அம்மையார் ஜெயலலிதாவால் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையாக மாற்றப்பட்ட இந்த தலைமை செயலகம் பல சிறப்புக்களை கொண்டது
அம்மையார் வழக்கம்போல் கலைஞர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் இந்த நவீன புதுமைகள் பல கொண்ட தலைமை செயலக வளாகத்தை உருமாற்றினார்
கடந்த 2006-11-ம் ஆண்டு வரையில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது.
கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். இதையொட்டி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.629 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டசபை அரங்கம் மற்றும் தலைமை செயலக கட்டிடம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.
கலைஞர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியாகாந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்த கட்டிடத்தை கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி நேரில் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தலைமை செயலக அலுவல்கள் மாற்றப்பட்டன. சட்டசபை கூட்டமும் இங்கு நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார். அவர் பதவியேற்றவுடன், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கிய தலைமை செயலகம் அலுவல்கள், சட்டசபை நிகழ்வுகளை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி கடந்த 2011-ம் ஆண்டு மே 20-ந்தேதி உத்தரவிட்டார்.
பின்னர் பயனற்று போன அந்த கட்டிடத்தை அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றம் செய்யப்பட்டது.
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கலைஞரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், ‘தென்சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்’ என்பதும் அடங்கும்.
இந்த அறிவிப்பு வெளியானபோது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சட்டப்பேரவை கூட்ட அரங்கு, அமைச்சர்களுக்கான அறைகள், தலைமைச்செயலகத்திற்கான அலுவலகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்’ என்று கூறியிருந்தார். இதன்மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மீண்டும் தலைமைச்செயலக அலுவல்கள், சட்டசபை நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், புதிய சட்டப் பேரவை தலைமை செயலக வளாகம்’ என்ற கல்வெட்டு அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் இந்த கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கல்வெட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி அன்று கலைஞர் தி தலைமையில் சோனியாகாந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டசபை அரங்கம், தலைமை செயலக கட்டிடத்தை திறந்து வைத்த விவரம் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி விரைவில் மீண்டும் தலைமை செயலகம் மற்றும் சட்டசபை அரங்கமாக மாறும் என்பது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியை ஜெயலலிதா திறந்த வைத்த கல்வெட்டு அகற்றப்பட்டு அதன் அருகிலேயே மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. dailythanthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக