கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார்கள். கோடநாடு பாதுகாவலர் மரணம், கனகராஜ் மரணம், சயான் குடும்பத்தினர், கோடநாடு பொறியாளர் மரணம் உள்ளிட்ட பல மரணங்களை இதில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரளாவில் ஒரு தனிப்படை, தமிழ்நாட்டில் 3 தனிப்படை, நேபாளத்திற்கு ஒரு தனிப்படை விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வழக்கில் விரைவில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களாக பார்க்கப்பட்ட 4 பேர் தற்போது சரண்டர் ஆக ரெடியாகி உள்ளனர். தீபு, சதோஷ் சாமி, ஜித்தன் ஜாய், சதீசன் ஆகியோர் தற்போது சரண்டர் ஆக ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை நடந்த சமயத்தில் கேரளாவிற்கு எல்லை பகுதி வழியாக தப்பி ஓடினார்கள். இவர்களுக்கு கேரளா தப்பி ஓட தமிழ்நாட்டில் சிலர் உதவியதாக கூறப்பட்டது.
விசாரணை
இந்த நிலையில் கடந்த விசாரணையின் போது இவர்களிடம் சரியாக வாக்குமூலம் வாங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. போலீசார் அப்போது இவர்களிடம் வாக்குமூலம் வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் 4 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்க தயாராகி உள்ளனர். கேரளாவில் சமீபத்தில் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். கேரளா சென்ற தனிப்படை போலீசார் கனகராஜ் மரணம் குறித்தும், சயான் குடும்பத்தினர் மரணம் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
வீடியோ கால்
இந்த நிலையில் தற்போது வீடியோ கால் மூலம் விசாரணையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் வெளியே வந்தால் எங்களுக்கு ஆபத்து. போலீஸ் அழைக்கும் போது நாங்கள் சரண் அடைய தயார். எங்களுக்கு உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக போலீசார் வீடியோ காலில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள்
இவர்கள் நால்வரின் வழக்கறிஞர்கள் மூலம் தபால் வழியாக போலீசாரிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வீடியோ கால் முறையில் இவர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்கள் நான்கு பேரின் வாக்குமூலம் கடந்த முறை முழுமையாக பெறப்படவில்லை. இதனால் இந்த முறை இவர்களின் வாக்குமூலம் வழக்கின் திசையை மொத்தமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதை பொறுத்தே அடுத்தடுத்து புதிய சாட்சியங்கள் வழக்கில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக