புதன், 5 மே, 2021

செவிலியர் பணி நிரந்தரம் என்ற செய்தியை மடைமாற்றிய ஊடகங்கள்

Nilabarathi : எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை திமுக-அதிமுக சண்டை என்பது அரசியல் போட்டி மட்டுமே. காலம் மாறி கலைஞர்-ஜெயலலிதா என்ற போட்டி உருவான போது அது தனிப்பட்ட சண்டையாகிப் போனது. 1989ல் கலைஞரும், 1991ல் ஜெயலலிதாவும், 1996ல் கலைஞரும் முதல்வரானார்கள். அரசு அதிகாரிகளே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் படங்களை மாற்றிவிடுவார்கள். 96ல் தோற்று, ஊழல் வழக்கு, சிறைவாசம், தண்டனை, தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை, சட்டத்துக்கு புறம்பான வேட்புமனு நிராகரிப்பு எல்லாம் கடந்து சட்டவிரோதமாக மீண்டும் 2001ல் முதல்வரானார் ஜெயலலிதா.
Mummy Returns என்று ஊடகங்களும் கொண்டாடித் தீர்த்தன. ஊடகங்களே இப்படியென்றால் கடைமட்ட தொண்டன் என்ன செய்வான் பாவம்?
1996ல் தரைமட்டத்துக்குப் போன தன் கட்சி, ஐந்தே வருடத்தில் மீண்டும் 2001ல் ஆட்சிக்கு வந்த சந்தோசத்தில் தமிழ்நாடு முழுக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு தங்கள் தலைவியின் படத்தோடு படையெடுத்தான்.
1996-2001 வரை முதல்வராக இருந்த காரணத்தால் அப்படியான அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்தை கழற்றி வீசினான். வீசியதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் சல்லி சல்லியாக அடித்து நொறுக்கினான்.
அப்படி ஒருவன் அடித்து நொறுக்கியதில் 1996ல் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கப்பா அந்த வெற்றியின் நினைவாக தன்னுடைய காலத்தில் கட்டிய போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் தன் சொந்த செலவில் வைத்த படமும் ஒன்று.
2001 பேரூராட்சித் தேர்தலில் எங்கப்பா தோல்வி அடைந்துவிட...எங்கள் காத்திருப்பு தொடங்கிற்று.
2006ல் மீண்டும் திமுக ஆட்சி, பேரூராட்சி தேர்தலில் எங்கப்பாவும் வென்றார். சென்னையின் பிரபலமான, திமுக தலைவர்களின் பல புகழ்பெற்ற படங்களை வைத்துள்ள அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு நானே நேரில் சென்று ஒரு கலைஞர் படத்தை வாங்கி வைத்ததோடு...கூடவே வீட்டுக்கு ஒரே அளவிலான, ஒரே டிசைன் ஃபிரேமிலான கலைஞர் & தளபதி படங்களை வாங்கி வைத்தேன்.
2011ல் மீண்டும் ஆட்சி மாற்றம், மீண்டும் படம் மாற்றம். அப்போது தொடங்கி காத்திருப்பு 10 ஆண்டுகாலமாக நீண்டுவிட்டது. இதற்குள் ஜெயலலிதா சட்டத்தினால் தண்டனைக்குள்ளாக வேண்டிய முதல் குற்றவாளியாகி மரணித்துவிட்ட ஒரே காரணத்தால் சிறைக்கு போகாமல் தப்பித்தவறாகிவிட்டார்.
ஆயினும் 2016ல் அவர் உருவாக்கிய ஆட்சி சட்டத்துக்கு புறம்பான வழிகளில் தொடர்ந்தது. அடிமைகள் தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் கட்சித் தொண்டர்களின் முன் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் சட்டத்துக்கு புறம்பாக ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில், சட்டசபையில், அரசு விளம்பரங்களில் பயன்படுத்தினர்.
அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் பயன்தரவில்லை. வேறு யாரந்த இடத்திலிருந்தாலும் துள்ளி குதித்து சட்டத்தை நிலைநாட்டியிருக்க கூடிய நம்ம நீதிமன்றம் வழக்கு ஜெயலலிதா படத்துக்காக என்றதும் பம்மிவிட்டது. ஜெயலலிதா படங்களின் இருப்பு தொடர்ந்தது.
இந்நிலையில் தான் 2021 சட்டமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் நாளன்று அதிமுக அமைச்சர் திரு.பெஞ்சமின் அசிங்கசிங்கமாக பேசிய வீடியோ ஒன்று தமிழ்நாடு முழுக்க வைரலானதே நினைவிருக்கிறதா?
அந்த சண்டை நடந்த இடம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டம் 92. அதே 92வது வட்டத்தில் தான் இன்று நடந்த அம்மா உணவக சண்டையும்.
யாரிந்த பெஞ்சமின்?
2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களிலேயே ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பெறுமளவுக்கு தன்னுடைய சொத்து கணக்ககை காட்டிய பெரும் கோடீஸ்வரர்.
நின்றார்
வென்றார்
அமைச்சருமானார்
2021லும் அவரே மதுரவாயல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்.
பொருளாதார அளவீட்டில் அவருக்கு 100ல் 1 பங்கு கூட வர முடியாத சாமானியர் காரம்பாக்கம் க.கணபதி அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னும் பின்னும் தொகுதியில் அதிமுக சார்பாக பணம் ஆறாக ஓடியது.
தன்னையும், திமுகவின் கட்சி கட்டமைப்பையும், தான் ஊராட்சி மன்ற தலைவராக, மாநகராட்சி உறுப்பினராக இருந்த காலத்தில் ஈட்டிய நற்பெயரையும், திமுக தலைவர் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பையும் நம்பி தொகுதியை பம்பரமாக சுற்றினார் கணபதி.
தன்னுடைய தோல்வியை தவிர்க்க தன்னாலான எல்லா வழிகளிலும் முயன்ற திரு. பெஞ்சமின் தன்னுடைய ஆத்திரத்தை அடக்க முடியாமல் தான் தேர்தல் நாளன்று திமுக தொண்டர்களை நோக்கி வெடித்து வீடியோவில் சிக்கினார்.
ஆயினும் முறையாக வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வாங்கும் வரை எதுவும் உறுதியில்லை என்பது தானே யதார்த்த உண்மை.
சுமார் ஒரு மாதகால காத்திருப்புக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிந்து மதுரவாயல் தொகுதியில் இதுவரை இல்லாதளவு 30000 வாக்குகள் வித்தியாசத்தில் கணபதி அவர்கள் பெஞ்சமினை வீழ்த்தியது வரலாறு ஆனது.
தேர்தல் நாளன்று அமைச்சரிடம் வசவுகளை வாங்கிய கூட்டம் வென்ற களிப்பில் அமைச்சரின் தலைவியின் புகைப்படத்தின் மீது பாய்ந்துவிட்டது. அது வீடியோவாகி வைரலுமாகிவிட்டது.
Tit for Tat.
இந்த பின்னணி எதுவும் தெரியாமல், ஸ்மார்ட் ஃபோன் கையடக்கமாகிவிட்டதால் மட்டும் தினமும் அரசியல் பேசும் இணையத் தலைமுறை தங்கள் நடுநிலை மேட்டிமைத்தனத்தை காட்ட...திமுக மீதிருந்த வன்மத்தையெல்லாம் கொட்டி தீர்த்திருக்கிறது.
என்ன...அதான் ஆட்சி மாறிவிட்டதே! வழக்கம் போல அரசு அதிகாரிகளே ஊழல் குற்றவாளியின் படத்தை கழட்டி குப்பையில் வீசும் வரை பொறுமையாக காத்திருந்திருக்கலாம். இன்று கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்காது.
அவசரப்பட்டுட்டீங்களேப்பா!!!
உங்க அவசரத்தால் இன்று வைரலாகி தமிழ்நாடு முழுக்க பேசுபொருள் ஆக வேண்டிய செவிலியர் பணி நிரந்தர அறிவிப்பு மூலையில் முடக்கப்பட்டது தான் மிச்சம்.
இணைப்பிலிருப்பது 2006ல் இருந்து எங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் தலைவரும் தளபதியும்.
Shared
இது யாருடைய பதிவு ன்னு பேர் ஞாபகம் வரல.. ப்ளீஸ்

கருத்துகள் இல்லை: