வ
ிகடன் - லோகேஸ்வரன்.கோ : ஆரணியில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத்தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துவருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி ரோட்டில் ‘7 ஸ்டார்’ பெயரில் இரண்டு அசைவ உணவு ஹோட்டல்கள் இயங்கிவருகின்றன.
இதன் உரிமையாளர் ஆயத்பாஷா. இந்த ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ ஸ்பெஷல் என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் எந்த நேரமும் அலைமோதுமாம்.
பலரும் குடும்பத்துடன் வந்து தந்தூரி சிக்கனை விரும்பிச் சாப்பிட்டுவார்களாம். இந்தநிலையில், கடந்த 8-ம் தேதியிரவு `7 ஸ்டார்’ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட ஆரணி நகரத்திலுள்ள சேத்துப்பட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்தன் என்பவரின் குடும்பத்தினருக்கு தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் ஆரணியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில், 7 ஸ்டார் ஹோட்டலில் தந்தூரி சிக்கனை சாப்பிட்ட மேலும் 40-க்கும் மேற்பட்டோருக்கும் வயிற்றுக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களும் ஆரணி மற்றும் வேலூரிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இதனிடையே, கூலித்தொழிலாளி ஆனந்தனின் 10 வயது மகள் லோஷினியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி லோஷினி பரிதாபமாக மரணமடைந்துவிட்டார்.
தந்தூரி சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த சம்பவம், ஆரணி முழுவதும் தீயாய் பரவியது. தகவலறிந்ததும், நேற்று இரவு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, நகராட்சி ஆணையர் ராஜ விஜயகாமராஜ், டி.எஸ்.பி கோட்டீஸ்வரன், தாசில்தார் சுபாஷ்சந்தர் மற்றும் நகரப் போலீஸார் சம்பந்தப்பட்ட 7 ஸ்டார் ஹோட்டலுக்கு விரைந்துச்சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அங்கிருந்த உணவுப் பொருட்களை கைப்பற்றி அதிலுள்ள விஷத்தன்மையை கண்டறிய சென்னையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, 7 ஸ்டார் பெயரில் இயங்கிவந்த இரண்டு ஹோட்டல்களையும் மூடி சீல் வைத்தனர். மேலும், ஹோட்டல் உரிமையாளரான ஆயத்பாஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, ஆரணி நகரிலுள்ள மற்ற ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது, 5 ஸ்டார் பெயரில் இயங்கிவந்த ஹோட்டல் ஒன்றில் கெட்டுப்போன கோழி இறைச்சியைப் பயன்படுத்த வைத்திருந்தார்கள். அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர். கடந்த வாரம் ஆரணி அடுத்த பையூரிலுள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்தநிலையில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் பெரும் விபரீதம் நடந்திருக்கிறது. தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் ஆரணி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக