புதன், 5 மே, 2021

தமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்கள்?

தமிழக அமைச்சரவையில்  எத்தனை பெண்கள்?

 minnambalam : தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த 125 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 6 பேர்தான் பெண்கள்.

செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தூத்துக்குடி கீதாஜீவன், மானாமதுரை தமிழரசி, குடியாத்தம் அமலு, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, தாராபுரம் கயல்விழி ஆகியோர்தான் திமுக சார்பாக சட்டமன்றம் செல்லும் பெண்கள்.

மே 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைய இருக்கும் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கான பங்கு நிச்சயம் உண்டு. 2006 -11 கலைஞர் ஆட்சியில் திமுக சார்பில் சங்கராபுரம் அங்கயற்கண்ணி, தாராபுரம் பிரபாவதி, சமயநல்லூர் தமிழரசி, உப்பிலியாபுரம் ராணி, ஆலங்குளம் பூங்கோதை, தூத்துக்குடி கீதாஜீவன் ஆகிய ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பூங்கோதை ஆலடி அருணா, கீதாஜீவன், தமிழரசி ஆகிய மூவர் அமைச்சர் பதவி பெற்றனர்.

இவர்களில் பூங்கோதை இந்த தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலைஞர் அமைச்சரவையில் இடம்பெற்ற கீதாஜீவன், தமிழரசி ஆகிய இரு பெண்கள் இப்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

2006 ஐ போலவே இப்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக சார்பில் ஆறு பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகும் பெண்கள் யார் யார் என்ற பேச்சு திமுகவுக்குள் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“ஆறு பெண்களில் கீதாஜீவன், தமிழரசி ஆகியோர் அமைச்சராக இருந்த அனுபவம் மிக்கவர்கள் என்பதால் அவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும் சமூக ரீதியாகவும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற இன்னொரு விவாதமும் நடக்கிறது.

செங்கல்பட்டு வரலட்சுமி ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதி என்பதால் வரலட்சுமிக்கு வாயப்பு மிகக் குறைவே.

முன்னாள் அமைச்சர் தமிழரசி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரியும், தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகனை வீழ்த்திய கயல்விழியும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். தேவேந்திர குல வேளாளர் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால் இவர்கள் மூவரும் நிற்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். அமைச்சரே வருக வருக என்று கரூரில் திமுகவினர் போஸ்டரே ஒட்டிவிட்டார்கள். இந்தப் பின்னணியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான சிவகாம சுந்தரி அமைச்சர் ஆவாரா என்பது கேள்விக்குறிதான்.

மீதியிருக்கும் தமிழரசி, கயல்விழி ஆகியோரில் தமிழரசி தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கயல்விழி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே தென் மாவட்ட பிரதிநிதியாக தமிழரசி அமைச்சரவைக்கு முந்துகிறார். புதுமுகம் என்றால் முருகனை வென்ற கெத்தோடு கயல்விழி பரிசீலிக்கப்படுகிறார்.

கீதாஜீவன் கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், ஏற்கனவே அமைச்சரான அனுபவம் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணான குடியாத்தம் அமலு வெற்றிபெற்றிருக்கிறார். ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தில் துரைமுருகன் அமைச்சராகும் பட்சத்தில் அமலு போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஆச்சரியமாகவே இருக்கும்.

2006 இல் கலைஞர் அமைச்சரவையில் ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு இடைத்தது. இப்போது ஸ்டாலின் அமைச்சரவையில் இந்த ஆறு பெண்களில் எத்தனை பேர் அமைச்சர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: