புதன், 15 செப்டம்பர், 2021

ஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும் ஆப்கன் பெண்கள் – வைரலாகும் ஹேஷ்டேக் #AfghanistanCulture

BBC : ஆடை வழி தாலிபன்களை எதிர்க்கும் பஹர் ஜலாலி
ஆப்கானிஸ்தானில் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து தாலிபன் அறிவித்த பிறகும், அதை எதிர்க்கும் விதத்தில் சில ஆப்கானிய பெண்கள் இணையத்தில் ஒரு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
DoNotTouchMyClothes, AfghanistanCulture என்கிற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி அவர்கள் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளின் தோன்றும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்தை தொடங்கிய பஹர் ஜலாலியிடம் பிபிசி செய்தியாளர் சொடாபா ஹைதரே பேசினார்.
“கூகுளுக்குச் சென்று ‘ஆப்கன் பாரம்பரிய உடை’ என்று தேடிப் பாருங்கள், பல வண்ண பாரம்பரிய உடைகளைக் கண்டு வியந்து போவீர்கள். ஒவ்வொன்றும் மிகுந்த கை வேலைப்பாடுகள், அலங்காரங்கள், சிறு கண்ணாடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஆடைகளாக இருக்கும்,” என்கிறார் அவர்.


  ஆப்கனின் தேசிய நடனமான அட்டன் (Attan) ஆடுவதற்கு இந்த ஆடைகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். சில பெண்கள் கைவேலைப்பாடுகள் நிறைந்த தொப்பியை அணிவர், சிலர் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கணமான சிகை ஆபரணத்தை அணிவர். அவர்கள் ஆப்கானிஸ்தானின் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை, அவர்களின் ஆடை, அலங்காரங்களை வைத்து அறியலாம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு வண்ணத்தில் தலை முதல் கால் வரை மறைக்கும் ஆடையைத்தான் ஆப்கானிய பெண்கள் அணிந்தனர். பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகள் மற்றும் வேலை பார்க்கும் பெண்கள் அந்த ஆடையைத் தான் தினமும் அணிந்தனர். சில நேரங்களில் அவர்களது ஆடைகள் ஜீன்ஸ் பேன்ட்டாகவும், உடலை மூடும் துணி, முகத்தை மட்டும் மூடும் துணியாகவும் இருந்தது.

ஆனால் காபூலில் தாலிபன்களின் கட்டுப்பாடுகளை ஆதரிக்கும் பெண்கள் இதிலிருந்து முற்றிலும் முரண்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு காணொளியில், தாலிபன்களை ஆதரிக்கும் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் “அழகுபடுத்திக் கொள்ளும், நவீன ஆடைகளை உடுத்தும் பெண்கள் ஆப்கன் இஸ்லாமிய பெண்களைக் பிரதிபலிப்பவர்கள் அல்ல”.

“எங்களுக்கு பெண்கள் உரிமை போன்ற வெளிநாட்டு விஷயங்களோ ஷரியா சட்டத்துக்கு எதிரான விஷயங்களோ வேண்டாம்” என அந்த பேரணியில் சென்றவர்கள் கூறுகின்றனர்.

இந்த கருத்துக்கு உலகின் பிற பகுதிகளில் வாழும் ஆப்கானிய பெண்கள் உடனடியாக எதிர்வினையாற்றினர்.

அவர்களில் பலரும் ஆப்கனில் இயங்கிய அமெரிக்க பல்கலைக்கழக முன்னாள் வரலாற்று பேராசிரியர் முனைவர் பஹர் ஜலாலி தொடங்கிய இணையவழி பிரசாரத்தில் பங்கெடுத்தனர். தங்கள் பாரம்பரிய ஆடைகளை மீட்டெடுக்க #DoNotTouchMyClothes, #AfghanistanCulture போன்ற ஹேஷ்டேகுகளை அவர்கள் பயன்படுத்தினர்.

“ஆப்கனின் அடையாளம் மற்றும் அதன் மதசார்பின்மை தாக்குதலில் இருக்கிறது” எனவே தான் இந்த பிரசாரத்தை முன்னெடுத்தேன் என்கிறார் ஜலாலி.

தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பச்சை நிற ஆடை அணிந்து இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவிட்டு இருக்கிறார். ஆப்கனின் உண்மை முகத்தைக் காட்ட மற்ற ஆப்கன் பெண்களையும் பதிவிடுமாறு வலியுறுத்தினார்.

“நீங்கள் ஊடகங்களில் பார்க்கும் தாலிபன் ஆதரவாளர்கள் அணிந்திருக்கும் கறுப்பு நிற ஆடை எங்களுடைய பூர்விக ஆடை அல்ல, அது எங்கள் கலாசார பிரதிபலிப்பு அல்ல என்பதை இந்த உலகுக்கு தெரிவிக்க விரும்பினேன்” என்கிறார் ஜலாலி.

நிப், கைகளை மறைக்கும் ஆடைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்றும், பொதுவாகவே ஆப்கானியர்கள் வண்ணமயமாக ஆடை அணிபவர்கள் என்று பலரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆப்கன் பிராந்தியங்களைப் பொறுத்து ஆடைகளில் மாற்றங்கள் இருந்தாலும், வண்ண ஆடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி வேலைப்பாடுகள் போன்றவற்றில் சில ஒற்றுமை இருக்கத்தான் செய்கின்றன.

“இதுதான் எங்களின் பாரம்பரிய உடை. ஆப்கன் பெண்கள் இத்தனை வண்ணமயமான ஆடைகளையே அணிவர். கறுப்பு நிற புர்கா ஆடை எப்போதுமே ஆப்கனின் கலாசாரத்தில் இருந்ததில்லை” என வெர்ஜீனியாவில் இருக்கும் உரிமை செயற்பாட்டாளர் ஸ்பொஸ்மே மசீத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“கடந்த பல நூற்றாண்டுகளாக நாங்கள் ஓர் இஸ்லாமிய நாடாகவே இருக்கிறோம், எங்கள் பாட்டிமார்கள் எப்போதும் எளிய பாரம்பரிய ஆடைகளைத் தான் உடுத்தினர். அவர்கள் எப்போது நீல நிற சதாரி மற்றும் அரேபியர்களின் கறுப்பு நிற புர்காக்களை அணியவில்லை” என மசீத் கூறினார்.

“எங்கள் பாரம்பரிய ஆடைகள் எங்களின் வளமான கலாசாரத்தையும், 5,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. அது ஒவ்வொரு ஆப்கானியரையும் பெருமைகொள்ளச் செய்கிறது”

ஆப்கானிஸ்தானின் மிகவும் பழமைவாதம் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கூட பெண்கள் நிகாப்களை அணிந்து பார்த்ததில்லை என்கிறார்கள்.

“நாங்கள் ஆப்கன் பெண்கள் என்பதால் அப்படத்தை பதிவிட்டேன். நாங்கள் எங்கள் கலாசாரத்தை பெருமையாகக் கருதுகிறோம். எங்கள் அடையாளத்தை ஏதோ ஒரு கடும்போக்குவாதக் குழு தீர்மானிக்க முடியாது என்று கருதுகிறோம். எங்கள் கலாசாரம் இருள் சூழந்ததல்ல. அது கறுப்பு வெள்ளை அல்ல, அது வண்ணமயமானது. அதில் அழகு, கலை, கைவேலைப்பாடு, அடையாளம் என எல்லாம் இருக்கிறது,” என 37 வயதான ஆப்கன் ஆராய்ச்சியாளர் மற்றும் பெண்கள் பிரச்னைகள் தொடர்பாக செயல்படும் பேவண்ட் ஆப்கன் சங்கத்தின் நிறுவனர் லிமா ஹலிமா அஹ்மத் கூறுகிறார்.

“என் அம்மாவுக்கு வாய்ப்புகள் இருந்தன. எம் அம்மா நீண்ட ஆடையை அணிந்தார், சிலர் சிறிய ஆடைகளை அணிந்தனர். பெண்கள் மீது ஆடை கட்டுப்பாடுகள் தினிக்கப்படவில்லை” என கடந்த 20 ஆண்டுகள் ஆப்கனில் வாழ்ந்த, பணிபுரிந்த லிமா ஹலிமா கூறுகிறார்.

பராகுவே நாட்டில் வசிக்கும் ஆப்கன் பத்திரிகையாளரான மலாலி பஷீரும் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தான் வளர்ந்த கிராமத்தில் “கறுப்பு அல்லது நீல நிற புர்கா அணிவது எப்போதுமே ஒரு கட்டாயமாக இருந்ததில்லை. ஆப்கானியர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்தனர். வயதானவர்கள் கறுப்பு நிற துணியைக் கொண்டு தங்கள் தலையை போர்த்தியபடி இருப்பர், இளம் பெண்கள் வண்ண துணி மூலம் தலையை போர்த்திக் கொள்வர். ஆண்களை கைகுலுக்கி பெண்கள் வாழ்த்து கூறுவர்,” என்றார் மலாலி.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஆப்கன் பெண்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து, பெண்கள் அட்டன் ஆடுவதாகக் வரைந்த படத்தை பதிவேற்றியுள்ளார்.

பெண்கள் ஷரியா சட்டம் மற்றும் உள்ளூர் கலாசார பாரம்பரியங்களின்படி கல்வி கற்கலாம், வேலை பார்க்கலாம் என தாலிபன் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

காபூல் மற்றும் சில நகரங்களில் சில பெண்கள், கண்களுக்கு முன் ஒரு ஓட்டை மட்டுமே இருக்கும் சதாரி ஆடையை அணிந்து செல்லத் தொடங்கி விட்டனர்.

கருத்துகள் இல்லை: