செவ்வாய், 4 மே, 2021

தமிழகத்தில் மீண்டு வந்த காங்கிரஸ் கட்சி ... மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்தது .

M.K. Stalin proposes Rahul Gandhi for PM to defeat 'Fascist Nazist' govt -  Telegraph India

  Veerakumar - tamil.oneindia.comn :  சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன .
திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிதான்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே அக்கட்சிக்கு குறைந்த இடங்கள்தான் வழங்க வேண்டும் என்று பல முனையிலிருந்தும் குரல்கள் எழுந்தன.


காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களே முந்தைய தேர்தல்களில் அக்கட்சிகள் செயல்பாட்டை சுட்டிக்காட்டி குறைந்த இடங்கள் தந்தாலும் மனநிறைவு கொள்ள வேண்டும் எனக் கூறும் நிலை ஏற்பட்டது.
இதற்கு முக்கிய காரணம், அதற்கு முந்தைய 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்தான். திமுக கூட்டணியில் 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது . வெற்றி விகிதம் என்பது 19 விழுக்காடு மட்டுமே. கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது குறைந்த இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு மிச்ச இடங்களை திமுக இடமே வழங்கியிருந்தாலோ, திமுக கூட்டணி ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும் என்பது பெரும்பான்மை அரசியல் நோக்கர்கள் கருத்து.

கட்சி தலைவர்களை திருப்திப்படுத்த அதிக இடங்களைப் பெறும் காங்கிரஸ், அதில் வெற்றி வாய்ப்பை இழந்து கூட்டணிக்கும் பாரமாக இருப்பதாக பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் 40க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியானது . ஆனால் 25 தொகுதிகளில்தான் திமுக தலைமை தந்தது. இந்த விஷயத்தில் ஸ்டாலின் கறார் காட்டினார்.

25 தொகுதிகளை வாங்கிவிட்டு வேட்பாளர் தேர்வில் பெரும் குளறுபடியை இழுத்துவிட்டது அந்த கட்சி. இது திமுகவினரை எரிச்சலுக்குள்ளாக்கியது. சத்யமூர்த்தி பவன் பல போராட்டங்களுக்கு சாட்சியானது. ஒருவழியாக வேட்பாளர் தேர்வு நல்லபடியாக முடிந்தது. ஆனால், போட்டியிடும் 25 தொகுதிகளில், காங்கிரஸ் குறைவான தொகுதிகளில்தான் வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக, கூட்டணிக் கட்சிகளிலேயே, அதிக இடத்தை பிடித்துள்ளது காங்கிரஸ்தான். திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் வெற்றி விகிதமானது 67%, ஆனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களை வென்றுள்ளது. அதன் வெற்றி விகிதமானது 72 விழுக்காடாகும்.

இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் தனது செயல்பாட்டை துரிதமாக்க வழி பிறந்துள்ளதாக கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள். கடந்த லோக்சபா தேர்தலின் போதும் ராகுல் காந்தியா அல்லது நரேந்திர மோடி என்ற தேர்வு வரும் போது, தமிழக மக்கள் ராகுல் காந்திகாகத்தான் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டனர். ராகுல் காந்தி சென்னை வந்தபோது இளம்பெண்கள் அவருக்கு மிகுந்த உற்சாக வரவேற்பு வழங்கியதை கல்லூரி நிகழ்ச்சிகளில் பார்க்க முடிந்தது . ராகுல் காந்தியின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து இருப்பதுதான் காங்கிரஸின் புதிய எழுச்சிக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கருத்துகள் இல்லை: