறோம். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்தான பகுதிக்குச் செல்கிறது. 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து. இதை நாங்கள் எதிர்ப்போம். ஏனென்றால், அது மிகவும் ஆபத்தான முடிவு. தமிழ்நாட்டின் நிலத்தை தேசவிரோத நடவடிக்கைகளுக்குக் கொடுத்து விடக் கூடாது.

சிஏஏ சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்று பல்வேறு முறை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், திமுக அரசு இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எதிர்மறையாக பரப்புரை செய்து வருகிறது. அதுபோன்று புதிய மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கானது. அதையும் எதிர்மறையாக காட்சிப்படுத்தி மக்களை திசை திருப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை திமுக அரசு மறைக்க முயற்சி செய்கிறது. அதிமுகவும், பாமகவும் தனித்தனி கட்சிகள். சந்தேகமில்லை. நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருக்கிறோம். தமிழ் மக்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். 1962ஆம் ஆண்டில் இருந்த இந்தியா தற்போது இல்லை. இது 2021ஆம் ஆண்டு. நாம் தனியாக இல்லை. பல்வேறு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளோம். இந்தியா எந்த நிலையையும் சந்திக்க தயாராக உள்ளது” என்று கூறினார்.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று நேற்றைய சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- வினிதா

கருத்துகள் இல்லை: