திங்கள், 13 செப்டம்பர், 2021

மெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய கோவை, திருச்சியின் ஊராட்சி 100%, மதுரை 5-ம் இடம்!

மெகா தடுப்பூசி முகாம்
விகடன்  Vikatan : தமிழகம் முழுக்க நேற்று (12.9.21) 43,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம், நேற்று மட்டும் 28 லட்சத்து 36,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் தடுப்பூசி முகாம்களின் நிலை என்ன, இது அரசுக்கு வெற்றியான முன்னெடுப்பா, மக்களின் பங்கேற்பு எப்படி இருந்தது என்று அறிய ஒரு வலம் வந்தோம்.

இலக்கை தாண்டிய கோவை!

``மெகா தடுப்பூசி முகாமில் கோவை மாவட்டத்தில் 1,50,000 பேருக்குத் தடுப்பூசி போட திட்டமிட்டோம். ஆனால், நேற்று ஒரே நாளில் 1,51,685 பேருக்குத் தடுப்பூசி செலுத்தி இலக்கை கடந்துவிட்டோம்'' என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், `அதுக்கும் மேல...’ என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதால், அங்கு தடுப்பூசிக்கான தேவையும் அதிகமாக இருந்தது. தடுப்பூசிக்காக இரவு முழுவதும் சாலையில் காத்திருப்பதில் தொடங்கி பல போராட்டங்கள் நடந்தன.

அதனால், இந்த மெகா தடுப்பூசி முகாமை சரியான வழியில் பயன்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டன. ஏற்கெனவே, பல இயற்கை சீற்றங்களில் கைக்கொடுத்த, `நம்ம கோவை’ என்ற குழு உள்பட பல தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தனர். 1,500 முகாம்கள்... 1,50,000 தடுப்பூசிகள் என்று டார்கெட் செய்தனர். எங்கு, எப்படி என்பதையெல்லாம் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர்.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ தி.விஜய்

வ.உ.சி மைதானத்தில் ஒரு மெகா முகாம். மேலும் ஆங்காங்கே அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன.

காரில் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்தித் செல்வது, தடுப்பூசி தொடர்பான உளவியல் ஆலோசனை தருவது என்று பல திட்டங்களை வகுத்தனர். பெரிய அளவில் கூட்டம் கூடாமல் மக்கள் விரைவாகத் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். ஒவ்வொரு முகாமிலும் என்ன தேவை என்பதை அதிகாரிகள், தன்னார்வலர்கள் வாட்ஸ்அப் குழுக்களிலும், நேரடியாகவும் உடனடியாகத் தகவல் பரிமாறிக் கொண்டனர். இதனால், ஒருகட்டத்தில் மெகா தடுப்பூசி பட்டியலில் சென்னையை ஓவர்டேக் செய்து கோவை முதலிடத்தில் இருந்தது.

அதே நேரத்தில் சர்ச்சைகளும் இருக்கவே செய்தன. சில இடங்களில் தடுப்பூசிகள் வர தாமதம் ஆனது. அதற்குள், தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்ட சிலருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் குறுந்தகவலும் வந்துவிட்டது. ஆனால், ஊசி மட்டும் வரவில்லை. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. முக்கியமாக, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாக இருந்ததாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். சில முகாம்களில், இரண்டாம் தவணைக்கான தேதி வராதவர்களுக்கும், `60-70 நாள்களை கடந்துவிட்டாலே தடுப்பூசி செலுத்தக் கூறியுள்ளனர், பிரச்னையில்லை' என்று கூறி ஊசி போட்டுள்ளனர்.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ தி.விஜய்

இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்து முன்பே தெளிவான தகவல்களை வழங்கியிருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், நீட் தேர்வு மையம் என்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் பலர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. தடுப்பூசி தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாத பலர், தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லிக் கடந்துவிட்டனர். அந்த இடங்களில் அதிகளவில் தன்னார்வலர்கள், அரசு ஊழியர்களை பணியமர்த்தி விழிப்புணர்வு தந்திருந்தால் மெகா முகாம் மெகா வெற்றியை அடைந்திருக்கும். இரவு 8 மணிவரை சில இடங்களில் முகாம் நடந்தாலும், பல இடங்களில் தடுப்பூசிக்கு ஆர்வமாக வந்தவர்களுக்கு ஊசி இல்லாததால் ஏமாற்றுத்துடன் சென்றனர். `மாதத்துக்கு ஒரு மெகா முகாம் நடத்தினால் உதவியாக இருக்கும்’ என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை... மாநில அளவில் 5வது இடம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் சிறப்பு முகாமில் மதுரை மாவட்டத்தில் 2,00,000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும்,
1,15,734 தடுப்பூசிகள் மட்டும் செலுத்தி, மாநில அளவில் 5-வதாக இடம் பெற்றுள்ளது.

மதுரை மாவட்ட நிர்வாகத்தால், மக்கள் இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தி குறுகிய காலத்தில் பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் சிறப்பு முகாம் பற்றி நினைவுபடுத்தினார்கள்.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ என்.ஜி.மணிகண்டன்

ஆனால், முகாம் நடந்த நாளில் மாநகராட்சிப் பகுதிகளில் பல முகாம்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புறநகர் பகுதியில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஒவ்வொரு ஊராட்சித் தலைவரிடமும் மாவட்ட நிர்வாகமும், தி.மு.க நிர்வாகிகளும் பொறுப்பை ஒப்படைத்ததால், மக்களை கேன்வாஸ் செய்து முகாமுக்கு அழைத்து வந்து விட்டார்கள். இதனால் பல முகாம்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் பலர் திரும்பிச் சென்றார்கள். இந்த ஏற்பாட்டல் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 68,058 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், முகாம் நடைபெற்றது ஞாயிறு என்பதாலும் மாநகரப் பகுதிகளில் பொதுமக்கள் பலர் தடுப்பூசி முகாமை கண்டுகொள்ளவில்லை.

அது மட்டுமல்லாமல், ஊசி போடுவதற்கு முன்னும் பின்னும் அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்கள் மத்தியில் இன்னும் உலவி வருவதாலும், அது குறித்த மருத்துவ விழிப்புணர்வு விளக்கம் மக்களைச் சென்றடையாததாலும், மதுக்கடைக்கு அன்று குறிப்பிட்ட அளவு மக்கள் சென்றதாலும் தடுப்பூசி முகாமுக்கு பலர் வரவில்லை. அதனால் மாநகரப் பகுதிக்குள் 43,995 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ என்.ஜி.மணிகண்டன்

மாவட்டத்துக்கு 2,00,000 இலக்கு நிர்ணயித்தாலும், மொத்தம் 1,15,734 தடுப்பூசிகள்தான் இருப்பு இருந்தது. அது தெரியாமலே டார்கெட் அறிவித்துவிட்டார்கள். கலெக்டரும், அமைச்சர் பி.மூர்த்தியும் பல முகாம்களுக்கு விசிட் அடித்தார்கள். மாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனும் விசிட் செய்தார்.

சிறப்பு முகாம் இந்தளவுக்கு வெற்றி அடைந்தது மாவட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட அமைச்சர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரமும் முகாம் நடத்தலாம் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

திருச்சி... 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட திருவெள்ளரை ஊராட்சி!

மெகா தடுப்பூசி முகாமை பொறுத்தவரை, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் மட்டும் சுமார் 497 தடுப்பூசி முகாம்களும், நகரப் பகுதிகளில் சுமார் 126 முகாம்களும் என மொத்தம் 623 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுமட்டும் இல்லாமல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் 11 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தத் தடுப்பூசி முகாம்களின் மூலமாக நேற்று மட்டும் 1,10,332 பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் 1.50 லட்சம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற இலக்கு, கிட்டத்தட்ட எட்டப்பட்டுவிட்டது. இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை 75,918 பேரும், இரண்டாவது தவணையை 24,937 பேரும், மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் தவணையை 6,657 பேரும், இரண்டாவது தவணையை 2,820 பேரும் போட்டுக்கொண்டனர். இதில் திருவெள்ளரை என்ற ஊராட்சியில் 100 சதவிகிதம் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சியாக இந்த ஊராட்சி உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ தே.தீட்ஷித்

தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா என்னும் பெரும் தொற்று பற்றிய விழிப்புணர்வும், தடுப்பூசி போடுவதன் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத்துறையினால் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாகப் பொதுமக்களுக்குத் தடுப்பு ஊசி செலுத்தி, தமிழகத்திலுள்ள 46 சுகாதார மாவட்டங்களில் 4-வது இடத்தையும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 6-வது இடத்தையும் திருச்சி மாவட்டம் பெற்றுள்ளது. இந்த சிறப்பான நிலையினை எட்டியதற்குச் சுகாதாரத் துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சிவராசு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்
Photo: Vikatan/ தே.தீட்ஷித்

கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பணியாற்றிய பணியாளர்களிடம் பேசினோம். ``தொடர்ந்து விடுமுறை நாள்கள் என்பதால் பொதுமக்கள் வருவதில் பின்னடைவு ஏற்படலாம் என நினைத்தோம். சில முகாம்களைத் தவிர்த்து மற்றவை அனைத்திலும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் கூட்டம் இல்லாத பகுதிகளிலிருந்து, தேவைப்படும் இடத்திற்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன'' என்றனர்

கருத்துகள் இல்லை: